தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar, 7 பிப்பிரவரி, 1902 – சனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக, பெருஞ்சித்திரனாரால் “மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்” என்று அழைக்கப்பட்டார். “தமிழ், உலக மொழிகளில் மூத்ததும், மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழி”யென வாதிட்டவர். “கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது” என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.
ப.அருளி(17 சூன் 1950) என்பவர் சொல்லாய்வறிஞர் ஆவார். புதுச்சேரியில் பிறந்த இவர் வணிகவியல், சட்டம் பயின்றவர். பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோரின் கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தமிழ் வேர்ச்சொல் ஆய்வுகளில் புலமை பெற்றவர். தூய தமிழில் உரையாற்றுவதால் தமிழகத்திலும், அயல்நாடுகளிலும் புகழ்பெற்ற பேச்சாளராக விளங்குபவர். தமிழினத் தொண்டியக்கம் நிறுவி, குமுகத் தொண்டாற்றுபவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தூயதமிழ்- சொல்லாக்க அகரமுதலித் துறையின் தலைவராகப் பணிபுரிந்துள்ளார். இவர் 29 க்கும் மேற்பட்ட நூல்களையும் 250 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இயற்றியுள்ளார். நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக ஆய்வரங்கங்களில் ஆய்வுரைகளை வழங்கியுள்ளார்.
நா. கதிரைவேற்பிள்ளை (டிசம்பர் 21, 1871[1] – 1907) இலங்கைத் தமிழறிஞர். தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழகத்தில் தமிழ்ப் பணிக்கும், சைவப் பணிக்கும் தந்தவர். ‘தமிழ்த் தென்றல்’ திரு. வி. க. வைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கியவர். சதாவதானி எனப் போற்றப் பெற்றவர். சென்னை வாழ் தமிழறிஞர் பலருடைய வேண்டுகோளுக்கிணங்கத் தமிழ்ப்பேரகராதி எழுதி வெளியிட்டார். இதில் பல நூல்களில் இருந்து தொகுக்கப்பட புதிய சொற்களுக்கு உடுக்குறி இட்டுக் காட்டியுள்ளார்.
மணவை முஸ்தபா (பிறப்பு 15 சூன் 1935 – இறப்பு 06 பிப்ரவரி 2017) அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு அருப்பெரும் பணியாற்றிய தமிழ் அறிஞர். இவர் அறிவியல் தமிழ்த் தந்தை என்றும் அறியப்படுகிறார்.[1] அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டவர். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றியவர்.
பெ. மாதையன் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் தஞ்சை, தமிழ்ப்பல்கலைக்கழக அகராதித்துறை மற்றும் சேலம் ,பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஆகியவற்றில் பேராசிரியராகவும், அகராதித் தயாரிப்புகளில் பதிப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
டி. வி. சாம்பசிவம் பிள்ளை தமிழின் முதல் மருத்துவ அகராதியை வெளியிட்டவர். டி. வி. என்ற ஆங்கில முதலெழுத்துக்கள் தஞ்சாவூர் வில்வையா மன்னையார் என்ற அவரது தந்தை பெயரைக் குறிக்கின்றன. பெங்களூரில் 1880-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி பிறந்தார். சாம்பசிவத்தின் மருத்துவப் பின்னணி குறித்து முழுதும் தெரிந்திலது. இவர் காவல்துறையில் எழுத்தராய்ப் பணி தொடங்கி காவல்துறை ஓய்வாளராய்ப் பணி ஓய்வு பெற்றவர். இவர் எழுதிய Tamil English Dictionary of Medicine, Chemistry and Allied Sciences Based on Indian Medical Science என்ற அகராதி இவர் இறப்புக்குப் பின்னர் 4000 பக்கங்கள் உடைய தொகுதியாய் வெளியானது. இதில் 80,000 சொற்கள் இடம்பெற்றுள்ளன. 1953-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி தனது 73-வது வயதில் சாம்பசிவம் பிள்ளை மறைந்தார்.
கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் ஜான் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார் போப். ஜீயார்ஜ் யூக்ளோ என்பது போப்பின் இயற்பெயர். இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார். 1886 ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார். தமிழ் மீது பெரும் பற்று கொண்ட இவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். தூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். தமிழ் தவிர தெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். 1849 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட போப் பின் இங்கிலாந்து சென்றார்.
நவம்பர் 8, 1680 – பெப்ரவரி 4, 1747) இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் – கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709 ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப “தேம்பாவணி” என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார்.முத்துசாமிப் பிள்ளை வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை 1822இல் எழுதி, அந்நூலை அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1840 இல் வெளியிட்டார். மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரினை தைரியநாதசாமி என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதால் செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார். தமிழ் கற்க ஏதுவாக தமிழ் – லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ் – போத்துக்கீய அகராதியை உருவாக்கினார். சதுரகராதியை, நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டுவந்தார். திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர்இவர் பல மருத்துவ நூல்களை எழுதியுள்ளதாக குறிப்புள்ளது
முல்லை முத்தையா (7, சூன், 1920 – 2000) ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமை யாக்கப்பட்டுள்ளன. பழநியப்பர், மனோம்மணி தம்பதியினருக்கு மகனாக முத்தையா தேவக்கோட்டையில் பிறந்தார். 15 வயதில் இவரின் தந்தை பர்மாவில் நடத்திவந்த கடையைப் பார்த்துகொள்ள சென்றார். இரண்டாம் உலகப்போரின்போது நடந்தே தாயகத்துக்கு திருமிபினார். 1943 ல் முல்லை என்ற பதிப்பகத்தினை உருவாகி பாரதிதாசன், கோவை அய்யா முத்து போன்றோரின் நூல்களை வெளிட்டமையால் இயற்பெயரான முத்தையா என்பது முல்லை முத்தையா என்று வழங்கப்பெற்றது.
1901-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. 1902 முதல் ‘செந்தமிழ்’ என்னும் மாத இதழை வெளியிட்டுவருகிறது. பாண்டித்துரைத் தேவர் இதனைத் தோற்றுவித்தார். இது நான்காம் தமிழ்ச்சங்கம் எனப் போற்றப்படுகிறது. மதுரைச் செந்தமிழ்க் கல்லூரி இச்சங்கத்தின் கீழ் இயங்குகிறது. தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு அரும்பணி ஆற்றிவருகிறது. கு. கதிரவேற் பிள்ளையால் 1800 பக்கங்களில் 63900 சொற்களில், மூன்று பாகங்கள் கொண்ட தமிழ்ச் சொல் அகராதியை “தமிழ்ச் சங்க அகராதி” எனும் பெயரால் மறு பதிப்பாக, முதல் பாகம் 1910 இலும், இரண்டாம் பாகம் 1912 இலும், மூன்றாம் பாகம் 1923 இலும் மதுரைத் தமிழ்சங்கத்தாரால் அச்சிடப்பட்டன.
சென்னைப் பல்கலைக்கழக பேரகராதி என்பது சென்னைப் பல்கலைக்கழகத்தால் தொகுத்து வெளியிடப்பட்ட ஒரு தமிழ் அகராதி. இது 1920 களில் ஏழு தொகுதிகளாக வெளிவந்தது. முதல் பதிப்பில் 117,762 சொற்கள் இருந்தன. அப்பொழுது தமிழ் நாட்டில் வாழ்ந்த சாந்தலர் என்னும் ஆங்கில அறிஞர் இப்பேரகராதியை வெளியிடுவதற்கு ஒரு திட்டம் வகுத்துச் சென்னை அரசாங்கத்தார்க்கு அனுப்பினார். அவர்கள் அதனை ஆதரித்தார்கள். இந்திய நாட்டு அமைச்சர் அப்பணியின் அவசியத்தை உணர்ந்து நூறாயிரம் ரூபாய் செலவிட அனுமதியளித்தார். பேரகராதியின் பதிப்பாசிரியராகச் சாந்தலரே நியமிக்கப்பட்டார். ஒன்பது ஆண்டுகள் அவர் வேலை பார்த்தார் ; எழுபதாம் வயதில் ஓய்வு பெற்றார். அரசாங்கத்தார் குறித்தவாறு ஐந்து ஆண்டுகளில் அகராதி முற்றுப் பெறவில்லை; அதன் செலவு நூறாயிரம் ரூபாய் அளவில் நிற்கவும் இல்லை. அந்நிலையில் அரசியலாளர் கருத்துக்கிணங்கி அகராதியின் பொறுப்பையும் உரிமையையும் சென்னைப் பல்கலைக் கழகம் ஏற்றுக் கொண்டது. ஏறக்குறைய இருபத்தைந்து. ஆண்டுகளில் முற்றுப்பெற்ற பேரகராதி ஏழு பெருந்தொகுதியாகத் ‘தமிழ் லெக்சிக்கன்’ என்னும் பெயரோடு வெளியிடபட்டது.
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் (ஆகஸ்ட் 30, 1875 – ஜனவரி 22, 1947) பன்மொழிப் புலவர்; தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்தியம்பியவர்களுள் ஒருவர். இலத்தின், கிரேக்கம் முதலாய பதினெண் மொழிகளில் எழுதவும், பேசவும் வல்லவராய் இருந்தார். பல தமிழ் நூல்களின் ஆசிரியர். சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும்.இவர் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த மன்னர்களுள் ஒருவரான ஆறாவது பரராசசேகரனின் வழித்தோன்றலான இராசலிங்கம் சாமிநாதப் பிள்ளை, தங்கமுத்து இணையரின் மகனாக 30.08.1875 அன்று பிறந்தார். இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம் என்பதாம்.யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் கற்ற தமிழும் ஆங்கிலமும், எழுதுவினைஞராக கடமையாற்றிய போது கற்ற சிங்களமும், யாழ். குருமடத்தில் கற்ற இலத்தீன், பிரெஞ்சும் அவரை பல மொழிகளையும் கற்றிடத் தூண்டியது. மொழிகளுக்கிடையே ஒருவகை தொடர்பு இருப்பதைக் கண்டுணர்ந்த அவர், 72 மொழிகள் வரை கற்றுப் புலமை பெற்றார்.
ச. மெய்யப்பன் தமிழகப் பதிப்பாளரும் தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். இவர் பல தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் 36 ஆண்டுகளாகத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழகத்தில் தமிழுக்கென்று ஏறத்தாழ 40,000 நூல்களுடன் முதல் தனியார் ஆய்வகம் ஒன்றை சிதம்பரத்தில் அமைத்தவர். இவர் எழுதிய தாகூர் நூல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.குன்றக்குடி அடிகளார் இவருக்கு “தமிழவேள்” என்றும், தருமபுரம் ஆதீனத் தலைவர் “செந்தமிழ்க் காவலர்” என்றும் விருதுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.
காஞ்சி நாகலிங்க முனிவர், 24 அக்டோபர், 1865 – 09 ஜூலை, 1950காஞ்சிப்புரத்தில் சரவணப்பெருமாள் முதலியாருக்கும் மனோன்மனி அம்மையாருக்கும் மகனாக பிறந்தவர். சிறுவயதில் வீரசைவ கச்சபாலய ஐயரிடத்துத் தமிழ்க்கல்வி பயின்றனர். பிறகு சென்னையை அடைந்து அஷ்டாவதானம் பூவை கலியசுந்தர முதலியார் இடத்துத் தமிழ்க் கல்வியும் சாத்திரப்பயிற்சியும் நிரம்பப் பெற்றனர். இவருக்கு குமாரர் மூவரும் குமாரத்தி ஒருவரும் உளர். இவர் பல தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களை எழுதியுள்ளார். திருத்தணிகை வண்ண மஞ்சரி, தென் கடம்பன் பதிற்றுப் பத்தந்தாதி, வடபழனி மயிலேறு பெருமாள் மாலை இரட்டை மணி மாலை, திருவாமாத்தூர் வண்ணங்கள், திருவெறும்பியூர் புராணம் இவைகளை இயற்றியுள்ளார். சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கினையும் உரையுடன் ஒரு தொகுதியாகச் சேர்த்து வெளியிட்டார்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய ஜமீன்தார் பாண்டித்துரை தேவர் அவர்களின் வேண்டுகோளின் பேரில் முனிவர் சிவ ஞானபோத சிற்றுரை யினை வெளியிட்டார். 1911 – ல் தமிழ்மொழி அகராதி வெளியிட்டார் இந்நூல் பழமையான தமிழர் அகராதிகளில் ஒன்று. தாயுமானவர், பன்னிருதிருமுறை, காஞ்சி புராணம், காஞ்சி கட்டளைக் கலித்துறை புராணம், திருப்புகழ். சுந்தரர் தேவாரம் செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, காரனேஷன் தமிழ் அகராதி முதலிய பல புத்தகங்களை முனிவர் தொகுத்து வெளியிட்டார்
ஆய்வறிஞர் அப்பாதுரையார் எடுக்க எடுக்கக் குறையாத ஓர் அறிவுச் சுரங்கம்; பன்மொழிப் புலவர்; தென்மொழி தேர்ந்தவர்; யாரும் செய்ய முடியாத சாதனையாகப் பலதுறைகள் பற்றிய நூற்றுக் கணக்கான நூல்களைத் தமிழுக்குத் தந்தவர்; அகராதி தொகுத்தவர். கா.அப்பாதுரையார், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி என்னும் சிற்றூரில், காசிநாதப்பிள்ளை-முத்துலெட்சுமி அம்மாள் வாழ்விணையருக்கு 1907-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி பிறந்தார். காரைக்குடி, அமராவதி புதூர் குருகுலப் பள்ளியில் அப்பாதுரையார் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய போது, இவரிடம் கல்வி பயின்ற மாணவர் கவிஞர் கண்ணதாசன் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் அகராதித் தயாரிப்பில் 1959 முதல் 1965 வரை அதன் ஆசிரியராகப் பணி செய்தார். குமரிக்கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு, தென்னாட்டுப் போர்க்களங்கள், சரித்திரம் பேசுகிறது, சென்னை நகர வரலாறு, ஐ.நா.வரலாறு, கொங்குத் தமிழக வரலாறு முதலிய வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். அவரது “திருக்குறள் மணி விளக்க உரை’ என்ற தலைப்பில் அமைந்த நூல், ஆறு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. “உலக இலக்கியங்கள்’ என்ற நூலில், பிரெஞ்ச், சீனம், ருசியா, உருது, பாரசீகம், கன்னடம், தெலுங்கு, ஜெர்மனி, வடமொழி, கிரேக்கம் எனப் பத்து மொழிகளின் இலக்கியங்களை ஆராய்ந்து அரிய பல செய்திகளைத் தந்துள்ளார். இப்பன்மொழிப் புலவர் 1989-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.
இரேவணசித்தர் (16 நூற், பேரளம்) ஒரு தமிழ்ப் புலவர். இவரே அகர வரிசையில் தொகுக்கப்பட்ட முதல் நிகண்டு நூலானா அகராதி நிகண்டைத் தொகுத்தவர். இவர் சிவஞான தீபம், பட்டீச்சுர புராணம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
அகரவரிசையில் எழுந்த “அகராதி நிகண்டு” சொற்களை எளிதில் கண்டு, பொருள்கொள்வான் வேண்டி அமைக்கப்பட்டது. முதலெழுத்து மட்டும் அகர முதலி முறையில் எழுந்த முதல் நிகண்டு நூல் இதுவே ஆகும். இதனை இயற்றியவர் பேரளத்தில் பிறந்து ‘புலியூர்’ என்னும் சிதம்பரத்தில் வாழ்ந்த ‘இரேவணசித்தர்’ ஆவார். இந்நூல் கி.பி. 1594-ல் செய்யப்பட்டதாகத் தெரிவதால் இது படினாறாம் நூற்றாண்டதாகும்.
ஆ. சிங்காரவேலு முதலியார், ஒரு கல்வியாளர் மற்றும் கலைக்களஞ்சியத் தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் சமசுகிருத மொழிகளைப் படித்தவர். சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார். தமிழில் தோன்றிய முதற் கலைக்களஞ்சியங்களில் ஒன்றாகிய அபிதான சிந்தாமணி என்பதின் ஆசிரியர். ஆ. சிங்காரவேலு (1855 – நவம்பர் 1931சமசுக்கிருதத்தில் அகரவரிசைப்படி சொற்பொருள் கொடுத்திருக்கும் நூல் நிகண்டு எனப்படும். பத்தொன்பதாம் நூற்றாண்டு உரைநடை நூல். அபிதான சிந்தாமணியை 1890 ஆம் ஆண்டில் இவர் தொகுக்கத் தொடங்கினார். இதன் முதற்பதிப்பு மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910 ஆம் ஆண்டு 1048 பக்கங்களுடன் வெளிவந்தது. இரண்டாவது பதிப்பு 1634 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. சிங்காரவேலு முதலியார், உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியராக வேலை பார்த்துக்கொண்டு தன் அன்றாட அலுவல்களுக்கு மேல் நேரம் தேடி இந்தப் பெரும்பணியைச் செய்து முடித்தார். மனம்சோர்ந்த சிங்காரவேலு முதலியார் தன் நூலை தூக்கி போட்டுவிட்டு சலித்திருந்தார். நாலாவது மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவுனரும் பாலவநத்தம் சமீந்தாருமான பாண்டித்துரை தேவர் சிங்காரவேலு முதலியாரின் இரண்டாவது அறிக்கையைப் பார்த்து மதுரையில் இருந்து தேடிவந்து சிங்காரவேலு முதலியாரைப் பார்த்தார். அபிதான சிந்தாமணி கைப்பிரதியைப் பார்த்ததுமே பாண்டித்துரைத்தேவர் மிகமகிழ்ச்சி அடைந்தார். மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பில் அச்சிட்டு வெளியிட முன்வந்தார். இந்நூலில் இருவருக்கு தனியாக நன்றி சொல்கிறார் சிங்காரவேலு முதலியார். 1910ல் அபிதான சிந்தாமணியின் முதல் பதிப்பு வெளிவந்தது. பின்னர் அதில் விடுபட்டுபோன செய்திகளை குறித்துக்கொண்டே வந்த சிங்காரவேலு முதலியார் இரண்டாம் பதிப்பை தயாரித்துக்கொண்டிருக்கும்போதே 1932ல் மரணமடைந்தார். அதாவது 1890 முதல் கிட்டத்தட்ட நாற்பத்து இரண்டு வருடங்கள். ஒரு முழுவாழ்க்கையையே இதற்காகச் செலவிட்டிருக்கிறார்.
அதன் 11 ஆவது மறு அச்சு 2006ல் வெளிவந்ததுது
சுண்ணாகம் அ. குமாரசுவாமிப் புலவர் இலங்கையைச் சேர்ந்த புலவர் ஆவார். காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவர்களில் இவரும் ஒருவராவர்.யாழ்ப்பாணத்தில் சுண்ணாகம் என்ற ஊரில் பிறந்த குமாரசுவாமிப்புலவரின் தந்தை அம்பலவாணர் தமிழ் இலக்கிய இலக்கணங்களை தமது பெரிய தகப்பனாராகிய முத்துக்குமாரக் கவிராயரிடம் கற்றுத் தேறியவர். தென்கோவை குமாருடையார் மகள் சிதம்பராம்மை என்பவரை 1840 வைகாசி ஐந்தாம் நாள் திருமணம் செய்துகொண்டார். மூன்று மகவுகளை பெற்றனர். தமிழ்நாடு சென்று தமிழ் மற்றும் சைவத் தொண்டாற்றி விட்டு தாயகம் திரும்பிய ஆறுமுக நாவலருக்கு வெகு சிறப்பான வரவேற்பு விழா ஒன்றை யாழ்ப்பாண மக்கள் 1869 ஆம் ஆண்டு நடாத்தினர். இவ்விழாவில் புலவரவர்கள் நாவலர் பெருமானை முதலில் நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றார். இந்நட்பு நாவலரின் மறைவு வரை மிக நெருக்கமாக இருந்தது என்பதை, புலவர் நாவலர் மீது கூறிய சரமகவிகள் நன்கு விளக்கும். 1913ஆம் ஆண்டு சென்னை அரசு தமிழ் அகராதி ஒன்றைத் தொகுக்கும் பொருட்டு பாதிரியார் சாண்டிலர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழுவினர் அகராதியின் மாதிரி நகல் ஒன்றை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திற்கு அனுப்பினர். சங்கத்தினர் இதனை ஆராய்ந்து அறிக்கை வரையும் பொறுப்பை புலவரிடம் ஒப்படைத்தனர். 1901ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பொ. பாண்டித்துரைத் தேவர் புலவரின் திறமைகளைக் கேள்வியுற்று புலவரை சங்க உறுப்பினராக்கும் பொருட்டு 1902 அக்டோபர் 17 இல் கடிதம் மூலம் வேண்டியிருந்தார். 1909 ஆம் ஆண்டு புலவர் தமிழ்நாடு சென்ற போது தேவரினால் வரவேற்கப்பட்டு, சங்கப் புலவர்களுக்கு அறிமுகம் செய்து கௌரவிக்கப்பட்டார். சுரமும் வயிற்றுழைவு நோயும் வருத்த 1922 மார்ச்சு 23 அதிகாலை மூன்றரை மணியளவில் உயிர் துறந்தார்.