நற்றிணை

இத்தொகை தொகுப்பித்தோன் – பன்னாடு தந்த மாறன் வழுதி
தொகுத்தோன் – அறியப்படவில்லை
400 பாடல்கள். சிறுமை 8 அடி உயர்வு 12 அடி
385 ம் பாடல் பிற்பகுதி மறைந்தது
234 ம் பாடல் என ஐயுறுவதும் கொடுக்கப்பட்டுள்ளது
56 பாடல்களின் ஆசிரியர் அறியப்படவில்லை
ஏனையவற்றின் ஆசிரியர்கள் 192
திணைக்குறிப்புகள் நூல் பதிப்பித்தோரால் அகம், கலி,
ஐங்குறுநூறு உள்ளதற்கு இணையாக காட்டப்பட்டுள்ளன.
எனினும் பாடல் விளக்க அடிக்குறிப்புகள் பழமையானதே.

கடவுள் வாழ்த்து

மா நிலம் சேவடி ஆக தூநீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக
விசும்பு மெய் ஆக திசை கை ஆக
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே

பாரதம் பாடிய பெருந்தேவனார்

நூல்

1 குறிஞ்சி - கபிலர்

நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறியலரே
தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்பு அறியலரே

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது