இலங்கைத் தமிழரின் பண்டைய கால நாணயங்கள்

இலங்கைத் தமிழரின் பண்டைய கால நாணயங்கள்

 

 

 

 

கலாநிதி பரமு.புஷ்பரட்ணம்

 

இலங்கைத் தமிழரின்

பண்டைய கால நாணயங்கள்

 

 

 

கலாநிதி பரமு . புஷ்பரட்ணம்

முதுநிலை விரிவுரையாளர்

வரலாற்றுத்துறை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். இலங்கை

 

 

 

 

 

 

பவானி பதிப்பகம்

யாழ்ப்பாணம்

2001

 

 

 

பொருளடக்கம்)

வாழ்த்துரை

அணிந்துரை

1. முன்னுரை – 1-7

2. இந்திய நாணயங்களும் இலங்கைத்

தமிழர்களும் 8-30

3. பிராமி எழுத்துப் பொறித்த தமிழர்

நாணயங்கள் 31-73

4. பண்டைய காலத்தில் தமிழ் மன்னர்கள்

வெளியிட்ட நாணயங்கள் 74-107

5. வடஇலங்கை அரசு கால நாணயங்கள் 108-139

6. நல்லூர் இராசதானி கால நாணயங்கள் – 140-159

7. நாணயங்களும் தமிழர் வரலாறும் 160-183

8. பின்னிணைப்பு 184-193

9. உசாத்துணை நூல்கள் 194-219

 

 

 

 

 

 

 

அடிக்குறிப்பு எண் ; xii

 

 

 

 

1. இந்திய நாணயங்களும்

இலங்கைத் தமிழர்களும்

மனித நாகரிக வரலாற்றில் நாணயங்களின் தோற்றம் புதிய கால கட்டத்தைக் குறித்து நிற்கின்றது. இதன் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் மிகையான உற்பத்தியும், வணிக வளர்ச்சியும் அடிப்படைக் காரணங்களாக அமைந்தன. மனிதன் தனது தேவை போக மிகுதியை மற்றவனுக்குக் கொடுத்து தனக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் வர்த்தகப் பரிவாற்று முறையால் பண்டமாற்று முறை தோன்றியது (Barter System). இப்பண்ட மாற்று முறை உலகத்தின் பல பாகங்களில் வணிகத்தின் தொடக்க காலத்திலிருந்து ஏற்பட்டன. இலங்கையில் இம்முறை பெருங்கற்காலப் பண்பாட்டுடன் ஏற்பட்டிருக்கலாம் என்பதை அப்பண்பாட்டில் பெறப்பட்ட தென்னிந்தியாவுக்குரிய சிலவகை மட்பாண்டங்கள், கல்மணிகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் உறுதிப்படுத்துகின்றன. இதற்கு மாற்றீடாக இலங்கையில் இருந்து முத்து, இரத்தினங்கள் பெறப்பட்டிருக்கலாம் என்பதனை கௌடலியனின் அர்த்த சாஸ்திரத்தில் வரும் குறிப்புக்கள் நினைவுபடுத்துகின்றன. இப்பண்டமாற்றின் இன்னொரு கட்ட வளர்ச்சியில் ஒவ்வொரு நாட்டிலும், வட்டாரத்திலும் எது மிகுதியாகக் கிடைக்கிறதோ அதை மையப்பொருளாகக் கொண்டு வர்த்தகம் நிகழ்ந்தது.

தென்னாசியாவைப் பொறுத்தவரை வர்த்தகத்தின் மையப் பொருளாகப் பசு விளங்கியது. இதில் பசுவுக்கு ஒரு விலை தீர்மானிக்கப்பட்டு அதன் பெறுமதிக்கு ஈடாக மற்றப் பொருட்கள் பெறப்பட்டன. பசுவுக்கு ஈடாக மற்றப் பொருட்கள் இருக்கும் போது, இம்முறை இலகுவாக இருந்தாலும் மற்றப் பொருட்களின் விலை குறைவாக இருக்கும் போது பண்டமாற்று முறையில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. இதனால் காலப்போக்கில் பசுவுக்குப் பதிலாக வேறு பொருட்களை வணிகத்தின் மையப் பொருளாகப் பயன்படுத்த மக்கள் விரும்பினர். இதன் காரணமாக காலத்திற்கு காலம் சோழிகள் (Cowrie Shells), குன்று மணிகள் என்பன பசுவுக்கு மாற்றீடான வணிகத்தின் மையப் பொருட்களாக மாறின. இவற்றிலிருந்தே காலப் போக்கில் பொன், வெள்ளி, செப்பு, ஈயம் போன்ற உலோகங்களில் வார்க்கப்பட்ட நாணயங்கள் தோற்றம் பெற்றன (Gupta 1969).

 

கல்வெட்டு, இலக்கியங்களில் நாணயங்கள்

ஆதிகாலத்தில் பண்டமாற்று முறையில் எழுந்த சிக்கல் நாணயத்தின் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்தது. அன்று தொட்டு பொருட்களின் அளவுகோலாக விளங்கும் நாணயங்கள் இன்று வரலாற்று ஆய்வில் முக்கிய மூலாதாரங்களில் ஒன்றாகக் கணிக்கப்படுகிறது. ஆனால் இந்நாணயங்கள் தென்னாசியாவில் எங்கே? எப்போது? எவ்வாறு? தோன்றின என்பதில் அறிர்களிடையே பொதுப்பட்ட கருத்தொற்றுமை காணப்படவில்லை. தெளிவான எடை, அளவு கொண்ட நாணயங்கள் சிந்துவெளி நாகரிக காலத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கு அங்கு கிடைத்த முத்தி ரைகளை அறிள்கள் சிலர் சான்றாதாரம் காட்டுகின்றார் (Davendra Handa 1985). ஆனால் சிந்துவெளி நாகரிக வீழ்ச்சிக்கும், பிற்கால நாகரிகத்தின் தோற்றத்திற்கும் இடையிலான தொடர்பை உறுதிப்படுத்த சான்றுகள் உறுதியாகக் கிடைக்கவில்லை. இந்நிலையில் சிந்து வெளி நாகரிக காலத்தில் நாணயங்கள் இருந்ததா? என்பதைத் திட்டவட்டமாகக் கூறமுடியாதிருக்கிறது. ஆனால் கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவில் பொதுவாக தென்னாசியாவில் பரவலாக நாணயம் புழக்கத்தில் இருந்திருக்கலாம் என்பதற்கு வடமொழி , பாளி, சிங்கள், தமிழ் இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் பல சான்றுகள் காணப்படுகின்றன. அவற்றின் பெயர்கள் மொழிக்கும், இடத்திற்கும் ஏற்ப பல பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டுள்ளன.

பாணினியின் அஷ்டயாயி என்னும் இலக்கண நூலில் கார்ஷாபணம், நிஷ்கா, சதமானம், பாதம், விம்சதிக, தரிம்சதிக, கானா ஆகிய நாணயங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன (Gupta 1969:6). இதில் கார்க்ஷாபணம் என்பது பொன், வெள்ளி, செப்பு போன்ற உலோகங்களால் ஆக்கப்பட்டன. அத்துடன் இந்நாணயங்களின் பின்னங்களைக் குறிக்க கார்ஷாபாண , அர்த்த கார்ஷாபாண, பாதகார்ஷாபண என்ற சொற்றொடர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நிஷ்கா என்பது உருவம் பொறித்த நாணயமாகும். இது ரூபா என்னும் சொல்லின் மூலம் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்நூலுக்குரிய பாணினியின் காலம் கிமு . 6-ஆம் நூற்றாண்டெனக் கணிக்கப்பட்டுள்ளதால் இக்காலத்தில் நாணயத்தின் வெளியீடு இந்தியாவில் இருந்ததெனக் கூறலாம் (Gupta 1969:6).

.

இலங்கையைப் பொறுத்தவரை நாணயங்களின் தோற்றம், வளர்ச்சி இந்திய நாணயங்களின் வரலாற்றோடு இணைந்த ஒன்றாகும். இலங்கையின் ஆரம்பகால நாணயங்கள் (முத்திரை நாணயங்கள்) இந்தியாவிலிருந்தே கொண்டுவரப்பட்டவையாகும். காலப்போக்கில் இலங்கையில் வெளியிடப்பட்ட நாணயங்கள் கூடப் பெரும் அளவுக்கு இந்திய நாணய மரபை அடியொற்றித் தோன்றியவையாகும். இதனால் இலங்கை வரலாற்று மூலங்களில் நாணயத்தைச் சுட்டும் பெயர்கள் பலவும் இந்தியாவின் பெயர்களோடு பெருமளவு ஒற்றுமை கொண்டு காணப்படுகின்றன. வடமொழியில் கார்ஷாபண என்ற சொல் இலங்கைப் பாளி நுால்களில் கஹவன எனவும் (M.VXX:3), கல்வெட்டுக்களில் கஹபநெ எனவும் (I.C. 1970:No.791), சிங்களத்தில் கஹவனு எனவும் (Codrington 1924:13) குறிப்பிடப்பட்டுள்ளது. கிமு. 2- ஆம் நூற்றாண்டுக்கு முன் அநுராதபுரத்தில் ஆட்சிபுரிந்த எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இடிந்துபோன தாது கோபுரத்தைத் திருத்தியமைக்க 1500 நாண யங்களைக் (கஹபண) கொடுத்தான் என மகாவம்சம் கூறுகிறது (MVXXI:11-13). இக்காலத்திலிருந்துதான் நாணயப் புழக்கம் இலங்கையில் ஏற்பட்டதற்கான செய்தி பெருமளவுக்கு இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட சொற்களோடு இலங்கையில் காலகஹபண ( kala Kahapana), சிசகஹபண (Sisakahapana), பத (pada), மசக (Masaha), ககநிக (Kakanika) போன்ற சொற்களும் நாணயத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் நாணயத்தின் உலோகத்தைக் குறிக்க அடக (adaha) (வெள்ளி), ஜதருபா (Jatarupa) (பொன்) போன்ற சொற்களும், நிறத்தை குறிக்க கரிசம் (Karisam) என்ற சொல்லும், எடைப் பெறுமதியைக் குறிக்க பத (Pada) என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளன (Codrington 1924:13). கொட்றிங்ரன் என்ற நாணயவியலாளர் இந்திய இலக்கியங்களில் நாணயத்தைக் குறிக்கப் பயன்படுத்தாத சில சொற்கள் இலங்கை வரலாற்று மூலங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் இலக்கியத்தில் காசு என்ற சொல்லால் நாணயம் குறிப்பிடப்படுகிறது. ஆனால் பல இடங்களில் இச்சொல் பிறபொருள் குறித்த சொல்லாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் வரும் பொன் செய்காசு (நற் 274:4), பொலங்காசு (குறுந் 67.4), மணிக்காசு (நற் 66:9) என்ற சொற்றொடர்கள் அணிகலன்களைக் குறிக்கின்றன. சில இடங்களில் உவமைப் பொருளாகவும், குற்றம் என்ற பொருளிலும் கையாளப்பட்டுள்ளது. காசு என்ற சொல்லோடு காணம், பொன், மணி போன்ற சொற்களும் தமிழ் இலக்கியத்தில் நாணயத்தைக் குறிக்கின்றன. அவற்றுள் காணம் என்பது பிற்காலத்தில் வழங்கப்பட்ட சொல்லாகும். இடைக்காலத் தமிழ்க் கல்வெட்டுக்களில் அக்கம், அச்சு, காசு, அன்றாடு நற்காசு, ஈழக்காசு, ஈழக்கருங்காசு, காணம், குளிகை, சின்னம், திரமம், பணம், பழங்காசு, பொன், ளடை, வராகன் போன்ற சொற்கள் நாணயத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன (பவானி 2000:133).

வரலாற்றாய்வில் இலங்கை நாணயங்கள்

ஒரு நாட்டின் வரலாற்றை ஆராய இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், வெளிநாட்டார் குறிப்புக்கள், நாணயங்கள், தொல்பொருள் சின்னங்கள் போன்றவை முக்கிய சான்றுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பண்டைய கால வரலாற்றை அறிய உதவும் நம்பகரமான வரலாற்று ஆதாரங்கள் என்ற வகையில் கல்வெட்டுக்களைப் போன்ற முக்கியத்துவத்தை நாணயங்களும் பெறுகின்றன. இவை இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்களைப் போன்று தொடர்ச்சியான, நீண்ட வரலாற்றைக் கூற உதவாவிட்டாலும் இவற்றிலிருந்து நாணயங்ஙகளை வெளியிட்ட மன்னனின் பெயர், வம்சம், காலம், அவர்கள் பின்பற்றிய மதம், வணங்கிய தெய்வம், தெய்வ வடிவங்கள், கலை, ஆட்சிமொழி, மொழிவளர்ச்சி, எழுத்து, எழுத்து வடிவம், பொருளாதாரம், ஆட்சிப் பரப்பு, உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகம் ஆகிய அம்சங்களை அறிந்து கொள்ளப் பெரிதும் உதவுகின்றன.

தென்னாசியாவில் நாணயங்களை வரலாற்றாய்வில் பயன்படுத்தும் கலையானது கிபி. 12-ஆம் நூற்றாண்டில் காஷ்மீரில் வாழ்ந்த கல்கணர் என்ற வரலாற்று ஆசிரியரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும் நவீன வரலாற்றாய்வில் அதன் உபயோகம் மிக அண்மைக்காலத்திலேயே உணரப்பட்டது. மறுமலர்ச்சிக் கால ஐரோப்பாவில் அழகியலை அடிப்படையாகக் கொண்டு நாணயங்கள் சேகரிக்கும் ஆர்வம் தோற்றம் பெற்றாலும் கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தான் அதன் முக்கியத்துவம் வரலாற்றாய்வில் உணரப்பட்டது. இம்முறை இந்தியாவிலும், இலங்கையிலும் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரித்தானியரால் கைக்கொள்ளப்பட்டது. இந்தியாவின் பண்டைய கால வரலாறு பற்றிய ஆய்வில் இன்று நாணயங்கள் தனியொரு துறையாக வளரும் நிலையை எட்டியுள்ளது. அந்நிலை இலங்கையில் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை .

19ஆம் நுாற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து இலங்கையில் கிடைத்த நாணயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. இதைத் தொடக்கி வைத்தவர்களில் ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தில் இலங்கை அரச சேவையில் உயர் பதவி வகித்த ஆங்லேயர்களுக்கு முக்கிய பங்குண்டு. முதன் முதலில் பிறின் செப் (Prensop1858) என்ற அறிஞர்தான் 1858 இல் இந்தியத் தொல்பொருள் பற்றிய தொகுப்பில் இலங்கையில் கிடைத்த பல்வேறு காலப்பகுதிக்குரிய நாணயங்கள் பற்றி ஆராய்ந்துள்ளார். இதில் யாழ்ப்பாண அரசு கால நாணயங்கள் உட்பட சில தமிழ் நாணயங்களுக்குரிய புகைப்படங்களை கட்டுரையில் பிரசுரித்துள்ள போதிலும் தமிழ் மொழியில் பயிற்ச்சியில்லாத காரணத்தால் அவற்றை அவரால் அடையாளப்படுத்த முடியவில்லை. ஏறத்தாழ இதே காலப்பகுதியில் தான் ராய் டேவிட் (Rays Danids1877), பெல் (Bell), வில்லியம் கைகர் (Wilhem Geiger) ஸ்ரில் (Stil) போன்ற அறிஞர்கள் இலங்கையின் பல வட்டாரங்களில் கிடைத்த பலவகை நாணயங்களை ஆராய்ந்து பல கட்டுரைகளை வெளியிட்டனர். இவற்றைத் தொடக்க காலத்தில் ஆராய்ந்த பலரும் ஐரோப்பியராக இருந்ததால் இவர்கள் இலங்கையில் கிடைத்த கிரேக்க, ரோம மற்றும் ஐரோப்பியர் கால நாணயங்களை ஆராய்வதில் கூடிய கவனம் செலுத்தினர்.

கி.பி.1885-இல் வடஇலங்கையில் முல்லைத்தீவில் கிடைத்த நாணயங்கள் பற்றி பாக்கரும் (Parkar 1981:461), கி.பி.1917- இல் கந்தரோடையில் கிடைத்த நாணயங்கள் பற்றி பீரிஸ்சும் (Pieris 1919:45-60) ஆராய்ந்ததைத் தொடர்ந்து இலங்கை நாணயங்கள் பற்றிய ஆய்வில் வடஇலங்கை நாணயங்களும் முக்கிய இடம்பெற்றன. இதற்கு கி.பி. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிவந்த Journal of Royal Asiatic Society, The Literary Register Burboim சஞ்சிகைகள் களமமைத்துக் கொடுத்தன. கி. பி. 1924- இல் கொட்றிங்ரனால் பிரசுரிக்கப்பட்ட The ceylon coins and currency என்ற நூல் இலங்கை நாணய வரலாறு பற்றிக் கூறும் முதல் நூலாகும் (Codrington 1924). இதுபோன்ற ஒரு நூல் இதுவரை இலங்கை நாணயங்கள் பற்றி வெளிவரவில்லை. காலங்கடந்த இந்நூலில் பல குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதிலும் பிற்காலத்தில் நாணயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கெல்லாம் இந்நூலே அடிப்படை மூலாதாரமாக விளங்கியது என்பதில் சந்தேகமில்லை. இந்நூலில் சிங்கள் மன்னர்கள் மற்றும் வடஇலங்கையில் கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்குப் பின் ஆட்சிபுரிந்த தமிழ் மன்னர்கள் வெளியிடப்பட்ட நாணயங்கள் உட்பட நாணயங்களின் தோற்றம், வளர்ச்சி, வரலாறு, உள்நாட்டு, வெளிநாட்டு நாணயங்கள், அவை காணப்பட்ட இடங்கள், அவற்றின் காலம், வம்சம், நாடு போன்ற அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

அண்மைக் காலங்களில் பெருமளவு நாணயங்கள் அகழ்வாய்வின் போதும், மேற்படை ஆய்வின் போதும் பெறப்பட்டன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு பரணவிதானா, ஸ்ரீசோமா , அமரசிங்கா , வேல் புறி (Wolbury), சிறிப் (Cribe) குணசேகர, குலத்துங்கா போன்ற அறிஞர்கள் ஆய்வை மேற்கொண்டனர் (Bopearachchi 1998:1Z-XIII). இவ்வாய்வுகள் பெரும்பாலும் குறிப்பிட்ட இடத்தின் அல்லது குறிப்பிட்ட ஒருகாலத்திற்குரிய நாணயங்கள் பற்றிய ஆய்வாகவே இருந்தன. அண்மையில் வீரக்கொடி, பொபி ஆராய்ச்சி பதிப்பில் வெளியான நூலும் (Bopearachchi and weerakkody 1998), பொபி ஆராய்ச்சி , ராஜவிக்கிரமசிங்கே இணைந்து எழுதிய நுாலும் (Bopearachchi and wickremaesimile, Rajah 1999) கொட்றிங்ரன் நூலுக்குப்பின் இலங்கை நாணய வரலாற்றைக் கூற எழுந்த முக்கிய நூல்களாகக் கூறப்படுகின்றன. இவற்றில் நாணயங்களின் தோற்றம், வளர்ச்சி இலங்கையில் கிடைத்த உள்நாட்டு, வெளிநாட்டு நாணயங்கள் என்பன பற்றிக் குறிப்பி டப்பட்டுள்ளன. அத்துடன் அண்மைக்கால அகழ்வாய்வில் பெறப்பட்ட நாணயங்களைக் கொண்டு புதிய காலக் கணிப்பும் கொடுக்கப் பட்டுள்ளது. ஆயினும் கொட்றிங்ரன் நூலோடு ஒப்பிடுகையில் இந்நுால்கள் இலங்கையில் கிடைத்த நாணயங்கள் பற்றி விரிவான தரவுகளையோ அல்லது அவற்றின் வரலாற்றையோ முழுமையாகத் தருவதாகக் கூறமுடியாதிருக்கிறது.

 

வரலாற்றாய்வில் வடஇலங்கை நாணயங்கள்

பொதுப்பட இலங்கையில் கிடைத்த நாணயங்கள் குறித்து ஆராயப்பட்ட அதே வேளையில் தமிழ் அறிஞர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் வட்டார அடிப்படையில் வடஇலங்கையில் கிடைத்த நாணயங்களை ஆராயும் மரபு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்குத் தமிழர்கள் பண்டு தொட்டு இங்கு வாழ்ந்து வருவதும், 13 ஆம் நுாற்றாண்டிலிருந்து தமிழ் அரசால் இவ்வட்டாரம் ஆட்சி செய்யப்பட்டதும் காரணமாக இருக்கலாம். 1971 இல் பேராசிரியர் இந்திரபாலா, பேராசிரியர் சிவசாமி, இன்றைய தினக்குரல் பத்திரிகையின் பிரதம பதிப்பாசிரியர் சிவநேசச்செல்வன் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத் தொல்லியல் கழகம், நாணயங்களைக் கண்டுபிடிக்கவும் அவற்றை இக்கழகத்தின் வெளியீடான பூர்வகலா என்ற சஞ்சிகையில் வெளியிடவும் களமமைத்துக் கொடுத்தது. இதற்கு பேராசிரியர் சிவசாமியால் வெளியிடப்பட்ட யாழ்ப்பாணத்தில் கிடைத்த நாணயங்கள் தொடர்பாக இச்சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரைகளைக் குறிப்பிடலாம். ஆயினும் அதன் குறுகிய கால தீவிர வளர்ச்சி மிகக் குறுகிய காலத்திலேயே மறைந்து விட்டது.

இவ்வட்டாரத்தில் தென்னாசியாவில் பயன்படுத்தப்பட்ட முத்திரை நாணயங்கள் (Punch Marks coins) தொட்டு ஐரோப்பியர் ஆட்சிக்காலம் வரையிலான பல வகை நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை வல்லிபுரம், நாகர்கோயில், புலோலி , மட்டுவில், மானிப்பாய், பண்டத்தரிப்பு, தெல்லிப்பளை , தொல்புரம், வட்டுக்கோட்டை, அல்லைப்பிட்டி, மண்கும்பான், நாரந்தனை, புங்குடுதீவு, ஆனைக்கோட்டை, நல்லூர், பூநகரி, மாதோட்டம், வரணி, கச்சாய், உடுத்துறை, முல்லைத்தீவு போன்ற இடங்களிலிருந்து பெறப்பட்டன (சிவசாமி 1974:26-36, புஷ்பரட்ணம் 2000).இவற்றுள் கந்தரோடை, வல்லிபுரம், பூநகரி, மாதோட்டம் ஆகிய இடங்களில் ஆதிகால , இடைக்கால நாணயங்கள் எண்ணிக்கையில் அதிகமாகப் பெறப்பட்டன.

 

வடஇலங்கையில் தமிழ் அரசுகள் தோன்றுவதற்கு சாதகமாக இருந்த காரணங்களை ஆராய்ந்த முதலியார் இராசநாயகம் (Rasanayagam 1926), சுவாமி ஞானப்பிரகாசர் (Gnana prakasar 1930), பேராசிரியர் இந்திரபாலா (1972), பேராசிரியர் பத்மநாதன் (Pathmanathan 1978, 1980) போன்றோர் அதற்கு வடஇலங்கையில் கிடைத்த நாணயங்களையம் ஒரு சான்றாதாரமாகப் பயன்படுத்தியுள்ளனர். ஆயினும் இந்த ஆய்வில் மத்தியகால நாணயங்கள் கூடிய அளவுக்கு முதன்மைப்படுத்தி ஆராய்ந்த அளவுக்கு முற்பட்ட கால நாணயங்கள் ஆராயப்படவில்லை. மாதோட்டத்தில் கிடைத்த மூன்று வகை நாணயங்களை ஆராய்ந்த சாசனவியல் அறிஞர் மகாதேவன் அவற்றை அரிய நாணயங்கள் எனக் குறிப்பிட்டு யாழ்ப்பாண மன்னர்கள் சேது மொழி பொறித்த நாணயங்களுடன் வேறு பல நாணயங்களையும் வெளியிட்டிருக்கலாம் என்ற கருத்தை ஏற்படுத்தினார் (Mahadevan 1970). பேராசிரியர் சிவசாமியின் (1974) யாழ்பாணக்காசுகள், திரு. கிருஷ்ணராஜாவின் (1983:71-83) யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிடைத்த நாணயங்கள் என்ற ஆய்வுக் கட்டுரைகளும், திரு. சேயோனின் (Seyone 1998) இலங் கையில் கிடைத்த பண்டைய கால நாணயங்கள் என்ற நுாலும் வடஇலங்கையின் பண்டைய கால நாணயப் பயன்பாட்டை வட்டார அடிப்படையில் கூற எழுந்த ஆய்வுகள் எனக் குறிப்பிடலாம். அவற்றில் ஆதிகாலம் தொடக்கம் ஐரோப்பியர் காலம் வரையுள்ள நாணயங்கள் நாடு , வம்சம், மன்னன், காலம் என்ற அடிப்படையில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கலாநிதி இரகுபதியின் (Ragupathy 1997) புராதன யாழ்ப்பாணக் குடியேற்றம் பற்றிய தொல்லியல் நூலில் ஆசிரியர் தான் மேற்கொண்ட அகழ்வாய்விலும், கள ஆய்விலும் கண்டெடுத்த நாணயங்களைக் குறிப்பிட்டு அவற்றின் காலம், வரலாற்று முக்கியத்துவத்துவம் போன்வற்றை விளக்கியுள்ளார். பேராசிரியர் சிற்றம்பலம் எழுதிய யாழ்பாணத்தின் தொன்மை வரலாறு என்ற நூல் வடஇலங்கையில் கிடைத்த நாணயங்களை அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய அம்சங்களோடு தொடர்புபடுத்தி ஆராய்வதாக உள்ளது (1993).

மேற்கூறப்பட்ட ஆய்வுகள் வடஇலங்கை வரலாறு பொறுத்து பலவகையில் முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கை வரலாற்று ஆய்வில் வடஇலங்கையின் வரலாறு நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இங்கு முத்திரை நாணயங்கள் தொட்டு ஐரோப்பியர் காலம் வரையான நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இவ்வட்டாரத்தின் ஆதிகால, இடைக்கால வரலாற்றை அறிந்துகொள்ள ஓரளவு உதவுகின்றது. இங்கு கல்வெட்டுக்களைப்போல் அல்லாது நாணயங்கள் பரந்துபட்ட இடங்களில் பல்வேறு காலப்பகுதிக்குரியனவாகக் கிடைத்துள்ளன. நாணயங்களிலிருந்து காலம், வம்சம், நாடு போன்ற அம்சங்களை அறிய முடிவதால் இவற்றின் மூலம் இவ்வட்டாரத்தின் தொடர்ச்சியான வரலாற்றை மதிப்பிட முடிகிறது. வரலாற்றிலக்கியங்களில் வடஇலங்கை வரலாறு பற்றி குறைந்தளவு தகவல்கள் கூடக் காணப்படவில்லை . இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளும் (Excavations), மேற்படை ஆய்வுகளும் (Eplorations) ஒருசில ஆதிக்குடியிருப்பு மையங்களை அடையாளம் காண உதவியபோதிலும் அவை இப்பிரதேச மக்களது பாரம்பரிய வரலாற்றை காலநிரைப்படுத்திக் கூற உதவவில்லை. இத்தகைய வரலாற்று இடைவெளியை நிரப்ப இங்கு கிடைத்த நாணயங்கள் பெருமளவுக்கு உதவாவிட்டாலும் நாணயங்களின் காலத்தைக் கொண்டு மக்கள் வாழ்ந்த கால வரலாற்றைத் தொடர்ச்சியாக இனங்காண முடிகிறது. நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட இடங்களைக் கொண்டு இவ்விடங்களுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே இருந்திருக்கக் கூடிய அரசியல், பொருளாதார, வர்த்தக பண்பாட்டு உறவுகளைப் பெருமளவு இனங்காண முடிகிறது. வடஇலங்கையில் கிடைத்த ஆதிகால நாணயங்களில் தொகையிலும், வகையிலும் வெளிநாட்டு நாணயங்கள் அதிகமாகும். இவற்றின் மூலம் வடஇலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பில் வெளிநாட்டு வர்த்தகம் பெற்ற முக்கியத்துவத்தை உணரமுடிகிறது.

அண்மைக் காலங்களில் இந்நூலாசிரியர் வடஇலங்கையில் மேற்கொண்ட கள ஆய்வின் போது கண்டெடுத்த உள்நாட்டு, வெளிநாட்டு நாணயங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதிய கட்டுரைகளும் (1998, 1999 அ , 1999ஆ, 1999இ. 2000), ஆய்வு நூலும் (2000) தென்னிந்தியத் தமிழர்கள் போல் இலங்கைத் தமிழர்களும் பண்டு தொட்டு நாணயங்களை வெளியிட்டு வந்துள்ளனர் என்ற புதிய கருத்தைச் சான்றாதாரங்களுடன் கூறுவதாக அமைந்துள்ளன. ஆயினும் நாமும், பிறரும் இதுவரை ஆய்வுக்கு உட்படுத்திய நாணயங்களை விட எண்ணிக்கையில் அதிகமான பலவகை நாணயங்கள் தமிழ் வரலாற்று ஆர்வலரான திரு. கலைஞானி, ஆசிரியர்களான திருவள்ளுவர், பொன்னம்பலம் மற்றும் சிலரால் கள ஆய்வின் மூலம் வட இலங்கையில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. இந்நாணயங்கள் இதுவரை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. வட இலங்கையில் அரச அதிகாரியாகக் கடமையாற்றிய திரு. சேயோன் அரிய பல நாணயங்களைக் கண்டுபிடித்து அவற்றுள் சிலவற்றை கட்டுரைகளாகவும், நுாலாகவும் வெளியிட்டுள்ளார். ஆனால் அவர் இங்கு கிடைத்த நாணயங்களில் பெரும்பாலானவை சிங்கள மன்னர்களும், தமிழ் நாட்டு வம்சங்களும் வெளியிட்டவை என்ற ஆழமான கருத்தைக் கொண்டிருந்ததால் அரிய பல நாணயங்களை அடையாளம் காண்பதிலும், வகைப்படுத்துவதிலும் சில தவறுகள் ஏற்பட்டுள்ளன என்பதை அண்மையில் அவர் வெளியிட்ட நுாலில் அவதானிக்க முடிகிறது (Seyon 1998). இந்நாணயங்களின் தனித் தன்மை வட்டார அடிப்படையில் அல்லது கால அடிப்படையில் சரிவர ஆராயப்படுமானால் வடஇலங்கைத் தமிழர் வரலாற்றோடு அங்கு வாழ்ந்த, வாழ்ந்து வருகின்ற மக்களுக்குள்ள உறவும், தொடர்பும் மேலும் துலக்கம் பெறும்.

வரலாற்றாய்வில் தமிழர் நாணயங்கள்

இலங்கைத் தமிழர் வரலாற்றை தென்னிந்தியாவின் தென்பகுதியுடன் சிறப்பாகத் தமிழ் நாட்டுடன் தொடர்பு படுத்தி ஆராயும் மரபு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கு இனம், மொழி, எழுத்து, மதம், கலை, பண்பாடு போன்ற அம்சங்களில் இரு நாட்டு மக்களிடையேயும் காப்படும் பொதுவான ஒற்றுமைத் தன்மை காரணமாகும். இந்த ஒற்றுமைக்கு இலங்கை மீதான தமிழகத்தின் செல்வாக்கும் ஒரு காரணம் என்பதை இரண்டாயிரம் ஆண்டு களுக்கு குறையாத இலங்கை தமிழக உறவின் பின்னணியில் கண்டு கொள்ளலாம். இலங்கைத் தமிழரைப் போல் கி.பி. 14ஆம் நுாற்றாண்டு வரை தமிழ் நாட்டுக்கென ஒரு வரலாற்று மரபு இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அங்கு பிற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள், கள ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட தொல்லியல் சின்னங்கள், கல்வெட்டுக்கள், நாணயங்கள், கட்டிட சிற்பங்கள் தமிழ்நாட்டு மக்களின் தொன்மையையும், பெருமையையும் வெளிப்படுத்த உதவின. இது போன்ற ஆய்வுகள் இலங்கைத்தமிழரை மையமாகக் கொண்டு இலங்கையில் மேற்கொள்ளப்பட்டதெனப் பெருமைப்பட வாய்ப்பில்லை. ஆனால் இலங்கைத் தமிழர் தொர்பாக ஆங்காங்கே கிடைத்த சான்றுகளை தமிழகத் தொல்லியல் சான்றுகளுடன் தொடர்புபடுத்தி இலங்கைத்தமிழரின் பூர்வீக வரலாற்றை அறிய தமிழக ஆய்வுகள் காரணமாக இருந்தன எனக் கூறிக்கொள் வதில் பெருமையுண்டு. இதன் அடிப்படையிலேயே இலங்கையின் ஆதிக்குடியேற்றம் தொடர்பான தொல்லியல் சின்னங்கள், கல்வெட்டுக்கள் மற்றும் பண்பாடு தொடர்பான சான்றுகள் ஆராயப்பட்டு வந்துள்ளன.

தமிழ்நாட்டு மக்களின் பண்பாட்டில் பொதுப்பட்ட ஒற்றுமைத் தன்மை காணப்பட்டாலும் காலம், வம்சம் , வட்டாரம், பிரதேசம் என்ற அடிப்படையில் சில தனித்துவமான அம்சங்கள் தோன்றி வளர்க்கதைக் காணமுடிகிறது. ஆனால் இலங்கைத் தமிழர் வரலாற்றை ஆறாய்ந்த பலரும் தமிழகத்தைப் போல் இலங்கையில் பண்டு தொட்டு வாழ்ந்து வரும் தமிழருக்கு பிரதேசரீதியான சுதேச வரலாற்று மாடி தனித்துவம் இருந்திருக்கும் என்பதை மனக்கருத்தில் கொள்ளாது பாளி இலக்கியங்கள் ஒப்புவித்த இரண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றுப் பாரம்பரியத்தின் தாக்கத்தாற் போலும் தமிழகத்துடன் ஓற்றுமை கொண்டுள்ள சான்றுகளை மட்டுமே இலங்கை தமிழருக்குரிய சான்றாக பார்த்து வந்துள்ளனர். ஆனால் இவ்வரலாற்றுப்பார்வை மறு ஆய்வு செய்ய பட வேண்டும் என்பதற்கு இலங்கை, தமிழக இருபக்க உறவு தொடர்பாக அண்மைகால அகழ்லாய்வில் பெறப்பட்ட தொல்லியல் சின்னங்கள் விளக்குகின்றன. இதற்கு இலங்கைத் தமிழர்கள் வெளியிட்ட நாணயங்கள் சிறந்த எடுத்துக்காட்டாக்கும்.

இலங்கையில் கிடைத்த கணங்களை உள்நாட்டு,வெளிநாட்டு நாணயங்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். இதில் இந்திய, கிரேக்க, ரோடி, அரேபிய சீன மற்றும் போத்துக்கேய, டச் மற்றும் ஆங்கிலேய நாணயங்கள் வெளினாட்டிலிருந்து இலங்கைக்கு எந்தவை. இவற்றுள் இந்தியா சிறப்பாக தமிழக நாணயங்கள் வகையிலும் தொகையிலும் அதிகமாகக் கிடைத்துள்ளன. உள்ளட்டில் வெளியிடப்பட்ட னணயங்களில் கி.பி.13-ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 1619 க்கும் இடையில் உடஇலங்கையில் ஆட்சி புரிந்த தமிழ் மண்ணர்கள் வெளிவிட்ட சேது எனும் பெயர் பொறித்தண்ணங்கனைத் தவிர ஏனைய காணயங்கள் சிங்கள மன்னர்களால் வெளியிடப் பட்டதென்ற கருத்து ஆகலையர் ஆட்சக்ணம் தொட்டு தற்காண் வரை நிலவுகிறது. இதற்கு பௌத்த சிங்கள் மக்களோடு தொடர்புடைய பெயர்கள், குலக்குறியீடுகள், சின்னங்கள் போன்றவை சான்றாகக் காட்டப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் கொட்றிங்ரன் கி.பி 2ஆம் நூற்றாண்டிலிருந்து சிங்கள மன்னர்கள் நாணயங்களை வெளியிடத் தொடங்கியிருக்கலாம் எனக் கருதுகிறார் (1924:24). அண்மைக்காலத்தில் இதன் காலம் மேலும் முற்பட்டதாக இருக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது (Bopearachchi 1999)

சில நாணயங்களில் இடம் பெற்றுள்ள சின்னங்கள், குறியீடுகள் போன்றனவற்றின் அடிப்படையில் இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பாக்கர் என்ற ஆங்கிலேய நாட்டவர் சிலவகை நாணயங்களை தமிழகத்திலிருந்து வந்து இலங்கையில் ஆட்சி நடத்திய எல்லாளன் போன்ற தமிழ் மன்னர்கள் வெளியிட்டிருக்கலாம் எனச் சூசகமாகத் தெரிவித்திருந்தார் (Parkar;1981). ஆனால் அவர் கருத்தை யாரும் இதுவரை கவனத்தில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. மாறாக இலங்கையில் கிடைத்த கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் நாணயங்கள் அனைத்தும் தமிழ் நாட்டிலிந்து வந்ததென்ற கருத்தையே வலியுறுத்தினர். இந்நிலையில் சிங்கள மொழியில் அல்லது சமஸ்கிருத மொழியில் சிங்கள மன்னர்கள் நாணயங்களை வெளியிடுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இலங்கைத் தமிழர் தமிழ் மொழியில் நாணயங்களை வெளியிட்டனர் எனக் கூறமுடிகிறது (புஷ்பரட்ணம் 2000). இதற்கு நாணயங்களின் வடிவமைப்பு அவற்றில் இடம்பெற்றுள்ள பெயர்கள், சின்னங்கள், பயன்பாட்டிலிருந்த இடங்கள் என்பவற்றை தமிழ் நாட்டில் கிடைத்த நாணயங்களுடன் ஒப்பிட்டு ஆராய்வது அவசியமாகும். அதற்கு தமிழகத்திலும் இலங்கையிலும் கிடைத்த தமிழ் நாணயங்கள் தொடர்பாகத் தமிழகப் பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளையும், கருத்துக்களையும் சுட்டிக் காட்டுவது இலங்கையில் கிடைத்த சிலவகை நாணயங்களின் தோற்றத்தை அடையாளம் காண இலகுவாக இருக்கும்.

பண்டமாற்று முறை நிலவிய பண்டைய தமிழகத்தில் நாணயங்கள் புழக்கத்தில் இருக்கவில்லை என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வந்த அதேகாலகட்டத்தில் சங்க காலம் தொட்டு முவேந்தர்களும், குறுநில மன்னர்களும் நாணயங்களை வெளியிட்டு வந்துள்ளனர் என்ற கருத்து நேரடியாகவும், மறைமுகமாகவும் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. இக்கருத்தை உறுதிப்படுத்துவதாக அண்மைக் காலக் கண்டுபிடிப்புகள் விளங்குகின்றன. இதற்கு முன்னோடியாகத் தமிழக நாணயங்கள் தொடர்பான முக்கிய ஆய்வுகளைக் குறிப்பிடலாம்.

தமிழக நாணயங்கள் பற்றி விரிவாக ஆராய்ந்த முதல் ஆய்வு என்ற வகையில் 1858இல் Madras Journalof Literature and Science என்ற சஞ்சிகையில் ஆங்கிலேய நாட்டவரான வால்டர் எலியட் என்பவர் (Elliot 1858:220-249,74-99) எழுதி வெளியிட்ட Numismatic Gleaning என்ற விரிவான இரு தொடர் கட்டுரைகளும், 149 நாணயங்களுக்குரிய புகைப்படங்களும் விளங்குகின்றன. இக்கட்டுரைகளில் பல்வேறு காலப்பகுதிக்குரிய தமிழர் நாணயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் சங்க காலப் பாண்டியர், சேரர், சோழர், மலையமான் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவற்றைச் சங்கால நாணயங்கள் என ஆசிரியர் குறிப்பிடாவிட்டாலும் தமிழகத்தின் தொன்மையான பெளத்த நாணயங்கள் எனக் குறிப்பிடத் தவறவில்லை . இதே ஆசிரியர் 1886இல் வெளியிட்ட தென்னிந்திய நாணயங்கள் என்ற நூல் தமிழ் நாணயங்கள் பற்றிய ஆய்வில் புதிய காலகட்டத்தின் தொடக்கத்தை குறித்து நிற்பதாகக் கூறினால் மிகையாகாது. இந்நூலில் பல்லவ , சோழ, பாண்டிய நாணயங்களுக்குரிய புகைப் படங்களைப் பிரசுரித்ததுடன் அவை பற்றியும் விரிவாக ஆராய்ந்துள்ளார். அத்துடன் இலங்கையில் கிடைத்த சில தமிழ் நாணயங்ஙகளுக்குரிய புகைப்படங்களைப் பிரசுரித்திருப்பதுடன் அவை பற்றியும் ஆராய்ந்துள்ளார். தமிழ் நாணயங்களை அடையாளம் காண்பதில் இவர் விட்ட தவறுகளைப் பிற்கால நாணயவியலாளர்கள் சுட்டிக் காட்டிய போதிலும் அவரது ஆய்வுகளே பிற்கால ஆய்வுகளுகெல்லாம் அடிப்படையாக அமைந்த தென்பதில் சந்தேகமில்லை.

வால்டர் எலியட்டின் ஆய்வைத் தொடர்ந்து தமிழக நாணயங்கள் தொடர்பாக வெளிவந்த முக்கிய ஆய்வாக பினல் என்ற ஆங்கில நாட்டவரது ஆய்வைக் குறிப்பிடலாம். இவர் 1886 87 காலப்பகுதியில் Madras Journal of Literature and Science என்ற சஞ்சிகையில் Hints to Coins- Collectors in South India என்ற விரிவான இரு கட்டுரைகளை வெளியிட்டார். முதலாவது கட்டுரைத் தொகுப்பில் தென்னிந்தியாவில் கிடைத்த தமிழக மற்றும் இலங்கை மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் பற்றிப் பொதுப்படக் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் மதுரையில் கிடைத்த சங்க காலப் பாண்டிய நாணயங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவரும் வால்டர் எலியட்டைப் போல் இவற்றைச் சங்க கால நாணயங்கள் எனக் குறிப்பிடாது மிகத் தொன்மையான பௌத்த நாணயங்கள் என்றே குறிப்பிட்டுள்ளார் (Tufnell 1886-1887:33-137). இதே சஞ்சிகையில் ஜேம்ஸ் எழுதிய பாண்டிய நாணயங்கள் என்ற கட்டுரை பல வகையில் முக்கியத்துவம் பெறுகிறது (James1887-88:138-144). இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் நாணயங்களில் பெரும்பாலானவை இலங்கையிலும், தமிழகத்திலும் கிடைக்கப்பெற்ற பிற்காலத்திற்குரிய நாணயங்களாகும் (கி. பி. 10ஆம் 12ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட் டவை). இலங்கையில் கிடைத்த நாணயங்கள் தமிழகத்தில் கிடைத்த நாணயங்களிலிருந்து வேறுபடுவதால் அவற்றை இலங்கைக்குரிய நாணயங்கள் எனக் குறிப்பிடாது இலங்கை நாணய வகையைச் சேர்ந்த (Ceylon type coins) பாண்டிய நாணயங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

1888இல் லோவன்தால் பாதிரியார் வெளியிட்ட தின்னவேலி நாணயங்கள் என்ற நுாலும் (Loventhan 1888), 1933இல் திருச்சியைச் சேர்ந்த சர். டி. தேசிகாச்சாரியார் வெளியிட்ட தென்னிந்திய நாணயங்கள் என்ற நூலும் தமிழ் நாணயங்கள் பற்றிய ஆய்வில் இன்னொரு படிமுறை வளர்ச்சியைக் காட்டுகின்றன (Desikachary1933). இந்நூல்களில் சங்க காலம் தொட்டு பிற்காலத் தமிழ் மன்னர்கள் வெளியிட்ட ராணயங்களுக்குரிய புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் தமிழகத்தின் தொடக்க கால நாணயங்கள் சங்க கால நாணயங்கள் எனக் குறிப்பிடாது பாண்டியரின் தொன்மையான நாணயங்கள் என முதன் முதலில் அழைக்கப்பட்டுள்ளன.

அரசவம்சங்களின் அடிப்படையில் தமிழக நாணயங்களை ஆராய்ந்தவர்களுள் பிடுல்ப் (Biddulph) என்ற ஆங்கிலேய நாட்டு அறிஞர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். 1966இல் இந்திய நாணயவியல் சங்கத்தால் வெளியிடப்பட்ட பாண்டியரது நாணயங்கள் என்ற இவரது நூலில் தான் சங்க காலம் தொட்டு பிற்காலம் வரையிலான பாண்டியர் கால நாணயங்களின் புகைப்பங்கள் பிரசுரிக்கப்பட்டு, சங்க காலம் தொட்டு பாண்டிய மன்னர்கள் நாணயங்களை வெளியிட்டு வந்துள்ளனர் என்ற கருத்து மேலும் வலியுறுத்தப்பட்டது. இந்நூலில் வடஇலங்கையில் கிடைத்த நாணயங்களின் தனித்துவம் சுட்டிக்காட்டப்பட்டு அவை தனியாக ஆராயப்பட்டுள்ளன. ஆயினும் அவற்றை இலங்கைத் தமிழருடன் தொடர்புபடுத்தாது ஏனைய நாணயவியலாளர்கள் போல் இவரும் பாண்டிய மன்னர்கள் இலங்கையில் அல்லது தமிழகத்தில் இவ்வகை நாணயங்களை வெளியிட்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இலங்கையில் கிடைத்தது போன்ற தனித்துவமான நாணயங்கள் தமிழகத்திலும் கிடைத்ததாக அவர் தனது நூலில் குறிப்பிடவில்லை .

1977இல் சட்டோபாத்தியா எழுதிய தென்னிந்திய நாணயங்கள் பற்றிய நூல் தமிழகத்திலும், இலங்கையிலும் கிடைத்த பல்லவ, பாண்டிய சோழ நாணயங்கள் பற்றி விரிவான தகவல்களைத் தருகின்றது (Chttopadhyaya 1977). 1981 இல் வெளிவந்த முன்னாள் தமிழக தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குனர் நாகசாமியின் தமிழ் நாணயங்கள் என்ற நூல் தமிழ் நாட்டு மன்னர்கள் காலத்திற்கு காலம் வெளியிப் நாணயங்களை மட்டும் விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்ட முதல் நுால் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது (Nagaswamy 1981). இந்நூலில் சங்கால நாணயங்கள் தொடர்பாக அவர் கூறிய கருத்துக்கள் சங்க கால நாணயங்கள் தொடர்பாகக் கிடைத்த புதிய சில சான்றுகளின் அடிப்படையில் பிற்காலத்தில் மறு ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழ் நாணயங்கள் அதிலும் குறிப்பாக சங்க கால நாணயங்கள் பற்றி ஆராய்ந்தவர்களுள் தினமலர் பத்திரிகையின் பிரதம பதிப்பாசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். ஆரம்பகாலங்களில் சங்க கால முவேந்தர்கள் மற்றும் மலையமான் போன்ற குறுநில மன்னர்களின் நாணயங்களைத் தனி நூலாகத் தமிழில் எழுதிய இவர் (கிருஷ்ணமூர்த்தி 1986, 1987, 1990) 1997இல் சங்க காலத் தமிழ் நாணயங்கள் என்ற தலைப்பில் விரிவான நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். சங்க கால நாணயங்கள் தொடர்பாக வெளிவந்த அரிய முதலாவது தனி நுால் என்ற வகையில் இதற்குச் தனிச் சிறப்புண்டு. இந்நூலில் சங்காலத்தில் மூவேந்தர்கள் மட்டுமன்றி குறுநில மன்னர்களும் பெயர் பொறித்த நாணயங்களை வெளியிட்டுள்ளனர் என்பதற்குப் பல சான்றுகளைக் காட்டுகிறார். இந்நூலாசிரியரே வடஇலங்கை பல ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டும் சரிவர் ஆராயப்படாதிருந்த நாணயங்கள் சிலவற்றைச் சங்க காலப் பாண்டியர் வெளியிட்ட நாணயங்கள் என் முதன்முதலாக அடையாளம் காட்டியுள்ளமை இங்கு சிறப்பாக சுட்டிக் காட்டத்தக்கதாகும் (Krishnamurthy 1997).

முன்னாள் தமிழக தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் நடன காசிநாதன் 1995 எழுதி வெளியிட்ட தமிழர் காசு இயல் என்ற நூல் தமிழகத்திலும், இலங்கையிலும் கிடைத்த ஒட்டு மொத்த தமிழ் நாட்டு நாணயங்களை ஆராய முற்படுவதாக உள்ளது. நூலின் தலைப்பு தமிழர் காசுகள் என இருப்பினும் அதில் உள்நாட்டு, வெளிநாட்டு நாணயங்கள் எனத் தமிழகத்தில் கிடைத்த நாணயங்கள் பிரிக்கப்பட்டு அவை வம்சம், நாடு, காலம் என்ற அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இந்நுாலாசிரியர் இயக்குனராக இருந்து மேற்கொண்ட அகழ்வாய்வின் போது கிடைத்த நாணயங்கள் சிலவற்றை இந்நூலில் ஆய்வுக்குப் பயன்படுத்தியுள்ளமை பண்டைய கால நாணயங்களின் காலத்தைக் கணிக்க உதவியாக உள்ளது (காசிநாதன் 1995).

இலங்கை, தென்னிந்திய நாணயங்கள் பற்றி நீண்டகாலமாக ஆராய்ந்து பல நூல்களையும், கட்டுரைகளையும் வெளியிட்டு வந்த மிற் சனர் அவற்றின் ஒட்டுமொத்த ஆய்வு நுாலாக 1998இல் தென்னிந்திய நாணயங்களின் காலமும் வரலாறும் என்ற அரிய நூலை வெளியிட்டுள்ளார் (Mictchiner 1998). இந்த நூலில் காணக் கூடிய சிறப்பு இலங்கையில் குறிப்பாக வட இலங்கையில் கிடைத்த தமிழ் நாணயங்கள் காலம், வம்சம் என்ற அடிப்படையில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ நாணயங்கள் எனப் பிரிக்கப்பட்டு அவற்றிற்குரிய புகைப்படங்களுடன் ஆராயப்பட்டிருப்பதாகும். வடஇலங்கையில் கிடைத்த நாணயங்கள் சிலவற்றின் வடிவமைப்பு சின்னங்கள், குறியீடுகள் சமகாலத்தில் தமிழ் நாட்டு வம்சங்களால் வெளியிடப்பட்ட நாணயங்களிலிருந்து வேறுபடுவதை அவர் உணர்ந்துள்ள போதிலும் டுல்பே போல் இவரும் இந்நாணயங்களைத் தமிழ் நாட்டு வம்சங்களுடன் தொடர்பு படுத்துகிறார். அவ்வாறு தொடர்புபடுத்தும் போது ஒருவித தயக்கம் இருப்பதை இவர் இந்நாணயங்களுக்கு கொடுக்கின்ற வேறுபட்ட காலக் கணிப்பும், இலங்கை மீதான தமிழ் நாட்டு வம்சங்களின் மேலாதிக்கம் பற்றிய தெளிவற்ற வரலாற்றுத் தரவுகளும் எடுத்துக் காட்டுகின்றன. ஆயினும் இவரது ஆய்வு வடஇலங்கையில் கிடைத்த நாணயங்களை தனித்துப் பார்ப்பதற்கு மறைமுகமாக உதவுகிறது எனக் கூறலாம்.

அண்மைக் காலங்களில் தமிழ் நாணயங்கள் பற்றி ஆராய்ந்தவர்களில், ஆராய்ந்து வருபவர்களில் இளம் நாணயவியலாளர் அளக்குடி ஆறுமுக சீதாராமன் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். இருபது வயதிலிருந்து நாணயவியல் ஆய்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட இவர் தமிழ் நாட்டில் நாணயங்கள் காணப்படும் இடங்களில் நேரில் கள ஆய்வை மேற்கொண்டு மிகக் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான நாணயங்களைச் சேகரித்துள்ளார். அவற்றுள் பல்வேறு காலப்பகுதிக்குரிய தமிழ் நாணயங்களை மட்டும் தனது ஆய்வுக்குரிய களமாக எடுத்துக் கொண்ட இவர் ஆரம்ப காலங்களில் தினமணி என்ற தேசிய நாளிதழ்களில் அவற்றைப் பிரசுரித்து இன்று இருநுாற்றியம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும், செய்திக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். தென்னாசியாவின் முதன்மைச் சாசனவியலாளர்களில் ஒருவரான ஐராவதம் மகாதேவனுடன் இவருக்கு ஏற்பட்ட நெருக்கமான ஆசிரிய மாணவ உறவு பண்டைய எழுத்துக்களில் இவர் பயிற்சி பெறக் காரணமாக இருந்ததுடன், எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நாணயங்களை அடையாளம் காணும் புலமையாளர்களில் ஒருவராக இவரும் உயர்ந்து செல்லக் காரணமாக இருக்கின்றது. நாணயங்களின் அடிப்படையில் பண்டைய ஊர்ப்பெயர்கள், தெய்வப்பெயர்கள், கடற்கலன்கள் பற்றிய இவரது ஆய்வுகள் வரலாற்றாய்வில் நாணயங்களின் பரந்துபட்ட பரிணாமத்தைச் சுட்டுகிறது. இந்திய நாணய மரபை ஒட்டி இலங்கை நாணயங்கள் தோன்றியதென்ற பாரம்பரிய கருத்துக்கு முன்னால் இவர் வடஇலங்கைத் தமிழ் மன்னர்கள் வெளியிட்ட சேது நாணயமரபைப் பிற்காலத்தில் வெளியிடப்பட்ட தமிழக மறவ நாணயங்களுடன் தொடர்புபடுத்தி ஆராய்ந்துள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கது (1989). தமிழகத் தொல்லியல் சான்றுகள், தொகுதி – ஒன்று (1994) என்ற நூலைத் தொடர்ந்து வெளிவர உள்ள தொகுதி இரண்டும், சங்கர் இராமனுடன் இணைந்து எழுதியுள்ள பல்லவர் காசுகள் என்ற நூலும் தமிழ் நாணயங்கள் பற்றிய ஆய்வுக்கு மேலும் புதிய உத்வேகத்தைக் கொடுக்கலாம். இருப்பினும் அவரும், அவரிடம் இருந்து பிற அறிஞர்களும் பெற்று இதுவரை ஆய்வுக்குப் பயன் படுத்திய நாணயங்களை விட ஆய்வுக்குப் பயன்படுத்த வேண்டிய பல வகை நாணயங்கள் அவரிடம் இருப்பதை நான் அறிவேன். அவையனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுமானால் தமிழ் நாணய வரலாற்றிற்குப் மேலும் புதிய வெளிச்சம் உண்டாகலாம்.

சமீப காலங்களில் அகழ்வாய்வுகளிலும், கள ஆய்விலும் மற்றும் அயல் நாடுகளிலிருந்தும் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய தமிழ் நாணயங்கள் தொடர்பாக சில ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்து ள்ளன. அவற்றுள் பேராசிரியர். சண்முகம், பேராசிரியர். புலவர் இராசு, பேராசிரியர். இராஜன், பேராசிரியர். திருஞான சம்பந்தம், குடவாசல் பாலசுப்பிரமணியம், இளம் நாணயவியலாளர் சங்கர இராமன், செல்வி பவானி போன்றோரது ஆய்வுக்கட்டுரைகள் சிலவற்றைக் குறிப்பிடலாம். இக்கட்டுரைகள் சில தமிழக நாணயங்களின் தோற்றம், பரவல் , பயன்பாடு பொறுத்து முன்னைய கருத்துக்களில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏற்படுத்தக் காரணமாக உள்ள ன (Shanmugam 1994:95-100. Rajan2000:114-118). அவற்றுள், செல்வி. மா. பவானி எழுதியுள்ள கல்வெட்டுக்களை அடிப் படையாகக் கொண்ட ஆய்வுக் கட்டுரைகள் தமிழக நாணயங்களைப் பிற வரலாற்று மூலாதாரங்களுடன் தொடர்புபடுத்தி ஆராய்வதன் மூலம் குறிப்பிட்ட கால சமூக அசைவாக்கத்தை அடையாளம் காணலாம் என்பதைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளன (பவானி 1999, 1999ஆ. 2000). இவர்களைத் தவிர தமிழக நாணயங்களை ஆராய்ந்தோரில் எம். எச். கிருஷ்ணன், கே. எ . நீலகண்ட சாஸ்திரி, என். சங்கர நாராயணன், வி. ஜெயராஜ், அ. இராகவன், வித்தியப்பிரகாஷ், ஐ. இராமசாமி, ஆர். வனஜா ஆகியோர் குறிப்பிடத்தக்கனர்.

இதுவரை குறிப்பிடப்பட்ட ஆய்வு நூல்கள், கட்டுரைகள் போன்றவற்றிலிருந்து தமிழ் நாட்டில் சங்ககாலம் தொட்டு தமிழ் நாணயங்கள் வெளியிடப்பட்டதென்ற கருத்தை அறிஞர்களில் பெரும்பாலானோர் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது. பல்லவர் காலம் தொட்டு பெரும்பாலும் நாணயங்களில் அரசு இலட்சனையோடு, பெயரிடும் முறை இருந்து வந்ததால் பல்லவருக்குப் பிற்பட்ட கால நாணயங்களைப் பெருமளவுக்கு இனங்காணமுடிகிறது. ஆனால் பல்லவருக்கு முற்பட்ட கால நாணயங்களில் கூடிய அளவுக்குச் சின்னங்களையே பயன்படுத்தியதால் அவற்றை இனங்காண்பதில் பல குறைபாடுகள் நீண்ட காலமாக இருந்து வந்தன. ஆனால் அண்மைக் காலங்களில் கரூர் , காவிரிபூம்பட்டினம், மதுரை, உறையூர், கொற்கை, அரிக்கமேடு, திருக்கோவலூர், அழகன்குளம் போன்ற இடங்களிலிருந்து பெருமளவு நாணயங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து சங்ககாலத்தில் முத்திரை நாணயங்களும், வார்ப்பு நாணயங்களும் வெளியிடப்பட்டமை உறுதியாகத் தெரியவந்துள்ளது. வார்ப்பு நாணயங்களை மூவேந்தர் மட்டுமன்றி குறுநில மன்னர்களும் வெளியிட்டுள்ளனர். இந்நாணயங்களின் பின்புறத்தில் அதை வெளியிட்ட வம்சத்தின் குலச் சின்னங்கள் இடம் பெற்றுளாமை சிறப்பான அம்சமாகும். அதில் பாண்டியருக்கு மீன் கோட்டுருவமும், சோழருக்கு புலியும், சேரருக்கு அம்பு வில்லும், மலையமான் மன்னருக்கு ஆற்றுச் சின்னமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சில நாணயங்களில் அதை வெளியிட்ட மன்னன் பெயர் இடம்பெற்றுள்ளது. அவற்றுள் பெருவழுதி, அதினன்எதிரான்சேந்தன், கொல்லிப்புறை போன்ற மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடத்தக்கன. வேறுசில நாணயங்களில் மன்னன் பெயரோடு அவன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஊக்கோதை குட்டுவகன்கோதை போன்ற மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் குறிப்பிடத்தக்கன (சீதாரான் 1994: 1-15. Kramamurthy 1997:97-105). மேலும் இந்நாணயங்கள் தமிழகத்தில் மட்டுமன்றி வர்தக நோக்கில் பிற நாடுகளுக்கும் சென்றதை தாய்லாந்தில் கிடைத்த இரு சோழ நாணயங்களும் (Shanmugam1994:95-100), இலங்கையில் கிடைத்த சோழ பாண்டியாணயங்களும் உறுதிப்படுத்துகின்றன (புஷ்பரட்ணம் 1998:11-119).

பொதுவாகத் தமிழர் நாணயங்கள் தொடர்பான ஆய்வுகள் தமியகத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள் சமகாலத்தில் இலங்கையுடனான அரசியல், வர்த்தகப், பண்பாட்டுத் தொடாபால் இலங்கைக்கும் சென்றதைச் சுட்டிக் காட்டுவதாகவே உள்ளன ஆணல் இலங்கையில் கிடைத்த தமிழ் நாணயங்கள் அனைத்தும் தமிழ் கட்டிலிருந்துதான் சென்றவையா? என்பதற்கு மேற்கூறப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் தவறிவிட்டன என்றே கூறலாம். தமிழ் நாட்டு நாணயங்கள் பற்றி ஆராய்ந்தவாக ரில் பெரும்பான்மையோர் இலங்கையில் கிடைத்த தமிழ் நாணயகனை நேரில் பார்த்து ஆராயாத நிலையில் அங்கு கிடைத்த தமிழ் நாணயங்கள் தொடர்பாக ஐரோப்பிய, சுதேச வரலாற்றறிஞர்கள் கொடுத்த தரவுகள் மற்றும் வரலாற்றுச் செய்திகளையும், இலங்கையுடன் தமிழகத்திற்குள்ள பாரம்பரிய உறவையும் கவனத்தில் கொண்டு இக்கருத்தைக் கூறியுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் கிடைத்த தமிழ் நாணயங்கள் பற்றி ஆராய்ந்த ஐரோப்பிய அறிஞர்களும், பிற்கால ஈதேச வரலாற்றறிஞர்களும் அந்நாணயங்களில் உள்ள தனித்துவத்தைக் கவனத்தில் கொள்ளாது இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றுப் பாரம்பரிய நம்பிக்கையில் கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் நாணயங்கள் அனைத்தும் தமிழகத்திலிருந்தே இலங்கைக்கு வந்ததாகக் கூறியுள்ளனர். இந்நிலையில் இலங்கையிலும், தமிழகத்திலும் தமிழ் நாணயங்கள் காணப்பட்ட இடங்கள், இவற்றின் எண்ணிக்கை, பரவல், நாணயங்களின் வடிவமைப்பு, சின்னங்கள், குறியீடுகள், பெயர்கள் என்பற்றிற்கிடையிலான ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்வதன் மூலம் இலங்கையில் கிடைத்த தமிழ் நாணயங்கள் அனைத்தும் தமிழ் நாட்டிலிருந்து வந்தவையா? அல்லது இலங்கைத் தமிழர்களும் நாணயங்களை வெளியிட்டார்களா? என்ற கேள்விக்கு உறுதியான பதில் காண முடியும். அதை அடுத்து வரும் அதிகாரங்களில் காணலாம்.

 

 

 

 

2. பிராமி எழுத்துப் பொறித்த

தமிழர் நாணயங்கள்

 

வரலாற்றாய்வில் தென்னாசியாவில் கிடைத்த நாணயங்களை முத்திரை நாணயங்கள், வார்ப்பு நாணயங்கள், எழுத்துப் பொறித்த நாணயங்கள் என மூன்றாக வகுத்துக் கொள்ளலாம். இந்தியாவைப் போல் இலங்கையில் கிடைத்த காலத்தால் முந்திய நாணயங்கள் முத்திரை நாணயங்களாகும் (Punch-Marked coins). இதன் தோற்ற காலம் இந்தியாவில் கி.மு. 6ஆம் நூற்றாண்டெனக் கூறப்பட்டாலும் இலங்கையில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டெனக் கணிக்கக் கூடிய சான்றுகளே இதுவரை கிடைத்துள்ளன (Bopearachchi 1999) தொடக்க காலத்தில் இவை வடஇந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்கும், இலங்கைக்கும் பரவியிருந்தாலும் காலப் போக்கில் இங்கேயே வெளியிடப்பட்டிருக்கலாம் எனப் பலராலும் கூறப்பட்டு வருகிறது (Codrington 1924:16-17). இக்கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் இந்நாணயங்களை வடிவமைப்பதற்குரிய சுடுமண் அச்சுக்கள் (Terracotta Moulds) இலங்கையில் அநுராதபுரம், அக்குறுகொட ஆகிய இடங்களிலும் (Deraniyagala 1972:150 Bopearachchi 1999 plate25) ஆந்திராவில் அமராவதி, தமிழ் நாட்டில் காஞ்சிபுரம் மற்றும் தென்மாவட்டங்களிலும் கிடைத்துள்ளன ( Raman and Shanmugam1991:23-29 ). மேலும் இச்சுடு மண் அச்சுக்களுடன் தமிழ் நாட்டில் சோரின் தலைநகரான கரூரில் உலோக அச்சு ஒன்றும் கிடைத்துள்ளது (சீதாராமன் 1994:14). தமிழ் நாட்டில் இம்முத்திரை நாணயங்களை மூவேந்தர்கள் வெளியிட்டுள்ளனர் என்பதை நாணயங்களில் வரும் அவர்களது குலமரபுச் சின்னங்களை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.(Krishnamurthy 1997:plate.1). அத்துடன் இவர்கள் வெளியிட்ட நாணயங்களில் வடஇந்திய நாணயங்களில் வரும் 16 கதிர் கொண்ட சூரியனுக்குப்பதிலாக 12 கதிர் கொண்ட சூரியன் காணப்படுகின்றது (Gupta1969:43). இதனால் இலங்கை முத்திரை நாணயங்கள் வட இந்தியாவைப் போல் தென்னிந்தியா குறிப்பாக தமிழ் நாட்டிலிருந்து வந்திருக்கவும், இம்மரபைப் பின்பற்றி இலங்கைத் தமிழர் முத்திரை நாணயங்களை வெளியிட்டிருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் அந்த நோக்கில் யாரும் இலங்கையில் கிடைத்த முத்திரை நாணயங்களை இதுவரை ஆராய்ந்ததாகத் தெரியவில்லை.

அண்மையில் கந்தரோடையில் கண்டுபிடித்த நான்கு வெள்ளி முத்திரை நாணயங்கள் பற்றி ஆராய்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கிருஷ்ணராஜா அவற்றில் உள்ள நாகச் சின்னத்தை நாகதீபம் என அழைக்கப்பட்ட யாழ்ப்பாண அரசு காலத்திற்குரிய தனித்துவமான அம்சம் எனக் குறிப்பிட்டு, அதனைக் கந்தரோடையைத் தலைநகராகக் கொண்ட னக அரசு வெளியிட்டிருக்கலாம் எனக் கூறியுள்ளார் (1998:65-72). இலங்கையில் முத்திரை நாணயங்கள் வெளியிடப்பட்டது என்பதற்கு காட்டப்படும் முக்கிய காரணங்களில் ஒன்று அவற்றில் இடம்பெற்றுள்ள சின்னங்கள் வட இந்திய, தென்னிந்திய மற்றும் தமிழக முத்திரை நாணயங்களில் வரும் சின்னங்களிலிருந்து வேறுபட்டிருப்பதாகும். இலங்கையில் வெளியிடப்பட்ட முத்திரை நாணயங்களில் ஒருசில சின்னங்களுடன், பலவற்றில் சின்னங்கள் அற்றம் காணப்படுகின்றன (Codringtor 1924). அதை உறுதிப்படுத்தும் வகையில் அதற்குரிய சுடுமண் அச்சுக்களும் கிடைத்துள்ளன. மேலும் இவ்வகை முத்திரை நாணயங்கள் பெரும்பாலும் செப்பில் வடிவமைக்கப்பட்டவையாக உள்ளன. ஆனால் ஆசிரியர் கூறுபவை வெள்ளி நாணயங்கள். இவ்வகை வெள்ளி நாணயங்கள் யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி, இலங்கையின் ஏனைய வட்டாரங்களிலும், இந்தியாவின் பல இடங்களிலும் கிடைத்துள்ளன. அத்துடன் அதில் நாக உருவங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சின்னங்கள் இலங்கை, இந்திய மற்றும் மௌரிய ஜனபத அரசு கால நாணயங்களில் பொதுவாகக் காணப்படுகின்ற ன (Parkar 1981:471-72, Devendra Handa 1985:9 38. Gupta1969:8, Sharma, 1990: Plate 52, Nos. A-C., புஷ்பரட்ண ம் 2000:172-182). இந்நிலையில் இவ்வகை நாணயங்களை நாகதீப அரசுக்குரிய தனித்துவமான நாணயங்கள் எனக்கூறும் போது அவற்றைச் சமகாலத்தில் வழக்கிலிருந்த இலங்கை, இந்திய நாணயங்களோடும் தொடர்பு படுத்திப் பார்ப்பது பொருத்தமாகத் தெரிகிறது.

முத்திரை நாணயங்களைத் தொடர்ந்து இந்தியாவைப் போல் இலங்கையிலும் எழுத்து மற்றும் எழுத்தற்ற நிலையில் சின்னங்களுடன் கூடிய வார்ப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டன. இவற்றைச் சிங்கள மன்னர்களே முதலில் வெளியிட்டார்கள் என்பது நீண்டகாலக் கருத்தாகும். ஆனால் அண்மைக் கால அகழாய்வு மற்றும் கள ஆய்வுகளில் இருந்து கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் பிராமி எழுத்துப் பொறித்த நாணயங்கள் வெளியிடப்பட்டமை தெரியவந்துள்ள து (Bopearachchi 1999:15-64). தமிழ் நாட்டில் இதுவரை கிடைத்த சில பண்டைய கால முத்திரைகளில் பிராகிருத, வடபிராமி எழுத்துக்களின் செல்வாக்குக் காணப்பட்டாலும், நாணயங்கள் அனைத்தும் தமிழ்ப் பிராமியில் எழுதப்பட்டுள்ளன (Krishnsmurthy 1997, சீதாராமன் 1994). ஆனால் எமது ஆய்வில் தமிழ்ப் பெயர் கொண்ட நாணயங்களுடன், பிராகிருத மொழிக்குரிய ஒரு சில நாணயங்களையும் இலங்கைத் தமிழர்கள் வெளியிட்ட நாணயங்களாக எடுத்துள்ளேன். இலங்கையின் ஆதிகால வரலாற்றை அறிய உதவும் முக்கிய மூலாதாரங்களாகப் பாளி இலக்கியங்கள், பிராமிக் கல்வெட்டுக்கள் விளங்குகின்றன. இவை பெளத்த மத வரலாற்றைக் கூறுவதை நோக்காகக் கொண்டு அம்மதத்திற்குரிய பாளி, பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன. இவ்வரலாற்று மூலங்களில் தான் தொடக்க கால இலங்கையில் ஆட்சிபுரிந்த தமிழ் மன்னர்கள், வர்த்தகர்கள், படைவீரர்கள் சமூகத்தில் உயர் நிலையில் இருந்த தமிழ் மக்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. இவர்களைத் தமிழர்களாகக் குறிப்பிட்ட போதிலும் அவர்களுக்குரிய பெயர்கள் பெரும்பாலும் பிராகிருதமாக, பிராகிருதமயப்பட்ட தமிழ்ப் பெயர்களாக உள்ளன. இதையொத்த பெயர்கள் தமிழர்கள் என்று குறிப்பிடப்படாத ஏனைய மக்களுக்கும் உரிய பெயர்களாக வருகின்றன. இங்கே நாணயங்கள் சிலவற்றிலும் இதே பெயர்கள் வருகின்றன. ஆனால் அப்பெயர்கள் சிலவற்றைத் தமிழர்களோடு தொடர்புபடுத்த இலங்கை வரலாற்று மூலங்களில் தமிழர்கள் பற்றி வரும் குறிப்புக்களைச் சான்றாக எடுத்துள்ளளேன்.

முதன் முதலில் பிராமி எழுத்துப் பொறித்த தமிழ் நாணயங்கள் கந்தரோடையிலும் (Seyone 1998), அதைத் தொடர்ந்து அநுராதபுரம் (Conningham1999:73-97), தென்னிலங்கையில் அக்குறு கொட போன்ற இடங்களிலும் கிடைத்துள்ளன (Bopearachchi 1999). கந்தரோடையில் இவ்வரிய நாணயங்களைக் கண்டுபிடித்த சேயோன் (Seyone) என்ற நாணயவியலாளர் அவற்றில் உள்ளவை எழுத்துக்களா என்ற கேள்வியை எழுப்பி அவற்றைச் சங்காலச் சோழ மன்னர்கள் வெளியிட்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இங்கு கள் ஆய்வை மேற்கொண்ட கிருஷ்ணராஜா சிவ என்ற பெயர் பொறித்த நாணயம் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் (1998:51-52). அநுராதபத்தில் பிரித்தானிய ஜேர்மன் ஆய்வுக்குழுவினர் இணைந்து மேற்கொண்ட அகழ்வாய்வின் போது சங்க காலப் பாண்டியரின் குலச்சின்னமான மீன் பொறித்த நாணயங்களுடன் பிராமி எழுத்துப் பொறித்த நாணயங்களுக்குரிய சுடுமண் அச்சுக்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றில் பருமக என்ற பெயர் காணப்படுகிறது (Commingham1999: 84-85). இப்பெயர் இலங்கைப்பிராமிக் கல்வெட்டுகளில் 375 இடங்க ளில் வருகின்றது (Paranavithana 1970:IXXIV – LXXXVI). இது பெருமகன் என்ற தமிழ்ச் சொல்லின் பிராகிருத வடிவமாகும். இது ஒரு தமிழ்ச் சொல் என்பதற்கு சில கல்வெட்டுகளில் இதன் பெண்பால் வடிவம் பெருமகள் எனவும் (I.C.Nos.148, 200.331.610,910,1096), சில கல்வெட்டுக்களில் பருமக என்ற பெயர் தமிழ்ப் பிராமிக்கே உரிய “று” என்ற எழுத்துப் பயன்படுத்தி பறுமக (I.C.No148) எனவும் எழுதப்பட்டிருப்பதிலிருந்து அறியலாம். ஆனால் நாணயங்கள் என்ற நிலையில் வகையிலும், தொகையிலும் அதிகமானவை தென்னிலங்கையில் அக்குறுகொட என்ற இடத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்விடம் தென்னிலங்கையில் பண்டைய இராசதானி இருந்த உருகுணப் பிரதேசத்தில் உள்ளது. பண்டைய நாளில் அநுராதபுரம் சிங்கள மன்னர்களின் மைய அரசாக இருந்தபோது இப்பிராந்தியம் சிறு இராசதானியாக மட்டுமன்றி ஒரு முக்கிய வர்த்தக மையமாக இருந்ததற்குப் பாளி நூல்களிலும், கல்வெட்டுக்களிலும், வெளிநாட்டார் குறிப்புக்களிலும் பல சான்றுகள் உண்டு. இங்கு சிற்றரசர்களாக இருந்து ஆட்சி புரிந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பின்னர் இலங்கை மன்னர்களாக வந்ததற்கும் பல சான்றுகள் உண்டு. அண்மையில் இங்குள்ள அக்குறுகொட என்ற இடத்தில் வீடு கட்டுவதற்கான அத்திவாரம் வெட்டும் போது பல அரிய தொல்லியல் சின்னங்கள் வெளிவந்தன. அவற்றுள் பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய அரிய கல்மணிகள், மட்பாண்டங்கள், சுடுமண் உருவங்கள், அச்சுக்கள், அலங்கார மனித, மிருக மற்றும் தாவர வடிவங்களுடன் கூடிய கல்மணிகள், பல்வேறு காலப்பகுதிக்குரிய உள்நாட்டு வெளிநாட்டு நாணயங்கள் போன்றன சிறப்பாகக் குறிப்பிடத் தக்கன. இவற்றைக் கண்டெடுத்த மக்கள் கடைகளில் விற்ற போது அதைக் கேள்வியுற்ற நாணயவியலாளர் விக்கிரமசிங்கா கடும் முயற்சி செய்து பலவகை நாணயங்களையும், பிற தொல்பொருள் சின்னங்களையும் ஆராய்ந்து தற்போது பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இலங்கை நாட்டவரான ஓஸ்மன் பொபி ஆராச்சியுடன் இணைந்து ஒரு அரிய நூலை வெளியிட்டுள்ளார். அந்த நூலில் தான் பிராமி எழுத்துக்களுடன் கூடிய நாணயங்கள் புகைப்படங்களுடன் ஆராயப்பட்டுள்ளன (Bopearachchi 1999). அதில் நூற்றுக்கணக்கான நாணயங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அவையனைத்தும் ஈய நாணயங்களாக இருப்பதால் பெரும்பாலான எழுத்துக்கள் தேய்வடைந்து விட்டன. அவற்றுள் நாற்பது நாணயங்களின் பெயர்களை ஒருவாறு வாசிக்க முடிகிறது. அவையனைத்தும் கி.மு. 2ஆம் நுற்றாண்டுக்கும் கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவை. இவையே இலங்கையில் கிடைத்த காலத்தால் முந்திய நாணயங்களாகும். இவை சங்காலப் பாண்டிய பெருவழுதி நாணயங்களுக்குப்பின் கிடைத்த பழைய நாணயங்களாகக் கருதப்படுகின்றன (மகாதேவன் 2000). இந்நாணயங்களில் வரும் பெயர்கள் இலங்கையின் தொடக்ககால எழுத்து, மொழி, இனம், பண்பாடு போன்ற அம்சங்களை இனங்காண்பதற்கு முக்கிய சான்றுகளாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்நாணயங்கள் இரண்டில் தமிழ் பிராமி எழுத்திருப்பதாக இந்நுாலாசிரியர்களில் ஒருவரான பொபி ஆராச்சி குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் தமிழில் தேர்ச்சியில்லாத காரணத்தால் அவ்விரு நாணயங்களைத் தவிர நூலில் இடம்பெற்றுள்ள பிற தமிழ் நாணயங்களையும் அவரால் சரிவர வாசிக்க முடியவில்லை .

1999இல் கொழும்பில் நடந்த நாணயவியல் கருத்தரங்கில் கலந்து கொண்ட தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல் இணைப்பேராசிரியர் கா. இராஜன் அவர்கள் இந்நூலை வாங்கி வந்து இந்நூலில் உள்ள நாணயங்களின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டி அவற்றை ஆராயுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் முதன் முதலில் இந்நூலில் உள்ள தமிழ் நாணயங்களை மட்டும் வாசித்து அதுபற்றி தொல்லியல் பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்கள் தலைமையில் கல்வெட்டுத் துறையில் கருத்தரங்கு ஒன்றை நடத்தியதுடன், அதைக் கட்டுரையாகப் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ஆராய்ச்சி என்ற இதழில் பிரசுரிக்கச் செய்தார் (புஷ்பரட்ணம் 1999:55-70). பின்னர் இந்நூலில் உள்ள மேலும் இருநாணயங்களை நாணயவியலாளர் ஆறுமுக சீதாராமனுடன் இணைந்து வாசித்து அவற்றைத் தமிழிலும் (2000:30-40) ஆங்கிலத்திலும் (2000அ) வெளியிட்டுள்ளேன். அண்மையில் இந்நாணயங்களை ஆராய்ந்த சாசனவியல் அறிஞர் மகாதேவன் அவர்கள் அவற்றை ஆராய்ந்து அரிய இரு கட்டுரைகளை ஆங்கிலத்திலும் (Mahadevan2000), தமிழிலும் (மகாதேவன் 2000:116 120) வெளியிட்டுள்ளார். ஆனால் நாணயங்களின் வாசிப்பிலும், இந்நாணயங்களை வெளியிட்ட மக்கள் யார் என்பதிலும் வேறுபாடு காணப்படுகிறது. அவை பற்றி இந்நூலில் விரிவாக நோக்கலாம். இன் ஆய்வுக்கான வரைபடங்களும், ஏனைய விபரங்களும் பொபி ஆராச்சியின் நுாலில் இருந்து பெறப்பட்டவை.

நாணயம் 1(நூல் இலக்கம் A 21)

அடிக்குறிப்பு எண் ; 37

இந்நாணயம் 2.03 கிராம் நிறையும் 15மில்லி மீட்டர் விட்டமும் உடையது. இதன் முன்புறத்தில் மலர்வடிவிலான அலங்காரமும், பின்புறத்தில் விளிம்பை ஒட்டி சுவஸ்திகா சின்னமும், அதைத் தொடர்ந்து நாணயத்தின் விளிம்பைச் சுற்றி நான்கு பிராமி எழுத்துக்களும் உள்ளன. இதிலுள்ள எழுத்துக்களை பொபி ஆராச்சி ஊதிரன (Utirana) என வாசித்துள்ளார் (Bopearachchi 1999-56) இப்பெயாரின் இறுதியில் வரும் “ன” என்ற எழுத்து தமிழ் மொழிக்கேயுரிய சிறப்பெழுத்தாகும். இது தமிழில் அன்” என்ற விகுதியில் முடியும் ஆண்மகனின் பெயரைக் குறிக்க பெரும்பாலும் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களிலும், மட்பாண்டங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்ப் பிராமில் உயிர் மெய், அகர – ஆகாரக் குறியீடுகள் ஒரேமாதிரியானவை (மகாதேவன் 2000:1-17). இதனால் ஊதிரான என வாசிக்கப்பட்ட நாணயத்தில் உள்ள பெயரை உதிரன் (Utray) என வாசிப்பதே பொருத்தமாகும். இப்பெயர் உத்திர நட்சத்திரத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது (இராசகோபால் 1991). இலங்கைப்பிராமிக் கல்வெட்டுக்கள் பலவற்றில் உத(தி)ர, உதிய, உதி போன்ற பெயர்களும் (Paranavithana1970:Nos 202, 349. 538.958). தமிழ் நாட்டில் அரிக்கமேட்டில் கிடைத்த மட்பாண்ட ஓட்டில் உதிரன் என்ற பெயரும் (Mahadevan 1996, இராசகோபால் 1991) பெறப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

உதிரன் என்ற பெயரின் இறுதியில் வரும் “ன” என்ற தமிழ்ப் பிராமி எழுத்து தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களிலும், மட்பாண்டங்களிலும் பயன்படுத்தப்பட்டதே தவிர இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்படவில்லை என்று இதுவரையிலும் கூறப்பட்டு வந்துள்ளது. அதன் அடிப்படையில் இப்பெயர் கொண்ட நாணயத்தை தமிழ் நாட்டு வணிகக் குழு இலங்கையில் வெளியிட்டதாக மகாதேவன் அவர்கள் கருத ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் வடஇலங்கையில் பூநகரியில் கிடைத்த மட்பாண்டங்களில் இவ்வெழுத்து பெறப்பட்டுள்ளதுடன், சித்துள்பவ, அநுராதம் போன்ற இடங்களில் கிடைத்த கல்வெட்டுக்களில் பேராசிரியர் பரணவிதானாவால் வாசிக்கப்பட்ட மருமகந, மருமகநே என்ற பெயர்களின் இறுதியில் வரும் (Paranavithana 1970:Nos.643, 1161) “ன” என்ற எழுத்தை தமிழ் மொழிக்குரியதாகக் கொண்டு இதனை மருமகன் என வாசிக்கலாம். இதைத் தவிர மல்லன், மருமான் போன்ற உறவுப்பெயர்களிலும் இந்த “ன” என்ற எழுத்துப் பயன்படுத்தப் பட்டுள்ளதைக் காணலாம் (புஷ்பரட்ணம் 2000இ:1-10). இப்பின் னணியில் உதிரன் பெயர் கொண்ட இந்நாணயத்தை இலங்கைத் தமிழர்களுடன் தொடர்புபடுத்தலாம்.

 

நாணயம் 2 (நுால் இலக்கம் A 37)

அடிக்குறிப்பு எண் ; 38

இந்நாணயம் 2.14 கிராம் நிறையும், 14மில்லி மீட்டர் விட்டமும் உடையது. இதன் முன்புறத்தில் சக்கரம் போன்ற வடிவமும், பின்புறத்தில் நாணயத்தின் மத்தியில் சிறுவட்டமும் அதன் நடுவில் சிறு புள்ளியும், நாணயத்தின் விளிம்பை ஒட்டி வட்டமாக ஐந்து பிராமி எழுத்துக்களும் உள்ளன. இதிலுள்ள எழுத்துக்களுக்கு (த) ஸபிஜனா ((ta)Sapijana) என்ற வாசகம் கொடுக்கலாம் எனக் கூறியுள்ளார் (Bopearachchi 1999:59). ஆனால் இப்பெயரின் இறுதியிலுள்ள எழுத்தும் முதல் குறிப்பிட்ட நாணயத்தில் உள்ளது போல் “அன்” என்ற விகுதியுடன் முடிவதால் இப்பெயரை தஸபிஜன் என வாசிக்க முடியும். மகாதேவன் அவர்கள் முதலுள்ள இகர உயிர்மெய் குறியீடு தேய்ந்து அல்லது அழிந்திருக்கலாம் எனக் கூறி அதை “தி” எனவும், ஐந்தாவது எழுத்தை “” எனவும் எடுத்து நாணயத்தின் வாசகம் (திர ஸபிடான் எனவும், இது இலக்கிய நடையில் திஸ பிட்டன் எனவும் கூறியுள்ளார் (2000119). இதற்குச் சான்றாக இலங்கைப் பிராமிக்கல்வெட்டுக்களில் வரும் திஸ என்ற பெயர்களோடு தமிழ் நாட்டில் அழகன் குளத்தில் கிடைத்த மட்பாண்ட ஓட்டில் திச அன், அழகர்மலைக் குகைக் கல்வெட்டில் தியன், கொங் கர்புளியங்குளக் கல்வெட்டில் பிட்டன் (பிடான) போன்ற பெயர்கள் வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரோமிக் கல்வெட்டுக்களில் “ங” “ட” “ஜ” போன்ற எழுத்துக்கள் வடிவமைப்பில் ஒருவித ஒற்றுமைத்தன்மை கொண்டுள்ளன. “ட” எழுத்து அரைவட்ட வடிவிலும், அதன் வடிவம் சதுரம் அல்லது நடுவில் சற்று மடிந்து உள்நோக்கி ஒரு கோடு நீண்டிருக்கும் வடிவம் “ஜ” எனவும், அரை வட்டம் சதுரமாக அமைந்திருக்கும் போது “ங” எனவும் அழைக்கப்படும். தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் “ங” “ட” என்ற எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் இம்மூன்று எழுத்துக்களும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் நாணயத்தில் வரும் பெயரைக் கல்வெட்டுக்களில் வரும் “ஐ” என்ற எழுத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பிட்டன் என வாசிக்கப்பட்டதை பிஜன் என வாசிப்பதே பொருத்தமாக உள்ளது. மகாதேவன் அவர்கள் நாணயத்தில் உள்ள தஸ் என்ற சொல்லின் முதலெழுத்தை “தி” என எடுத்து திஸ என வாசித்தாலும், இலங்கைப்பிராமிக் கல்வெட்டில் தஸ என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளது (Paranavithana 1970:No.389). இது வடமொழியில் அவனுடைய என்ற கருத்தைக் கொடுக்கிறது. இதனால் நாணயத்தில் வரும் தஸ என்ற சொல் பிஜனுடைய நாணயம் என்பதைக் குறிப்பதற்காக இருக்கலாம்.

 

 

 

 

 

 

 

நாணயம் 3(நூல் இலக்கம் A 20)

அடிக்குறிப்பு எண் ; 40

இந்நாணயம் 2.56 கிராம் நிறையும், 16மில்லி மீட்டர் விட்டமும் உடையது. இதன் முன்புறத்தில் அலங்காரமான மலர் வடிவமும், பின்புறத்தில் நாணயத்தின் மத்தியில் சிறுவட்டமும் அதன் நடுவில் சிறு புள்ளியும், நாணயத்தின் விளிம்பை ஒட்டி வட்டமாக எட்டு பிராமி எழுத்துக்களும் உள்ளன. இதிலுள்ள எழுத்துக்களுக்கு கபதிகஜக அபொ (kapatikajaapo) என்ற வாசகம் கொடுக் கப்பட்டுள்ளது (Bopea rachchi1999:54-55). ஆனால் இவற்றின் வாசிப்புக்கு சரியான பொருளை ஆசிரியரால் கொடுக்க முடியவில்லை . இதில் வரும் இறுதி எழுத்தான “பொ” என்ற வரிவடிவத்தை “ன்” எனக் கொண்டு இதனை “அன்” விகுதியில் முடியும் ஆண் பெயராகக் கொள்ளலாம். இதனால் இந்நாணயத்தில் வரும் பெயரையும் முதலிரு நாணயங்களைப் போல் தமிழ்ப் பெயராக எடுக்கலாம். இதைக் கபதி கஜபஅன் என வாசிக்கலாம். இதில் கபதி என்பது பட்டப் பெயராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

 

படம் – 11

அடிக்குறிப்பு எண் ; 38

இது குடும்பத் தலைவன் என்ற கருத்தைக் கொண்டுள்ளது. அநுராதபுரத்தில் உள்ள கல்வெட்டொன்று தமிழ்க் கபதி பற்றிக் கூறுகிறது (Paranavithana 1970:No94). இது குடும்பிகன் என்ற பட்டத்திற்கு சமமான கருத்துடையது. தமிழ் நாட்டிலுள்ள திருப்பரங்குன்றக் கல்வெட்டொன்று ஈழத்தைச் சேர்ந்த குடும்பிகன் பற்றிக் கூறுகிறது (Mahadevan1966:No 51). “கஜப அன்” என்பது கபதி என்ற பட்டத்திற்குரியவரின் பெயராகும். “கஜப” என்பதற்கு யானை என்ற கருத்துண்டு. இதன் மூலம் இவனை யானைப்படையின் தலைவன் எனக்கொள்ளலாம். இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை முதுநிலைக் கல்வெட்டாய்வாளர் ராஜவேலு நாணயத்தில் வரும் “ஜ’ என்ற எழுத்தை “ட” எனக் கூறி கஜப அன் என்ற பெயரைக் “கடல அன்” என வாசிக்கலாம் எனக் கூறுகிறார் (1) . இதற்கு தமிழ் நாட்டி லுள்ள மாங்குளக் கல்வெட்டில் வரும் “காடால் அன்” என்ற பெயரைச் சான்று காட்டுகிறார். இதே கருத்துடைய மகாதேவன் அவர்கள் நாணயத்தில் வரும் பெயரும் மாங்குளக் கல்வெட்டில் வரும் பெயரும் ஏறத்தாழ ஒன்று என்கிறார் (2000:117).

 

இலங்கை வரலாற்றில் கஸப என்ற பிராகிருதப் பெயரை பலதரப்பட்ட மக்களும், ஆட்சியாளரும் பயன்படுத்தியதைக் கல்வெட்டுக்களிலும், பாளி இலக்கியங்களிலும் காணலாம். இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் கஸப (kasaba), கசப (kasapa ) என வரும் பெயர்கள் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழ் மயப்படுத்தப்பட்டு கஸபன் (காசபான்), காசிபன் என எழுதப்பட்டுள்ளன (Mahadevan 1966:Nos 29,41). ஒரே பெயர் இலங்கையிலும், தமிழகத்திலும் வேறுபட்ட எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளதைக் இவை காட்டுகிறது. நாணயத்தில் வரும் “ஐ” என்ற எழுத்து வடிவம் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் ராஜா , மகாராஜா என்ற பெயர்களிலும் வருகின்றன (Paranavithana 1970:11 Nos20,1207). இதேவடிவம் மாங்குளக்கல்வெட்டில் வரும் கடல் அன் என்ற பெயரில் வரும் “ட” என்ற எழுத்தை ஓரளவு ஒத்திருந்தாலும் கல்வெட்டில் வரும் “ல” என்ற எழுத்தின் வலப்பக்கக் கோடு பதிந்தும் இடப்பக்க கோடு உயர்ந்தும் காணப்படுகிறது. இது பிராமி எழுத்தில் “ல” வைக் குறிக்கும் பொதுவான அம்சமாகும். இதையொத்த எழுத்தே நாணயத்திலும் இருப்பதாகக் கூறும் போது நாணயத்தில் உள்ள எழுத்தின் வலது பக்க கோடு உயர்ந்தும், இடது பக்க கோடு பதிந்தும் காணப்படுகின்றனர். இது பிராமியில் “ஹ” என்ற எழுத்தைக் குறிப்பதை இலங்கை மற்றும் இந்தியக் கல்வெட்டுக்களிலிருந்து கண்டு கொள்ளலாம். ஆனால் இவ்வெழுத்து தமிழகத்தில் அழகன்குள் அகழ்வாய்வில் மட்பாண்டத்தில் பெறப்பட்டதைத் தவிர தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் இருப்பதாகத் தெரியவில்லை (இராசகோபால் 1991). எனவே இலங்கைப் பிராமிக் கல்வெட்டு எழுத்துக்களின் பின்னணியில் வைத்துப் பார்க்கும் போது நாணயத்தில் வரும் எழுத்துக்களை கபதி கஜப்அன் என வாசிப்பது பொருத்தமாகத் தெரிகிறது.

நாணயம் 4(நூல் இலக்கம் A 17)

அடிக்குறிப்பு எண் ; 42

 

இந்நாணயம் 2.19 கிராம் நிறையும், 17மில்லி மீட்டர் விட்டமும் உடையது. இதன் முன்புறத்தில் வலப்புறம் நோக்கிய நிலையில் சேவல் உருவமும் 2), பின்புறத்தில் நாணயத்தின் மத்தியில் சுவஸ்திகா சின்னமும், நாணயத்தின் விளிம்பை ஒட்டி படமாக ஆறு பிராமி எழுத்துக்களும் உள்ளன. இதிலுள்ள எழுத்துக்கள் மஹசித அபொ (Mahacita apo) எனப் படிக்கப்பட்டுள்ள து (Bopearachchi1999:54 55), ஆனால் இவற்றின் வாசிப்புக்கும் சரியான பொருளை ஆசிரியரால் கொடுக்கமுடியவில்லை. முந்தைய நாணயத்தில் குறிப்பிடப்பட்டது போலவே இந்நாணயத்தின் இறுதியில் வரும் பெயர் “அன்” என முடிவதால் இதை மஹாசாத் அன் என வாசிக்கலாம். சாத்தன் என்ற பெயர் சங்க இலக்கியத்திலும் (புறம் 227, அகம் 50, குறு 349), தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் பல இடங்களிலும் வந்துள்ளன (Mahadevan 1966:69). இதற்கு வணிகன் அல்லது வணிகக் குழு, வணிகக் கூட்டத் தலைவன், தனி நபருக்குரிய பெயர் எனப் பல கருத்துக்கள் உண்டு (T.L.. 11360). மகாவம்சம் என்ற பாளி நூல் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் அநுராதபுரத்தில் ஆட்சிபுரிந்த எல்லாளன் என்ற தமிழ் மன்னனை துட்டகாமினி என்ற மன்னன் வெற்றி கொள்ள முன்னர் தென்னிலங்கையில் ஆட்சி புரிந்த சாத்தன் என்ற தமிழ் படைத்தளபதியை வெற்றி கொண்டதாகக் கூறுகிறது (M.V.XXV:7). இதிலிருந்து சாத்தன் என்ற பெயர் இலங்கைத் தமிழரிடையேயும் வழக்கிலிருந்தமை தெரிகிறது. நாணயத்தில் வரும் “மஹா” என்ற சொல் இலங்கைப்பிராமிக் கல்வெட்டுகளில் “மஹா” “மகா” எனப் பல இடங்களில் தனிநபர் மற்றும் அரச பெயர்களுக்கு முன்னால் பயன்படுத்தப்பட்டுள்ளது. (Paranavith ana 1970:117-118), இதற்கு பெரிய, பெருமை, மிகுந்த , அளவற்ற அல்லது உயர்ந்த எனப் பல கருத்துக்கள் உள்ளன (T.L.V:7). இதை குறுந்தொகை போன்ற சங்க நூல்களில் வரும் பெருஞ்சாத்தனார் போன்ற பெயர்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம் (குறும் 263). தென்னிலங்கையில் எல்லாள மன்னனுக்குச் சார்பாகப் போரிட்ட மகா கொத்தன் என்ற தமிழ்ப் படைத் தளபதியை வெற்றி கொண்டதாக மகாவம்சம் கூறுகிறது (M.V.XXV:11). மகா கொத்தன் என்ற பெயரின் முன்னொட்டுச் சொல்லான் “மகா” என்பது சிறந்த அல்லது கெப் பெரிய வீரன் என்ற பொருளில் வருவதாக எடுத்துக் கொள்ள இடமுண்டு. இவற்றிலிருந்து பண்டைய இலங்கையில் “கா” என்ற அடைமொழியோடு தமிழப் பெயர்கள் இருந்தமை தெரிகிறது. இதனால் நாணயத்தில் வரும் “மஹாசாத் அன்” என்ற பெயர் பெரும் வணிகன், பெரும் வணிககுழு, பெரும் வீரனுக்கு அல்லது பெருமைக்குரிய தனிநபருக் குரிய பெயரைச் சுட்டி நிற்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்நாணயத்தை வாசித்த மகாதேவன் அவர்கள் நாணயத்தின் அச்சு , பிழையாக நேரடியாக எழுதப்பட்டிருப்பதால் கண்ணாடியில் காண்பது போன்று மாறியமைந்துள்ளது என்றும், “சா” என்ற எழுத்து மட்டும் அச்சில் மாற்றிச் செதுக்கப்பட்டிருப்பதால் அது நாணயத்தில் “செ” போன்று தோன்றுகிறது எனவும் கூறி நாணயத்தின் திருந்திய வடிவம் மலசள)த அன எனவும், இலக்கிய வடிவில் அது மல்ல சாத்தன் எனவும் கூறுகிறார். இதற்குச் சான்றாக மல்லன் என்ற பெயர் அழகர் மலையிலும், சா(த்)தன் என்ற பெயர் திருப்பரங்குன்றம் மற்றும் சில கல்வெட்டுக்களிலும் வருவதை உதாரணமாகக் கூறுகிறார் (மகாதேவன் 2000117).

பண்டைய காலத்தில் சில வகை நாணயங்கள், முத்திரைகள் என்பவற்றின் அச்சுக்கள் நேரிடையாக எழுதப்பட்டதால் அவை கண்ணாடியில் பார்த்து வாசிப்பது போன்று அமைந்துள்ளன. இம்முறை தமிழகத்தில் மட்டுமன்றி இலங்கையிலும் இருந்ததற்கு ஆனைக்கோட்டையில் கிடைத்த ஈரெழுத்து முத்திரையும் (Ragupathy 1987:118-119), அக்குறுகொட என்ற இடத்தில் கிடைத்த சில நாணயங்களும் சான்றாகும் (Bopearachchi 1999:59). ஆனால் மேற்குறிப்பிட்ட நாணயத்தில் உள்ள எழுத்துக்களைக் கண்ணாடியில் பார்த்தாலும், நேரில் பார்த்தாலும் அவற்றில் உள்ள எழுத்துக்களில் சில தவறுகள் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரே பெயரில் உள்ள எழுத்துக்களில் சில எழுத்துக்கள் கண்ணாடியில் பார்ப்பது போலவும், இன்னும் சில எழுத்துக்கள் (செ” என்பதைச் சா என் மகாதேவன் எடுத்திருப்பது) நேரடியாக வாசிப்பது போலவும் எழுத்துக்கள் அமைந்திருப்பதாகக் கூறுதை இதுவரை கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது. ஆனால் நாணயத்தில் உள்ள எழுத்துக்களை நேரில் வாசிக்கும் போது மஹா மற்றும் சாத்த என்ற பெயர் தெளிவாக உள்ளன. அத்துடன் இவ்விரு பெயர்களும் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் வருகின்றன (Paranavithana 1970:Nos117,8965). மஹா என்ற பிராகிருத சொல் சில கல்வெட்டுக்களில் வடமொழிக் “ஹ” வுக்குப் பதிலாக தமிழ் “க” பயன்படுத்தப்பட்டு மகா எனவும் எழுதப்பட்டுள்ள து (Paranavithana 1970:No 1117). ஆனால் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் மஹா அல்லது மகா என்ற சொல் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே இலங்கையின் இக்காலக் கல்வெட்டு மொழி, எழுத்து என்பவற்றின் பின்னணியில் வைத்துப் பார்க்கும் போது நாணயத்தில் வரும் பெயரை மல்லசாத்தன் என வாசிப்பதை விட மஹாசாத் அன் என வாசிப்பது பொருத்தமாக உள்ளது. மல்ல என்பதற்கு வீரம் என்ற கருத்தும், மஹா என்பதற்கு பெரிய என்ற கருத்தும் உண்டு. இங்கே சாத்தன் என்ற பெயர் வணிகனைக் குறிப்பதாக எடுத்துக் கொண்டால் வீரவணிகன் என்பதை விடப் பெரிய வணிகன் எனக் கூறுவதுதே பொருத்தமாக உள்ளது.

நாணயம் 5(நூல் இலக்கம் A 11)

அடிக்குறிப்பு எண் ; 42

இந்நாணயம் 2.41 கிராம் நிறையும் , 17 மில்லி மீட்டர் விட்டமும் உடையது. இதன் முன்புறத்தில் நிற்கும் நிலையில் மனித உருவம் உள்ளது. அதன் கையில் வேல் , அம்பு இருப்பதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் அதில் ஒன்று திரிசூலம் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்நாணயத்தை 45பாகையில் இடப்புறமாகச் சுற்றி பார்க்கும் பொழுது வேலுடன் கூடிய ஒரு மிருகத்தின் உருவமாக இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாணயத்தின் பின்புறத்தில் திரிசூலம் போன்ற குறியீட்டைச் சுற்றி ஆறு எழுத்துக்களில் மலக திச ஹ என்ற பெயர் உள்ளது. இதை மல்லக திஷ்சஹ (mallaha tissaha) என வாசிக்கப்பட்டுள்ளது (Bopearachchi 1999:53). இலக்கிய நடையில் இரட்டிக்கும் ஒற்றுக்கள் தமிழ்ப் பிராமி வாசகங்களில் ஒன்றாக வருவதால் கல்வெட்டில் மல என எழுதப்பட்டிருப் பதை மல்ல என வாசிக்கலாம். அநுராதபுரத்தில் கிடைத்த கல்வெட்டொன்றில் மலநான்?) என்ற பெயர் காணப்படுகிறது (I.C.No202). இதை மல்லநான்) என வாசிக்கலாம். பேராசிரியர் பரணவிதானா இதை மாலிந என வாசித்துள்ளார் (1970:17). ஆனால் கல்வெட்டிலுள்ள எழுத்துக்களை நோக்கும் போது பெயரின் இறுதியில் தமிழுக்கே உரிய “ன்” என்ற எழுத்துக் காணப்படுவதால் இதை மல்லன் என வாசிப்பது பொருத்தமாகும். பொபி ஆராச்சி மல, மல்ல என்ற சொல் வடமொழிக்குரியதெனவும், இவை ஒரு இனத்தின் தலைவன் அல்லது வீரனைக் குறிப்பதாகவும் கூறுகிறார். ஆனால் பறோ இவற்றை மூலத்திராவிட மொழிக்குரியதாகக் குறிப்பிட்டுள்ளார் (Burrow 1961:3871). இதற்கு வீரன் என்பது பொருளாகும். இதை நாணயத்தில் காணப்படும் ஆயுதங்களும் உறுதிப்படுத்துவதாக உள்ளன.

இலங்கைப் பிராகிருத மொழிக் கல்வெட்டுக்களில் மல்லஹ, மல்லஸ, மல்லந என வரும் இப்பெயர் (Paranavithana 1970:Nos 1148, 1183,202), நாணயத்தில் தமிழில் மல்லக என எழுதப்பட்டுள்ளமை ஒரு முக்கிய வேறுபாடாக உள்ளது. அத்துடன் நாணயத்தின் பின் பறத்திலும், முன்புறத்திலும் திரிசூலமும் இடம்பெற்றுள்ளது. இச்சின்னம் இந்தியா குறிப்பாக சங்ககால தமிழக நாணயங்களிலும் காணப்படுகின்றன (Krishnamurthy 1997:80-90). இதில் வரும் திசஹ என்ற பெயர் பிராகிருத மொழிக்குரியதாக இருப்பினும் இப்பெயரில் தமிழர்களும் இருந்ததற்குச் சான்றுகள் உண்டு. இதற்கு தமிழ் நாட்டில் அழகன் குளத்தில் கிடைத்த மட்பாண்டத்தில் வரும் திச அன் என்ற பெயர் ஒரு எடுத்துக்காட்டாகும். இலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் குடுவில் என்ற இடத்தில் கிடைத்த கி.மு. 2 ஆம் நூற்றாண்டிற்குரிய கல்வெட்டொன்று தீகவாபி என்ற இடத்தில் வாழ்ந்த திச என்ற தமிழன் பற்றிக் கூறுகிறது (Paranavithana 1970 :No 480). அநுராதபுரத்தில் கிடைத்த கல்வெட்டொன்று தமிழர்கள் ஒன்றுகூடி வணிகம் தொடர்பான ஆலோசனை நடத்த மண்டபம் ஒன்றை அமைத்ததாகவும், அவ்வணிக குழுவில் திசஹ என்ற பெயருக்குரிய தமிழனும் ஈடுபட்டதாகவும் கூறுகிறது ( Parana vithana 1970: 94). கி.பி 2ஆம் நூற்றாண்டில் அநுராதபுரத்தில் ஆட்சி புரிந்த இளநாகனின் பட்டத்தரசியாக இருந்த தமிழதேவியின் (தமிழ்த் தேவி ) புதல்வன் பிற்காலத்தில் தீஸ என்ற பெயருடன் அநுராதபுரத்தில் ஏழு வருடம் எட்டு மாதம் ஆட்சியுந்ததாகப் பாளி நூல்கள் கூறுகின்றன (M.V.XXXV:48-50). இதன் மூலம் இந்நாணயத்தை பௌத்த மதத்தை சாராத தமிழன் ஒருவன் இலஙங்கையில் வெளியிட்டிருக்கலாம் எனக் கூறலாம்.

நாணயம் 6(நூல் இலக்கம் A25)

அடிக்குறிப்பு எண் ; 47

இந்நாணயம் 2.03 கிராம் நிறையும், 17மில்லி மீட்டர் விட்டமும் உடையது. இதன் முன்புறத்தில் புலி போன்ற உருவமும், பின்புறத்தில் ஐந்து பிராமி எழுத்தில் சுட ணாகஸ என்ற பெயரும் காணப்படுகிறது. இலங்கையிலுள்ள 40 பிராமிக் கல்வெட்டுக்களில் சுட, சுள போன்ற சொற்கள் வம்சம், பட்டம், தனிநபர் சார்ந்த பெயர்களாக வருகின்றன. தமிழில் “ழ”க்குப் பதிலாக “” பயன்படுத்தும் மரபு பௌத்த நூலாகிய வீரசோழியத்தில் காணப்படுவதால் தமிழில் இச்சொல் சோழரைக் குறித்ததென்ற கருத்துமுண்டு (Ragupathy 1991). இதற்கு அசோகனது 2வது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் சோழ அரசு சோட எனக் கூறப்பட்டுள்ளதை இங்கு சுட்டிக்காட்டலாம் (Hutzsch 196 9XXX IXX). இலங்கையில் செருவல் என்ற இடத்தில் கிடைத்த கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டில் சுட என்பது தமிழனுக்குரிய பெயராகக் குறிப்பிடப்பட்டுள்ளது (Seneviratne 1985:52). மேலும் இதே கால கட்டத்திற்குரிய சில கல்வெட்டுக்களில் சுட என்ற பெயர் ஆய், மாற போன்ற தமிழ்ப் பெயர்களுடன் பட்டப் பெயராக இணைந்து வருகின்ற ன (Paranavithana 1970 :No 968).

இப்பின்னணியில் நாணயத்தின் பெயரை நோக்கும் போது சில சிறப்பியல்புகளைக் காணமுடிகிறது. பெரும்பாலான சமகாலப் பிராமிக் கல்வெட்டுக்களில் சுட, சுள போன்றவை வம்சம் அல்லது பட்டம் சார்ந்த பெயராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே போல் நாணயத்தில் வரும் சுட என்ற பெயரும் ஒரு பட்டத்தை அல்லது வம்சத்தைக் குறிப்பதாக உள்ளது. இன்னொன்று பிராமிக் கல்வெட்டுக்கள் பலவற்றில் நாஹ என்ற பெயரில் வடமொழிக் “ஹ” பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாணயத்தில் வடமொழிக் “ஹ”வுக்குப் பதிலாக தமிழ்க் “க” பயன்படுத்தப்பட்டுள்ளது. நாணயத்தில் நாக என்பது ணாக என எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு எழுதும் மரபு சமகாலத்தில் இருந்ததற்கு தமிழ் நாட்டில் அழகர்மலைக் கல்வெட்டில் வரும் ணாகன் என்ற பெயரைக் குறிப்பிடலாம் (Mahadevan 1966:No33). பண்டைய காலத்தில் நாக என்ற பெயரில் தமிழர்கள் இருந்தற்குப் பாளி நூல்களில் சான்றுகள் உண்டு. மகாவம்சம் கி.பி 2ஆம் நூற்றாண்டில் அநுராதபுரத்தில் ஆட்சி புரிந்த இளநாக மன்னன் மனைவியை தமிழாதேவி (தமிழ்த் தேவி ) எனக் கூறுவதை இங்கு நினைவுபடுத்தலாம் (M.V.XXXV:46-48). இச்சான்றுகள் சேர்ந்த இந்நாணயத்தை தமிழர்கள் வெளியிட்டார்கள் என்பதைக் காட்டுகின்றன. நாணயத்தின் முன்புறத்தில் உள்ள உருவத்தை பொபி ஆராச்சி சிங்கமாகவே எடுத்துள்ளார் (1999:57). ஆனால் பிற நாணயங்களில் சிங்க உருவத்தின் வால் பகுதியில் உள்ள குஞ்சம் இவ்வுருவத்தில் காணப்படவில்லை. சங்ககாலச் சோழமன்னர் தமிழகத்தில் வெளியிட்ட நாணயங்களில் புலியுருவம் அவர்களின் அரச இலட்சனையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது ( சீதாராமன் 1994:13). மேற்குறித்த நாணயத்தில் வரும் உருவத்தைப் புலியென எடுத்துக் கொண்டால் சங்க காலச் சோழரைப் போல் இங்கு வாழ்ந்த தமிழர்களும் புலியைப் பயன்படுத்தினர் என எடுத்துக் கொள்ளலாம்.

 

 

 

 

 

 

 

நாணயம் 7(நூல் இலக்கம் A 19)

அடிக்குறிப்பு எண் ; 49

 

இந்நாணயம் 2.21 கிராம் நிறையும், 14மில்லி மீட்டர் விட்டமும் உடையது. இதன் முன்புறத்தில் ஆமைச் சின்னமும் அதைச் சுற்றி வட்டமும், வட்டத்திற்கும், விளிம்புக்கும் இடையில் முக்கோண வடிவிலான அலங்காரமும் காணப்படுகின்றன. பின்புறத்தில் நாணயத்தின் மத்தியில் “ப” வடிவிலமைந்த இரு சின்னங்களும், விளிம்பை ஒட்டி சுட ச மணஹ (Cuda Samanaha) என்ற பெயரும் காணப்படுகிறது (Bopearachchi 1999:5). இதில் வரும் சு… என்ற பட்டம் அல்லது வம்சப் பெயர் பற்றி வேது கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இப்பட்டத்திற்குரிய ஷமணக என்ற பெயர் பிராகிருத மொழிக்குரியதாகும். ஆனால் இப்பெயரில் தமிழர்களும் இருந்ததற்கு சான்றுகள் உண்டு. அநுராதபுரத்தில் கிடைத்த கல்வெட்டொன்றில் ஈளபரதஹி தமிட ஸமணநெ கரிதே தமிட கபதிக பச தே என்ற குறிப்பு வருகிறது (Paranavithana1970:No 94). இதில் ஈழத்தைச் சமண என்ற தமிழனும், தமிழ் குடும்பத்தலைவனும் சேர்ந்து மண்டபம் அமைத்த செய்தி கூறப்பட்டுள்ளது. இதில் கபதிகம் என வாசிக்கப்பட்டதை கபதிகன் எனவும் படிக்கலாம். தொடக்க காலத் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்களில் “ன்” என்ற எழுத்துக்குப் பதிலாக “ந” என்ற எழுத்து எழுதப்பட்டதற்கும் அது “ன்” என வாசிக்கப்பட்டதற்கும் சான்றுகள் உண்டு. உதாரணமாக தமிழ் நாட்டில் ஜம்பையில் கிடைத்த அதியமான் பற்றிய கல்வெட்டில் அதியன் என்ற பெயர் அதியந் என எழுதப்பட்தையும், அதை அதியன் என வாசித்ததையும் இங்கு குறிப்பிலாம் (சீனி வேங்கடசாமி1981:145-148). அதன் அடிப்படையில் கபதி என்ற பிராகிருதப் பெயர் கபதிகன் எனத் தமிழ் மயப்படுத்தப்பட்டதாகக் கூறலாம். மேலும் இக்கல்வெட்டிலிருந்து தமிழ் வணிகர்கள் வர்த்தகம் தொடர்பான ஆலோசனையை நடத்த இம்மண்டபத்தைப் பயன்படுத்தியதையும், இம்மண்டபத்தில் அமரவேண்டிய உறுப்பினர்களின் இருக்கைகள் அவரவர் தகுதிக்குரியவாறு அமைக்கப்பட்டதையும் இருக்கைகளில் எழுதப்பட்டுள்ள பெயர்களிலிருந்தும் தெரிகிறது. அதில் கப்பல் தலைவன் கரவ (நாவிக கரவ) என்பனுடைய இருக்கை மிக உயரத்தில் இருப்பதால் அவனே வணிகக்குழுவின் தலைவனாக இருந்திருக்க வேண்டும். அத்துடன் இக்கல்வெட்டின் மூலம் ஈழத்தில் பரதவ சமூகம் இருந்தமையும், அச்சமூகத்தை சேர்ந்த தமிழனுக்கு சமண என்ற பெயர் இருந்தமையும் (இதை மேலும் சில கல்வெட்டுக்கள் கூறுகின்ற ன (Paranavithana 1970:Nos392,392,321). தமிழர்க ளும் குடும்பத் தலைவனைக் குறிக்கும் கபதி என்ற பட்டப் பெயரைப் பயன்படுத்தியதையும், தமிழர்கள் ஒரு குழுவாக வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுப்பட்டதையும் அறியமுடிகிறது.

ஆனால் சமண என்ற பெயர் பலதரப்பட்ட மக்களுக்குரிய பெயராக கல்வெட்டில் காணப்படுவதால் நாணயத்தில் வரும் பெயருக்குரியவனை பெயரடிப்படையில் வைத்து தமிழன் என அடையாளம் காணமுடியாது. இருப்பினும் சுட என்ற பெயர் ஒரு கல்வெட்டில் தமிழ் சுட எனக் குறிக்கப்பட்டிருப்பதுடன் இப்பெயர்

ஆய், மாற போன்ற தமிழுக்குரிய தனிநபர் பெயர்களில் பட்டம், வம்சம் சார்ந்த பெயராகவும் வருகிறது (Paranavithana1970:N0968). அதே போல் சமண என்ற தனிநபர் பெயரும் சுட என்ற பெயரைப் பட்டமாக அல்லது வம்சப் பெயராகக் கொண்டு கல்வெட்டுக்களில் வருகின்றது (Paranavithana1970:Nos 376.203). நாணயத்தில் வரும் ஆமைச் சின்னம் சமகாலத்தில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட சங்க கால நாணயங்களிலும் வருகின்றது (Krishnsmurthy 1997-32-33). இவ்வாறு வருவதை நாணயத்தை வெளியிட்டவன் கடல் வாணிபத்துடன் தொடர்புள்ளவன் என்பதைக் காட்டுவதாக எடுத்துக் கொள்ளலாம். சோழரைக் குறிக்கும் சுட என்ற பெயருக்குரியவர்கள் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டதையும், வர்த்தக மேற்பார்வையாளராக இருந்ததையும் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன (Paranavithana 1970). இதனால் சுட ச மணகஹ என்ற பெயருடைய நாணயத்தைச் சோழவம்சத்தில் அல்லது சோழநாட்டில் இருந்து இங்கு குடியேறிய தமிழன் வெளியிட்ட நாணயமாக எடுத்துச் கொள்ளலாம்.

நாணயம் 8(நூல் இலக்கம் A 12)

அடிக்குறிப்பு எண் ; 51

இந்நாணயம் 1.93 கிராம் நிறையும், 15மில்லி மீட்டர் விட்டமும் உடையது. இதன் முன்புறத்தில் சுவஸ்திகா சின்னமும், அதன் கீழ் இரு கோட்டுருவ மீன் சின்னங்களும், பின்புறத்தில் நாணயத்தின் விளிம்பை ஒட்டி வட்டமாக ஆறு பிராமி எழுத்துக்களும் உள்ளன. இவ்வெழுத்துக்களை பரத திசஹ (baratatiSaha) எனவும் பாசிக்க முடிகிறது. இதில் வரும் பரத என்ற பெயர் 21 இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளில் வருகின்றது. இப்பரத என்ற பெயரும் சங்க இலக்கியத்தில் பரதவ சமூகத்தைக் குறிக்கும் பரதவர், பரவர், பரதர் என்ற பெயரும் ஒன்றாகும். சங்க இலக்கியத்தில் இச்சமூகம் வர்த்தகம், மீன்பிடித்தல், முத்து, சங்கு குளித்தலில் ஈடுபட்டதற்குப் பல சான்றுகள் உண்டு. இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் இப்பெயருக்குரியவர்கள் வர்த்தகர்களாக , கப்பல் தலைவர்களாக, கப்பல் ஒட்டிகளாக , அரச தூதுவர்களாக செயல்பட்டமை தெரிகிறது (புஷ்பரட்ணம் 2000:59-76). பரத பெயர் கொண்ட இந்நாணயத்தின் முன்புறத்தில் மீன் சின்னம் இடம்பெற்றிருப்பது பரதவ சமூகம் மீன்பிடித்தொழில் ஈடுபட்டதாகச் சங்க இலக்கியம் கூறுவதை நினைவுபடுத்துவதாக உள்ளது. இப்பரத என்ற பெயர் பெரும்பாலும் இலங்கையில் வாழ்ந்த தமிழர்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அநுராதபுரத்தில் கிடைத்த கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு ஈழத்தைச் சேர்ந்த பரத என்பவன் தமிழ் நாட்டு வணிகர்களுடன் ஒன்றிணைந்து வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறுகிறது (Paranavithana 1970:94). கல்வெட்டுக்களில் பரத என்ற பெயருடன் ஆய், மாற போன்ற பெயர்களும் இணைந்து வருவது கவனத்தில் கொள்ளத்தக்கன.

நாணயத்தில் வரும் திசஹ என்ற பெயர் அவனைப் பரதவ சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதைக் காட்டுகிறது. திசா திசஹ என்ற பெயர் 12 பிராமிக் கல்வெட்டில் பரத என்ற பெயருடன் இணைந்து (பரத் திச.. திச ஹ) வருகின்றமை இதற்குச் சான்றாகக் காட்டலாம் (புஷ்பரட்ணம் 2000:65-6). திச என்ற பெயர் இலங்கையில் தமிழர்களுக்கும் இருந்ததற்கான சான்றுகள் பற்றி ஏற்கனவே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இவற்றின் பின்னணியில் பரத் திசஹ என்ற பெயர் பொறித்த நாணயத்தை இலங்கையில் வாழந்த தமிழர்கள் வெளியிட்டார்கள் என எடுத்துக் கொள்ளலாம்.

நாணயம் 9(நூல் இலக்கம் A 5)

அடிக்குறிப்பு எண் ; 53

இந்நாணயம் 3.65 கிராம் நிறையும், 19மில்லி மீட்டர் விட்டமும் உடையது. இதன் முன்புறத்தில் இடப்புறம் நோக்கிய நிலையில் யானை உருவமும், பின்புறத்தில் நாணயத்தின் மத்தியில் சிறுபுள்ளியும் அதைச் சுற்றி மஜிமஹ (majhimaha) என்ற பெயரும் காணப்படுகின்றது (Bopearachchi 1999:52). இந்நாணயம் கண்டெடுக்கப்பட்ட வட்டாரத்தில் உள்ள கி.மு. 1ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பத்துக் கல்வெட்டுக்கள் மஜிமகாராஜா வழிவந்த பத்து சகோதரர்களின் ஆட்சி பற்றிக் கூறுகின்றன ( Paranavithana 1970 : Nos 556-569). பேராசிரியர் பரணவிதானா மஜி என்பது இக்காலத்தில் இலங்கையில் வாழ்ந்த மக்களின் பெயரெனக் கூறுகிறார் (Paranavithana 1970 :117). ஆனால் இதற்கு மீன் என்ற பொருளும் உண்டு. இதை உறுதிப்படுத்தும் வகையில் இக்கல்வெட்டுக்களில் மீன் கோட்டுருவங்கள் வரையப்பட்டுள்ளன. பாண்டியர் தமது குலச்சின்னமான மீனை நாணயங்களில் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் இலங்கையில் மீன்சின்னத்திற்குப் பதிலாக அதைக்குறிக்கும் பெயரையும் பயன்படுத்தியிருக்கலாம் எனக் கருத இடமுண்டு. இதற்கு பாண்டியர் வெளியிட்ட நாணயங்களைப் போல் இந்நாணயங்களின் முன்புறத்தில் யானை இடம்பெற்றிருப்பதைச் சான்றாகக் காட்டலாம்.

மென்டிஷ் என்ற வரலாற்றறிஞர் மீன் கோட்டுருவங்களுடன் கூடிய இக்கல்வெட்டுக்கள் ஆதிகாலத்தில் இந்தியாவிலிருந்து குடியேறிய தமிழர்களின் வழி வந்தவர்களைக் குறிக்கின்றன என்றும், இவர்கள் சிங்கள மன்னர்களுக்கு கட்டுப்படாமல் சுதந்திரமாக ஆட்சிபுரிந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார் (பார்க்க: வேங்கடசாமி 1983: 610). தமிழ் நாட்டின் பெரும்பாலான பிராமிக் கல்வெட்டுக்கள் பாண்டி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அக்கல்வெட்டுக்கள் எதிலும் இடம்பெறாத மீன் சின்னம் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் இடம்பெற்றிருப்பது ஒரு காலத்தில் பாண்டி நாட்டிலிருந்து குடியேறிய தமிழ் மக்கள் தமது குலமாயை நினைவுபடுத்தும் வகையில் தாம் வெளியிட்ட கல்வெட்டுக்களில் மீனைப் பயன்படுத்தினர் எனக் கூறலாம். இதையே நாணயத்தில் மீனைக் குறிக்கும் மஜி என்ற பெயர் பொறிக்க காரணம் எனலாம்.

 

 

 

 

 

 

நாணயம் 10(நூல் இலக்கம் A3)

அடிக்குறிப்பு எண் ; 54

தென்னிலங்கையில் குதஹ என்ற பெயரில் நாணயங்களும், நாணய அச்சுக்களும் ஏனைய நாணயங்களை விட எண்ணிக்கையில் சற்றுக் கூடுதலாகக் கிடைத்துள்ளன (Bopeara chchi 1999:Nos 2.3.4). இலக்கிய நடையில் இரட்டிக்கும் ஒற்றுக்கள் தமிழ்ப் பிராமி வாசகங்களில் பெரும்பாலும் ஒற்றையாகவே வரும் (மகாதேவன் 2000:117). இதனால் நாணயத்தில் வரும் குதஹ என்ற பெயரைப் பொப்பியாராச்சி குத்தஹ என எடுத்துக் கொள்வது பொருத்தமாகும். இப்பெயர் முதன் முதலாகப் பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னனுக்குரிய பெயராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் முதல் வரலாற்று இலக்கியமான மகாவம்சம் என்ற நுால் வெளிநாட்டிலிருந்து குதிரைகளைக் கொண்டு வந்து விற்பனை செய்யும் கப்பல் தலைவனின் நாவாய்) பிள்ளைகளான சேன, குத்தம் என்ற தமிழர்கள் அநுராதபுரத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த சூரதீசனை வெற்றி கொண்டு 22 வருடங்கள் (கி.மு.177-155) நிதீ தவறாது ஆட்சி புரிந்தான் எனக் கூறுகிறது (XXI:10-11). இதில் வரும் குதக என்ற பெயர் சமகாலப் பிராமிக் கல்வெட்டுக்கள் பலவற்றில் வருகின்ற து (Paranavi thana 1970:Nos 43. 143.177.617.646. 828.842). இவற்றில் பெரும்பாலான கல்வெட்டுக்களில் இப்பெயருக்குரிவன் குடும்பத் தலைவனாகவே குறிப்பிடப்பட்டுள்ளான். இவற்றில் இருந்து இப்பெயர் பண்டைய இலங்கையில் பரந்த அளவில் புழக்கத்தில் இருந்தமை தெரிகிறது. இப்பின்னணியில் ஒரு நாணயத்தில் காணப்படும் பெயர் தமிழரோடு தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.

இந்நாணயம் 3.85 கிராம் நிறையும், 18 மில்லி மீட்டர் விட்டமும் உடையது. இதன் முன்புறத்தில் இடப்புறம் நோக்கிய நிலையில் யானை உருவமும், பின்புறத்தில் மேலே விளிம்பையொட்டி சுவஸ்திகா சின்னமும். கீழே விளிம்போடு ஒரு சின்னமும் உள்ளது. இது பிறைச் சந்திரன் என எடுக்கப்பட்டுள்ளது (Bopearachchi 1999:51). ஆனால் இதை நந்தி பாதமாக அல்லது “ம” என்ற பிராமி எழுத்தை ஒத்த குறியீடாகக் கருதலாம். இவ்விரு சின்னங்களையும் அடுத்து நான்கு பிராமி எழுத்துக்கள் உள்ளன. அவ்வெழுத்துக்கள் குதஹ என வாசிக்கப்பட்டு “ஹ”வுக்கு அருகில் உள்ள எழுத்தை மீன் சின்னமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்நாணயத்தில் காணக்கூடிய சிறப்பு இதன் முன்புறத்தில் யானையும், பின்புறத்தில் மீன் சின்னமும் இடம்பெற்றிருப்பதாகும். இச்சின்னங்கள் பெரும்பாலும் சங்க காலப் பாண்டிய நாணயங்களில் இடம் பெற்றுள்ளன. பொபி ஆராச்சி இதில் உள்ள யானையின் வடிவம் சங்க காலப் பாண்டிய நாணயங்களை ஒத்ததென்பதற்கு இரா.கிருஷ்ணமூர்த்தியின் நுாலைச் சான்றாதாரமாகக் காட்டுகிறார் (Bopearachchi 1999:51): இந்த ஒற்றுமையின் அடிப்படையில் இந்நாணயத்தை இங்கு வாழ்ந்த தமிழர்கள் பாண்டி நாட்டுடனான பூர்வீகத் தொடர்புகாரணமாக இச்சின்னங்கள் பொறித்த நாணயத்தை வெளியிட்டனர் எனக் கூறலாம்.

 

நாணயம் 11(நூல் இலக்கம் A26)

இந்நாணயம் 1.93 கிராம் நிறையும், 18 மில்லி மீட்டர் விட்டமும் உடையது. இதன் முன்புறத்தில் வண்டிச் சக்கரம் போன்ற அலங்கார வடிவமும், பின்புறத்தில் விளிம்பையொட்டி வட்டமாகப் பிராமி எழுத்துக்களும் உள்ளன. இதிலுள்ள எழுத்துக்களைப் பொபி ஆராச்சி திசா புத வ ணகர சந (tisa puta – – va nakara cana) எனவாசித்துள்ளார். இதில் முதலிரு எழுத்துக்களையும் திச எனவும் அடுத்த இரு எழுத்துக்களையும் புர எனவும் வாசிக்க முடிகிறது. ஆனால் அடுத்து “வ” என வாசிக்கப்பட்ட எழுத்தை “சா” அல்லது “தா” எனவும் அடுத்த எழுத்தை ” என் வாசித்து இதைச் சாட அல்லது தாட என எடுக்கலாம். அடுத்து ணகர ரசந் என வாசிக்கப்பட்ட எழுத்துக்களை ணாகா (ர) சங்ன் வாசிக்கலாம். இதில் ணாக என்ற பெயர் அப்படியே தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் வருகின்றது. ரசந் என வாசிக்கப்பட்டதை ரசன் என எடுக்கலாம். இதில் “ன்” என்ற எழுத்திற்குப் பதிலாக “ந்” என்ற எழுத்து தொடக்க காலப் பிராமிக் கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்பட்டதையும், அவற்றை “ன்” என வாசிப்பட்டதையும் ஏற்கனவே கூறியுள்ளோம். இதில் ரா(ர) சன் என்பது ராஜ என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவமாகும். இவற்றிலிருந்து இந்நாணய எழுத்துக்களை திஸ்புர சடணாக ராசன் அல்லது திஸ்புரதடணாகராசன் என என எடுக்க இடமுண்டு. இதற்கு சிவபுர அதாவது திச. புரத்தைச் சேர்ந்த சட அல்லது தட ணாகராசனின் நாணயம் என்பது பொருளாகும். இலங்கைப் பிராமிக்கல் வெட்டுக்களில் சுடநாக என்ற பெயர் பல இடங்களில் வருகின்றது (Paranavithana 1970:108). அப்பெயரின் இன்னொரு வடிவமாக நாணயத்தில் வரும் இப்பெயரைக் குறிப்பிடலாம். இந்நாணயத்தில் பிராகிருதமும் தமிழும் கலந்திருப்பதால் இதை இரு மொழிக் கலப்புள்ள நாணயம் எனக் கூறலாம். இதில் ராசன் என எடுக்கப்பட்ட சொல் சங்க இலக்கியத்தில் காணப்பட்டாலும் (ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன், புறம் 227), தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் வழக்கில் இருந்ததற்கு இதுவரை சான்றுகள் இல்லை. ஆனால் சமகாலத்தில் ஆந்திராவில் வெளியிட்ட ஒரே நாணயங்களில் மன்னனின் பெயர் தமிழ் மற்றும் பிராகிருத மொழிகளில் வெளியிடப்பட்டடிருப்பதுடன், அரசனைக் குறிக்கும் ராஞோ என்ற பிராகிருதச் சொல்லுக்கு அரசன் என்ற தமிழ்ச் சொல் பயன்படுத்தப்பட்டதையும் அதில் காணமுடிகிறது (Panneerselvam 1969:286). இவற்றின் அடிப்படையில் மேற்குறித்த நாணயத்தில் வரும் பெயரை திச புரத்தைச் சேர்ந்த சடணாகராசன் என்பவன் வெளியிட்டது எனக் கூறலாம். (படம் -11 பார்க்க பக். 41) சமகாலப் பிராமிக் கல்வெட்டுக்களில் நகர, புர என்ற பின்னொட்டுச் சொற்கள் ஆட்பெயர்களுடன் இணைந்து இப்பெயராக இருந்ததற்குப் பல சான்றுகள் உண்டு (Paranavi thana1970:112 115). இதில் திச புர என்ற இடம் இலங்கையில் எங்கிருந்தது என்பது தெரியவில்லை .

 

நாணயம் 12

அடிக்குறிப்பு எண் ; 57

தென்னிலங்கையில் கிடைத்தது போன்ற பிராமி எழுத்துப் பொறித்த நாணயங்கள் வடஇலங்கையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அவற்றைக் கண்டுபிடித்த நாணயவியலாளர் அதிலுள்ள எழுத்துக்கள் பற்றி எதுவுமே தனது நூலில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதற்குரிய புகைப்படங்களை நூலில் பிரசுரித்துள்ளார் (SeyoneC1998:84). ஆனால் புகைப்படங்கள் தெளிவற்றிருப்பதுடன் புகைப்படத்தில் உள்ள உருவங்கள் தெளிவு பெறுவதற்காக கோடிட்டுப் பின்னர் பிரகரிக்கப்பட்டிருப்பதால் நுாலில் உள்ள எழுத்துக்களின் சரியான வடிவங்கள் மாறியுள்ளன. இருப்பினும் ஒரு புகைப்படத்தில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக இருப்பதால் அதை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.

இது 32 கிராம் நிறையுடைய ஈய நாணயமாகும். இதன் எழுத்தமைதி கொண்டு இந்நாணயம் கி.மு.2,1ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததெனக் கூறலாம். நாணயத்தின் முன்புறத்தில் சிவலிங்கம் இருப்பதாக இந்நாணயத்தைக் கண்டு பிடித்த ஆசிரியர் சேயோன் குறிப்பிடுகிறார் (1998: 84). ஆனால் அதை ஸ்ரீவத்ஷா எனக் கூறுவதே பொருத்தமாகும். இவ்வடிவத்தை சங்ககாலப் பாண்டியர் வெளியிட்ட நாணயங்களில் சிறப்பாகக் காணமுடிகிறது. இதற்கு இடப்புறத்தில் வலப்புறம் நோக்கிய நிலையில் மயில் ஒன்று காணப்படுகிறது. வலப்புறத்தில் மனிதன் போன்ற உருவம் இருப்பதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். பான்யத்தின் பின்புறத்தில் விளிம்பை ஒட்டி ஒரு மிருகத்தின் தலை காணப்படுகிறது. இதன் இடது, வலது புறமாக ஏழு பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. அதில் மூன்று எழுத்துக்கள் தெளிவற்றுள்ளன. ஏனைய எழுத்துக்களை உதிஹபான் என வாசிக்கலாம். ஆனால் ஆறுமுக சீதாராமன் இதை உதியன் என வாசிக்கிறார். வாசிப்பில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் நாணயத்தில் வரும் பெயரின் இறுதி “அன்” என்ற விகுதியோடு முடிவதால் இது ஒரு தமிழ்ப் பெயர் என்பது தெளிவாகிறது. அண்மையில் இதே வட்டாரத்தில் களவாய்வை மேற்கொண்ட கிருஷ்ணராஜா பிராமி எழுத்தில் சிவ என்ற பெயர் பொறித்த நாணயம் ஒன்றைக் கண்டுபிடித்ததாக தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் (1998:51-2). நாணயத்தின் புகைப்படமோ பிற விபரங்களோ நூலில் கொடுக்கப்படாததால் மேலும் விபரங்களைக் கொடுக்க முடியவில்லை. சிவ என்ற பெயரில் சில நாணயங்கள் தென்னிலங்கையில் இடைத் துள்ளன (Bopearachchi 1999: NosA13, 114). இப்பெயரில் பண்டைய கால இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்ததற்குச் சில சான்றுகள் பாளி இலக்கியங்களில் உண்டு (M.VARKXV:46-48). சிவ என்ற பெயர் சிவ வழிபாட்டுடன் அப்பெயருக்குள்ளவனுக்குரிய தொடர்பைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தென்னிலங்கையில் கிடைத்த ஸிவ என்ற பெயர் கொண்ட நாணயத்தின் முன்புறத்தில் சிவனுக்குரிய நந்தி பாதம் காணப்படுகிறது (Bopearachchi 1999: Nos A13).

நாணயங்களும் மக்களும்

இதுவரை கூறப்பட்டவற்றிலிருந்து கி.மு.2ஆம் நூற்றாண்டு முதல் தமிழ் எழுத்துப் பொறிப்புள்ள நாணயங்கள் இலங்கையில் பயன்பாட்டிலிருந்தமை தெரிகிறது. ஆனால் இவற்றை வெளியிட்டவர்கள் இலங்கைத் தமிழர்களா? அல்லது தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்களா? என்பதில் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இவற்றை இலங்கையில் பண்டு தொட்டு வாழ்ந்து வந்த தமிழர்களே வெளியிட்டார்கள் என்பதற்கு நாணயங்களில் உள்ள எழுத்துக்களுக்குரிய ஒலிப்பெறுமானத்தை அப்படியே கொடுத்து சமகாலத்தில் இலங்கையில் பயன்பாட்டிலிருந்த கல்வெட்டுக்களோடு தொடர்பு படுத்துகிறேன். ஆனால் மகாதேவன் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்களே வெளியிட்டார்கள் என்பதற்குத் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களிலும், சங்க இலக்கியத்திலும் வரும் பெயர்களை நாணயங்களில் வரும் எழுத்துக்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறார். இங்கே எழுத்துக்களைக் கொண்டு பெயர்களை வாசிப்பதா? அல்லது ஏற்கனவே அறியப்பட்ட பெயர்களைக் கொண்டு நாணயங்களில் உள்ள எழுத்துக்களை வாசிப்பதா? என்ற கேள்வியும் தொக்கி நிற்கின்றது.

இந்த இடத்தில் அக்குறுகொட என்ற இடத்தில் கிடைத்த நான்கு தமிழ் நாணயங்கள் தொடர்பாக மகாதேவன் அவர்கள் எழுதிய கட்டுரைகளில் கூறிய முக்கிய கருத்துக்கள் நோக்கத்தக்கன. நாணயங்களில் உள்ள பெயர்கள் அன்” என்ற வித்தியில் முடிவதால் இவை அனைத்தும் தமிழ்ப் பெயர்களாகும். அத்துடன் தமிழ்ப் பிராமிக்கே சிறப்பான “னகரம்” நான்கு நாணயங்களிலும் காணப்படுகிறது. தமிழ் நாட்டில் இதுவரை கிடைத்த இரு பாண்டியப் பெருவழுதி நாணயங்களைப் போல் இவையும் கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொடக்க கால நாணயங்களாகக் கூறமுடியும். இந்நாணயங்களிலிருந்து தென்னிலங்கையில் குடியேறிய தமிழ் வணிகக் குழுக்கள் இலங்கையின் பிறவட்டாரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும். இங்கு கிடைத்த நவரத்தினக் கற்களையும், அவற்றிலிருந்து பெறப்பட்ட பாசி மணிகளையும் ஏற்றுமதி செய்தனர் என்பதையும், தமிழ் மொழியில் தங்கள் பெயரில் நாணயங்கள் வெளியிரும் உரிமையைத் தென்னிலங்கையில் குடியேறியிருந்த வணிகக் குழுக்களின் தலைவர்கள் பெற்றிருந்தனர் என்பதும் ஒரு சிறப்பான செய்தியாகும் (மகாதேவன் 2000).

ஆனால் இந்நாணயங்களை தமிழ் நாட்டிலிருந்து குடியேறிய வணிகக் குழுக்கள் வெளியிட்டவை எனக் கூறும் போது சில ஐயட்பாடுகள் எழுகின்றன. தமிழ் நாட்டில் இதுவரை கிடைத்த காலத்தால் முந்திய தமிழ் நாணயங்கள் சங்க கால மூவேந்தராலும், மலையமான் போன்ற குறுநில மன்னர்களாலும் வெளியிடப்பட்டவை. அவற்றுள் எழுத்துப் பொறிப்புள்ள தமிழ் நாணயங்களை பாண்டிய, சேர மன்னர்கள் மட்டுமன்றி மலையமான் போன்ற குறுநில மன்னர்களும் வெளியிட்டுள்ளனர் என்ற கருத்துக் கூறப்படுகிறது (Krishnamurthy 1997). ஆனால் எந்த இடத்திலும் வணிகக் குழுக்கள் அல்லது பிற தலைவர்கள் தமிழ் நாட்டில் நாணயங்களை வெளியிட்டதற்கு இது வரை சான்றுகள் கிடைக்கவில்லை. அப்படியிருக்கும் போது இலங்கையில் குடியேறிய தமிழ் நாட்டு வணிகக் குழுக்கள் நாணயங்களை வெளியிட்டார்கள் எனக் கூறுவது தமிழகப் பின்னணியில் பொருத்தப்பாடாக இல்லை. இவர்களே நாணயங்களை வெளியிட்டிருந்தால் சமகாலத்தில் தமிழகத்தில் வழக்கிலிருந்த சங்க கால நாணய மரபின் செல்வாக்கு இலங்கையில் வெளியிடப்பட்ட நாணயங்களிலும் இருந்திருக்கும். ஆனால் அப்படிக் குறிப்பிட்டுக் கூறக் கூடிய அம்சத்தை சிறப்பாக வடிவமைப்பில் காணமுடிய வில்லை. மாறக இத்தமிழ் நாணயங்களுக்கும் பிராகிருத மொழிப் பெயர்கள் கொண்ட நாணயங்களுக்கும் இடையே ஒரே நாணய மரபு எனக் கூறக்கூடிய வகையில் ஒற்றுமை காணப்படுகிறது. குறிப்பாக நாணயங்களில் சுவஷ்திகா சின்னத்தைப் பொறிக்கும் மரபு இந்தியாவின் பண்டைய நாணயங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஆனால் பீடத்துடன் கூடிய சுவஸ்திகாவை இலங்கையில் கிடைத்த நாணயங்களில் மட்டுமே காணமுடிகிறது. இது இலங்கைக்கே உரிய தனித்துவமான அம்சம் என்று கூறலாம். இதன் தொடக்கம் இலங்கையின் பெருங்கற்கால மட்பாண்டங்களிலும், பிராமிக் கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றது. சமகால தமிழக மற்றும் இந்தியப் பெருங்கற்கால மட்பாண்டங்கள், கல்வெட்டுக்களில் இவற்றைக் காணமுடியவில்லை. இவற்றிலிருந்து மேற்குறிப்பிட்ட தமிழ் நாணயங்கள் இலங்கைக்குரிய நாணய மரபை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டவை என்பதை உறுதிபடக் கூறமுடிகிறது.

இலங்கையின் ஆரம்ப கால வெளிநாட்டு வர்த்தகம் தமிழகத்துடன் இணைந்த நிலையிலேயே வளர்ச்சியடைந்தன என்பதற்குப் பாளி இலக்கியங்களிலும், பிராமிக் கல்வெட்டுக்களிலும் பல சான்றுகள் உள்ளன. தொலமி என்ற வெளிநாட்டு யாத்திரிகர் தனது நூலில் கி.பி.1 ஆம் நூற்றாண்டு வரை ரோமர் இலங்கை செல்லாமலே இலங்கைப் பொருட்களைத் தென்னிந்தியத் துறைமுகங்களில் பெற்றதாகவும், அதே போல் இலங்கைக்குத் தேவையான ரோமப் பொருட்களை வர்த்தகர்கள் தென்னிந்தியத் துறைமுகங்களில் பெற்றுத் திருப்தியடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் (Warmington 1928:63). இவ்வர்த்தகத்தில் இலங்கை , ஆந்திர வணிகர்களுடன் தமிழ் நாட்டு வணிகர்களும் இடைத் தரகர்களாகச் செயல்பட்டதற்குப் பல சான்றுகள் உண்டு. தமிழகத்தை அடுத்து கூடுதலான சங்க கால நாணயங்கள் இலங்கையில் கிடைத்து வருவதற்கு இவ்வர்த்தகத் தொடர்புதான் முக்கிய காரணம் எனக் கூறலாம். ரோம நாட்டுடன் தமிழகத்திற்கு ஏற்பட்ட நெருக்கமான வணிகத் தொடர்பால் ரோம நாணயகள் தமிழ் நாட்டு அக்கசாலையில் வெளியிடப்பட்டன. இலங்கையில் கிடைத்த காலத்தால் முந்திய ரோம நாணயங்கள் தமிழகத்தில் வெளியிடப்பட்டவை. இவை தமிழ் நாட்டு வணிகர்களால் இங்கு கொண்டு வரப்பட்டவையாக இருக்கலாம். இதற்கு ரோம் நாட்டுடனான இலங்கையின் ஆரம்ப கால வர்த்தகம் தமிழகத்துடன் இணைந்து வளர்ச்சியடைந்ததே காரணமாகும். இவ்வாறு தமிழகத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள் சமகாலத்தில் இலங்கையில் கிடைக்கும் போது, வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்ட தமிழ் நாட்டு வணிகக் குழுக்களே மேற்கூறப்பட்ட தமிழ் நாணயங்களை இலங்கையில் வெளியிட்டிருந்தால் அவை தமிழகத்திலும் கிடைத்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் இதுவரை இவ்வகையைச் சேர்ந்த ஒரு நாணயமாவது தமிழகத்தில் கிடைத்ததற்குச் சான்றில்லை. அப்படியிருக்கும் போது எப்படி இந்நாணயங்களை தமிழ் நாட்டு வணிகக் குழுக்களுடன் தொடர்புபடுத்தலாம் என்பது தெரியவில்லை. ஆகவே இவற்றை இலங்கைத் தமிழர்களே வெளியிட்டிருக்கலாம் என்பதற்கும், அவை ஏன் இலங்கைக்குள் மட்டும் பெரும்பாலும் புழக்கத்தில் இருந்தன என்பதையும் கண்டறிய வேண்டியுள்ளது. அதற்கு முன்னோடியாக அவற்றைத் தமிழகத்துடன் தொடர்புபடுத்துவதற்கான வரலாற்றுப் பின்புலத்தையும் நோக்க வேண்டியுள்ளது.

இலங்கைப் பிராமி எழுத்து, மொழி பற்றி தமிழ் நாட்டு அறிஞர்களிடையே வேறுபட்ட வரலாற்று அணுகு முறைகள் காணப்படுகின்றன. அண்மைக் காலத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் போது பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்ட ஓடுகளில் பிராகிருதம் மற்றும் தமிழ் பெயர்கள், சொற்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள பிராகிருதப் பெயர்கள் சொற்களை இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களுடன் தொடர்புபடுத்தி சிங்களப் பிராமி எனப் பெயரிடப்பட்டுள்ளது (Mahan avan 1994:1 19 1996:287-315, 2000:116-120. இராஜவேலு 1994:154). ஆனால் அதேகாலகட்டத்திற்குரிய மட்பாண்டங்களில் வரும் தமிழப் பெயர்களை இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களுடன் தொடர்புபடுத்தி இலங்கைக்குரிய தமிழ்ப் பெயர்களாகக் கூறுவதில்லை. மாறாகத் தமிழகத்தில் வழக்கிலுள்ள பெயராகப் பார்க்கப்படுகிறது. இதற்கு அரிக்கமேட்டில் பெறப்பட்ட மட்பாண்ட எழுத்துக்களைக் குறிப்பிடலாம் (Mahadevan 1996:287-315). ஆனால் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் பிராகிருதப் பெயர்கள், சொற்கள் வரும் போது அவற்றைச் சிங்கள் பிராமி எனவோ அல்லது தமிழ் மயப்படுத்தப்பட்ட சிங்களப் பெயராகவோ கூறுவதில்லை. மாறாக தமிழ் மயப்படுத்தப்பட்ட பிராகிருதமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இலங்கையில் பெரிதும் வழக்கிலிருந்த கஸப என்ற பெயர் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் கசபன், காசிபன் என வருவதை இங்கு குறிப்பிடலாம் (Mahadevan 1966:Nos.40, 29). இந்நிலையில் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழருக்குரிய பெயராகக் கூறப்படும் பிராகிருதப் பெயர்களை ஒத்த சில பெயர்கள் தமிழக மட்பாண்டங்களில் கிடைத்த போது அப்பெயர்கள் இலங்கைத் தமிழரைக் குறிக்கிறதா? அல்லது தமிழ் நாட்டுத் தமிழரைக் குறிக்கிறதா? என்பதைக் கண்டறிவதில் மௌனம் சாதிக்கப்படுகிறது. மாறாக இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளில் வரும் தமிழரோடு தொடர்புடைய செய்திகளைத் தமிழ் நாட்டுக்குரிய சான்றுகளாக நோக்கப்படுகிறது. இவ்வரலாற்றுப் பார்வை இலங்கை மண்ணோடு ஒட்டிய இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்று உண்மைகள் மேலும் தொய்ந்து போவதற்குக் காரணமாக அமைகின்றன. இந்நிலையில் மேற் கூறப்பட்ட நாணயங்களை இலங்கைத் தமிழர்களே வெளியிட்டார்கள் என்பதற்கு இலங்கைத் தமிழர் தொடர்பான சில சான்றுகளைக் குறிப்பிடுவது அவசியமாகிறது.

இலங்கையில் வாழ்ந்து வரும் சிங்கள மக்களின் முதாதையினர் கி.மு.6ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்களின் வழித்தோன்றல்கள் எனவும், தமிழர்கள் பிற்காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து வர்த்தகர்களாக, படையெடுப்பாளர்களாக வந்து குடியேறிய சிறுபிரிவினர் எனவும் கட்டிக் காக்கப்பட்ட இரண்டாயிரம் ஆண்டு காலப் பாரம்பரிய வரலாற்று நம்பிக்கை அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகளின் மூலம் சிங்கள அறிஞர்களே மறு ஆய்வு செய்ய முற்பட்டுள்ளனர். இதுவரை கிடைத்த நுண் கற்கால (Mesolithic Culture), பெருங்கற்காலச் (Megalithic Culture) சான்றுகள் கி.மு. 28000 ஆண்டுகளில் இருந்து தென்னிந்தியா குறிப்பாக தமிழகத்தில் இருந்து மக்கள் காலத்திற்கு காலம் புலம்பெயர்ந்திருக்கலாம் என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றன (Goonetilleke 1980:22-29, Sitampalam 1980, Seneviratne1984:237-307, Ragupathy 1987). இப்பண்பாட்டு வழிவந்த மக்களில் ஒரு பிரிவினர் கி.மு. 3 ஆம் நுாற்றாண்டில் இந்தியாவிலிருந்து பௌத்த மதம் அறிமுகமாகிய போது அம்மதத்திற்கு மாறினர் மற்றும் ஆதரித்தனர் என்பதை இப்பண்பாட்டுமையங்களை அண்டிக் காணப்பட்ட 2000ற்கு மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன (Paranavithana 1970,1983). இம்மதத்துடன் வடபிராமி எழுத்தும், பாளி, பிராகிருத மொழியும் அறிமுகமாகியதை இக்கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன. இம்மொழிகள் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த மொழிகளுடன் கலந்தே பிற்காலத்தில் சிங்கள மொழி தோன்றியதென்பது அறிஞர்களின் கருத்தாகும்.

ஆனால் பௌத்த மதத்துடன் வடபிராமி அறிமுகப்படுத்தப் படுவதற்கு முன்னரே தமிழ்ப் பிராமி புழக்கத்தில் இருந்ததற்குச் சான்றுகள் உண்டு (Karunaratne 1960). இதன் பயன்பாடு வடபிராமியின் செல்வாக்கால் படிப்படியாக குறைவடைந்து சென்றாலும் அது முற்றாக மறையவில்லை என்பதை இலங்கை, தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களிடையே காணப்படும் ஒற்றுமைகள் உறுதிப்படுத்துகின்றன. இந்தியாவில் வடபிராமி எழுத்துக்கள் கல்தூண்களிலும், பாறைகளிலும் பல வரிவடிவங்கள் கொண்டதாக எழுதப்பட்டன. ஆனால் இலங்கையிலும் தமிழகத்திலும் ஒரே பிராந்தியத்திற் குரியதெனக் கருதும் அளவிற்கு சமயத் துறவிகளின் குகைகளில் ஓரிரு வரிகளில் எழுதப்பட்டுள்ளன. வடபிராமியில் கூட்டெழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இம்மரபு இலங்கையிலும் தமிழகத்திலும் பின்பற்றப்படவில்லை. தமிழ்ப் பிராமியில் பயன்படுத்தப்பட்ட அ, இ, க, ம, ர, பால , வ, போன்ற எழுத்துக்களின் வடிவமைப்பு இலங்கைப் பிராமிக் கல்வெட்டு எழுத்துக்களுடன் பொதுத் தன்மை கொண்டு காணப்படுகின்றன (Pernando 1949:282-301). இவற்றைவிட தமிழ் மொழிக்கே உரிய ள் , ழ, ற, ன போன்ற எழுத்துக்கள் சமகாலத்தில் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் பயன்படுத்தப் பட்டுள்ளமை சிறப்பாகக் கவனத்தில் கொள்ளத்தக்கது.

கல்வெட்டு மொழியைப் பொறுத்தவரை பௌத்த மதம் பரவிய இடங்களிலெல்லாம் பிராகிருதமே கல்வெட்டு மொழியாக இருந்துள்ளது. ஆனால் இலங்கையின் கல்வெட்டு மொழியாகப் பிராகிருதம் இருந்த போதிலும் அதில் தமிழ் மொழியின் செல்வாக்கை நான்கு அம்சங்களில் காணமுடிகிறது. 1) தமிழ்ச் சொற்கள் அப்படியே கல்வெட்டுக்களிலும் எழுதப்பட்டுள்ளன. இதற்கு குடா , குடி, வேள், ஆய், பரத, மகள், மருமகன், மருமான், மருக போன்றனவற்றைக் குறிப்பிடலாம். 2) சில தமிழ்ப் பெயர்கள் பிராகிருதப்படுத்தப் பட்டுள் ளன. இதற்கு பருமக (பெருமகன்), பெருமகள் (பருமகள் ) உதிய (உதியன்), சுட, சுள (சோழ) போன்றனவற்றை உதாரணங்களாகக் குறிப்பிடலாம். 3) பிராகிருத மற்றும் வடமொழிச் சொற்கள் தமிழ்மயப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக நகர் (நஹா ), நாக (நாஹ ), விகார (விஹா), பூசிய (பூஜிய) என்பவை குறிப்பிடத்தக்கன (புஷ்பரட்ணம் 2000:1-41). தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் சில பிராகிருத சொற்களுக்குரிய எழுத்துக்கள் வடபிராமியில் எழுதப்பட்டிருக்கும் போது இலங்கையில் அவை தமிழ் மயப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணாக தமிழ் நாட்டில் ஆஸிரிய என்ற பெயரில் வடபிராமி “ஸி” பயன்படுத்தப்பட்டிருக்கும் (Mahadevan 1966:No.1) போது இலங்கைப் பிராமிக் கல்வெட்டில் இப்பெயரில் தமிழுக்குரிய “சி” பயன்படுத்தப்பட்டிருப்பதை குறிப்பிடலாம் (I.C. 1970No. 75).

தமிழ் மொழியின் தொடக்க காலக் கல்வெட்டுச் சான்றாக தமிழ் நாட்டில் உள்ள பிராமிக் கல்வெட்டுக்கள் கூறப்படுகின்றன. இவற்றின் தொடக்க காலம் கி.மு.3ஆம் நூற்றாண்டெனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இங்கே எழுத்தும், மொழியும் சமகாலத்தில் தோன்றியிருக்க முடியாது. இதனால் எழுத்துக்கள் தோன்றுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் மொழியிருந்ததெனக் கூறலாம். குறிப்பிட்ட எழுத்தும், மொழியும் கல்வெட்டுக்களில் இடம் பெறுவதற்கு அம்மொழி பேசிய மக்கள் வாழ்ந்ததே காரணமாகும். இலங்கையில் தமிழ்ப் பிராமியும், தமிழ் மொழியும் பிராமிக் கல்வெட்டுக்களில் வந்துள்ளமை இங்கு கல்வெட்டுக்கள் தோன்றும் முன்னரே தமிழ் மொழி பேசிய மக்கள் வாழ்ந்ததைக் காட்டுகின்றன. இவற்றிலிருந்து நாணயங்கள் தோன்றும் முன்னரே தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்து வந்துள்ளனர் எனக் கூறலாம்.

இந்த இடத்தில் இலங்கை ளணயங்களிலும், கல்வெட்டுக்களிலும் வரும் பிராமி எழுத்தை இலங்கை அறிஞர்கள் சிலரைப் போல் தமிழ் நாட்டு அறிஞர்களும் சிங்களப் பிராமி எனக் கூறுவது எந்தளவுக்குப் பொருத்தம் என்பதும் ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டியுள்ளது. முன்னர் குறிப்பிட்டது போல் பௌத்த மதம் பரவிய வட்டாரங்களில் எல்லாம் பிராகிருதமே கல்வெட்டு மொழியாக இருந்துள்ளது. இதற்கு தமிழ் நாடு விதிவிலக்காக இருந்த போதிலும் அங்கும் பல பிராகிருதச் சொற்களைக் காணலாம். ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் சுதேச மொழிகள் இருந்தும் அங்கு கி.பி.5ஆம் நூற்றாண்டு வரை பிராகிருதமே கல்வெட்டு மொழியாக இருந்துள்ளது (Ragupathy 1991). ஆனால் அரிதாகச் சில சுதேச மொழிச் சொற்களைக் காணமுடிகிறது. இலங்கையைப் பொறுத்தவரை பராகிருதம் கல்வெட்டு மொழியாக இருந்தும் ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் தமிழ் மொழிப் பெயர்கள், சொற்கள் கல்வெட்டுக்களில் பான்படுத்தப்பட்டிருப்பதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்கள் தமிழ்ப் பிராமி என அழைக்கப்பட அவை தமிழ் மொழியில் எழுதப்பட்டமை காரணமாகும்.

இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகள் தமிழ் மொழியின் செல்வாக்குக்கு உட்பட்ட நிலையில் பிராகிருத மொழியில் எழுதப்பட்டவை. இப்பிராகிருதமொழி சமகாலத்தில் ஆந்திரம் மற்றும் வட இந்திய வட்டாரத்தில் வழக்கில் இருந்த மொழிகளுடன் பொதுத்தன்மை கொண்டவை (Karunarate 1984). அவற்றுள் இருபத்தைந்துக்கு மேற்பட்ட பெயர்கள், சொற்கள் சமகாலத் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்பட்டவற்றைப் பெருமளவு ஒத்துள்ளன (புஷ்பாட்டணம் 2000:16-24). இலங்கைக்கேயுரிய தனித்துவமான ஒருசில பெயர்கள், சொற்கள் பிராகிருதமயப்படுத்தப்பட்ட நிலையில் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. இவை ஏற்கனவே இங்கு வழக்கிலிருந்த ஒஸ்ரிக், திராவிட மொழிக்குரியவை என்பது அண்மைக்கால மொழியியல் ஆய்வுகளால் தெரியவந்துள்ளன (Gunawardhana 1973). இலங்கையில் சிங்கள மொழிக்கல்வெட் டுக்கள் கி.பி.8, 9 ஆம் நூற்றாண்டின் பின்னரும், சிங்கள இலக்கி யங்கள் 12ஆம் நூற்றாண்டின் பின்னருமே தோன்றியவை என்பது பொதுவான கருத்து. இந்நிலையில் இலங்கைப் பிராமிக் கல்வெட் டுக்களை எவ்வாறு சிங்களப் பிராமி என அழைக்கலாம் என்பது தெரியவில்லை.

பிராமிக் கல்வெட்டு எழுத்திலிருந்தும், பாளி, பிராகிருத மொழிகளிலிருந்தும் பிற்காலத்தில் இலங்கையில் சிங்கள் எழுத்தும், மொழியும் தோன்றி வளர்ந்தன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவை தமிழ் மொழி வளர்ச்சிக்கும் காரணமாக இருந்துள்ளது. என்பதையும் மனக்கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக இன்று சிங்கள மொழி இடப்பெயர்களில் கணிசமானவை கம, கமுவ, நகர, புர போன்ற பின்னொட்டுச் சொற்களோடு வருகின்றன. இவை தமிழ் இடப்பெயர்களில் கமம், காமம், நகர், புரம் என வருகின்றன. ஆனால் தமிழர்கள் பிற்காலத்தில் வந்து இலங்கையில் குடியேறிய வர்கள் என்ற கருத்துடையோர் முன்பு சிங்கள மக்கள் வாழ்ந்த இடங்களே பின்னர் தமிழ் மயப்படுத்தப்பட்டதென்பதற்கு இப் பெயர்களையும் சான்று காட்டி வாதிடுகின்றனர் (Kannangara 1984). ஆனால் இப்பெயர்களின் வரலாற்றைப் பின்நோக்கி ஆராய்ந்தால் அவை பிராகிருத மொழியில், புர, நகர, கம என இலங்கையின் பண்டைய கால இடப்பெயர்களின் பின்னொட்டுச் சொற்களாக கல்வெட்டுக்களில் வருவதனைக் காணலாம் (Paranavithana 1970.CXXIV-CXXVIII). இப்பெயர்கள் இலங்கையில் மட்டுமன்றி பிராகிருதமொழி பரவிய ஆந்திரம், கர்நாடகம் போன்ற இடங்களிலும் இருந்துள்ளன. இப்பெயர்கள் அங்கும் பிற்காலத்தில் புழக்கத்தி லிருந்ததை கி.பி. 10ஆம், 11 ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டுக் களில் வரும் கம, காம, புரமு, நகரு போன்ற இப் பெயர்களிலிருந்து கண்டு கொள்ளலாம் (Ramachchandramurthy 1985:323, 283 84,224-5).

எனவே மேற்கூறப்பட்ட ஆதாரங்களிலிருந்து இலங்கையில் கிடைத்த பண்டைய தமிழ் நாணயங்களை இலங்கையில் பண்டு தொட்டு வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் தமிழ், பிராகிருத மொழியிலும், தமிழ் – பிராகிருத மொழிகள் கலந்த நிலையிலும் வெளியிட்டிருப்பார்கள் என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றன எனலாம். ஆனால் சங்க காலத் தமிழகத்தைப் போல் தமிழ் மொழியில் நாணயங்களை வெளியிட்ட மக்கள் ஏன் பிராகிருதம் மற்றும் பிராகிருதம் தமிழ் மொழி கலந்த நிலையில் நாணயங்களை வெளிட்டார்கள் என்பதும், அவ்வகை நாணயங்கள் ஏன் தமிழகம் போன்ற நாடுகளுக்குச் சென்றடையவில்லை என்பதும் முக்கிய கேள்வியாக எழுகின்றன.

இலங்கை கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் இந்திய, மேலைத்தேய நாடுகளுடனும், பிற்காலத்தில் அரேபிய, கீழைத்தேய நாடுகளுடனும் கடல் சார் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்கு உறுதியான பல சான்றுகள் உண்டு. இதற்கு இலங்கையின் பல வட்டாரங்களில் கிடைத்த அயல்நாட்டு நாணயங்களே சிறந்த சான்றாகும் (Codrington1924, Bopearachchi 1998,1999). இதே காலப்பகுதியில் இலங்கையில் பல வகையான நாணயங்கள் வெளியிடப்பட்டதற்கு உறுதியான சான்றுகள் உண்டு (Bopearachchi 1998, 1999). ஆனால் கி.பி. 10 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை எனக் கூறக் கூடிய நாணயங்களில் லஷ்மி உருவம் பொறித்த ஒருசில நாணயங்கள் கரூரிலும் (Nagaswamy199537-39), சிங்க உருவம் பொறித்த நாணங்கள் தமிழ் நாட்டில் அரிதாகவும் (Ellot1970:153) கிடைத்ததைத் தவிர பிற நாணயங்கள் எவையும் இலங்கைக்கு வெளியே கிடைத்ததாகத் தெரியவில்லை. இவற்றை நோக்கும் போது வெளிநாட்டு வர்த்தகத்தில் இலங்கை நாணயங்கள் அதிகம் பயன்படுத்தப்படவில்லை என்றே கருதவேண்டியுள்ளது.

ஆனால் பாளி இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் கி. மு. 3 ஆம் நுாற்றாண்டு முதல் நாணயத்தின் பயன்பாடு இருந்ததற்கான சான்றுகள் தொடர்ச்சியாக உள்ளன. இச்சான்றுகள் பெரும்பாலும் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைளோடு தொடர்புப்படுத்தப்படாது, பௌத்தமத நடவடிக்கைகளுடன் சிறப்பாக விகாரைகள் கட்டுவது, திருத்தி அமைப்பது, குருமாருக்கு தானம் ளிப்பது போன்றவற்றிற்காகச் சமூகத்தில் உயர் நிலையில் இருந்த மக்கள் அளித்த நன்கொடை பற்றிய செய்திகளோடு தொடர்பு டையவையாகவே வருகின்றன. உதாரணமாக கி.மு. 2 ஆம் நூற்றாண் டில் இலங்கையில் ஆட்சி புரிந்த எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இறந்து போன விகாரையைப் புதுப்பிக்க பதினையாயிரம் நாணயங்களைக் கொடுத்தான் என்ற செய்தியையும் (M.V.XXXVI:39), கிபி. 2ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த ஸ்ரீநாக என்பவன் முந்நூறாயிரம் நாணயங்களைப் பௌத்த பிக்குகளுக்கு கொடுத்தான் என்ற செய்தியையும் (MV.XXI:26) எடுத்துக்காட்டலாம். அத்துடன் இக்காலப்பகுதியில் வெளியிடப்பட்ட ஏனைய சிலவகை நாணயங்களை நோக்கும் போது அவற்றின் அமைப்பு எடை, சின்னங்கள் போன்றவை இந்திய நாணயமரபில் இருந்து பெருமளவு வேறுபட்டு ஒரு பெளத்தமதத்திற்குரிய சின்னமாகவே காணப்படுகின்றன. இதற்கு திஸ, சுவஸ்திகா – வேலியிடப்பட்ட மரம், சுவஷ் திகா – யானை, சுவஷ்திகா – சிங்கம் போன்ற சின்னங்களின் அடிப்படையில் பெயரிடப்பட்ட நாணயங்களைக் குறிப்பிடலாம் (Codrington 1924, 20.22 23). இந்த அம்சத்தை நாம் ஆய்வுக்கு உட்படுத்திய நாணயங்களிலும் காணமுடிகிறது. இந்த இடத்தில் சமகாலப் பிராமிக் கல்வெட்டுக்களை நோக்கும் போது அவை அனைத்தும் பௌத்த மதத்திற்கு சமூகத்தின் பலதரப்பட்ட மக்கள் அளித்த தானங்களையே முதன்மைப்படுத்திக் கூறுகின்றன. அதில் வரும் பெயர்களில் தொண்ணூறு விழுக்காடு நாணயங்களில் வரும் பெயர்களை ஒத்துள்ளன. இவற்றின் அடிப்படையில் பிராமி எழுத்துப் பொறித்த நாணயங்கள் பெருமளவுக்கு பௌத்த மதத்திற்கு கொடையளிப்பதையும், உள்நாட்டு வர்த்தகத்திற்குப் பயன்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு வெளியிடப்பட்டதெனக் கூறலாம்.

இதில் தமிழர்கள் தமிழ் மொழியுடன், பிராகிருத மொழியிலும் நாணயங்களை வெளியிட்டமைக்கான காரணத்தை அதன் பயன்பாட்டு நோக்கத்தின் பின்னணியில் பார்க்க வேண்டும். இன்று சிங்கள் மக்களில் பெரும்பான்மையோர் பௌத்தர்களாகவும், தமிழர்கள் இந்துக்களாகவும் இருப்பதைக் கொண்டு பண்டைய காலத்திலும் அவ்வாறே இருந்ததெனக் கூறமுடியாது. பெளத்த மதம் பரவ வடஇந்தியத் தொடர்பு ஒரு காரணமாக இருப்பினும் அது வளர தென்னிந்தியாவின் பங்களிப்பே அடிப்படையாக இருந்தது. அதிலும் மகாயான பெளத்தம் பரவ தமிழ் நாட்டுத் தொடர்பே முக்கிய காரணமாக இருந்தது. இதனால் தமிழ் நாட்டைப் போல் இங்கு வாழ்ந்த தமிழர்களில் ஒரு பிரிவினர் பௌத்த மதத்தைப் பின்பற்றவும், ஆதரிக்கவும் வாய்ப்பிருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் தமிழர்கள் பௌத்தர்களாகவும், அம்மதத்தை ஆதரித்தவர்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். பாளி இலக்கியங்கள் இலங்கையில் கி.மு. 2 ஆம், 1ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்கள் சிலர் தமது மதநம்பிக்கையைக் கைவிடாத போதிலும் பெளத்த மதத்திற்கு ஆதரவு கொடுத்ததாகக் கூறுகின்றன (M.V.XXI:134). கி.பி. 5ஆம் நூற்றாண்டில் அநுராதபுரத்தில் பாண்டு (கி.பி. 436-441), அவன் மகன் பரிந்த (441-444), இவனின் தம்பி குட்டபரிந்த (444-460), திரிதரன், தாடிகன் (460-463), பிட்டியன் (463) ஆகிய தமிழர்கள் மாறிமாறி இருபத்தியேழு ஆண்டுகள் ஆட்சி புரிந்த போது அவர்களில் சிலர் பௌத்தர்களாகவும், பௌத்த மதத்தை ஆதரித்தவர்களாகவும் இருந்தனர். இதைத் தென்னிலங்கையில் அறகம என்ற இடத்தில் கிடைத்த பரிந்தனின் கல்வெட்டும், கதிர்காமத்தில் கிடைத்த தாடிகனின் கல்வெட்டும் கூறுகின்றன. அதேபோல் 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்த குட்டபரிந்தனின் அநுராதபுரக் கல்வெட்டு இம்மன்னனும், மனைவியும் பௌத்த மதத்திற்கு ஆற்றிய பணிகளைக் கூறுவதுடன் இவனைப் பரிதேவன் எனவும், புத்ததாசன் எனவும் வர்ணிக் கின்றது (E.Z.IV:111-115).

இம்மன்னர்கள் தமிழராக இருந்தும் பிராகிருதத்தையே கல்வெட்டு மொழியாகப் பயன்படுத்திமை மொழிக்கும் மதத்திற்கும் இடையேயுள்ள பிணைப்பைக் காட்டுவதாக எடுத்துக் கொள்ளலாம். சங்க காலத்தில் கல்வெட்டு மொழியாக தமிழ் இருந்தும் சமண மதம் பற்றிக் கூறப்படும் இடங்களில் அம்மத மொழியான பிராகிருதமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆந்திராவில் சுதேச மொழியிருந்தும் இந்நாட்டையாண்ட சாதவாகனர் தமது நாணயங்களில் தமிழையும், பிராகிருதத்தையும் பயன்படுத்தினர் (Nagaswamy 1981). பல்லவர் தமிழோடு பிராகிதத்தையும், சமஸ்கிருதத்தையும் கல்வெட்டுக்களிலும், நாணயங்களிலும் பயன்படுத்தியதற்குப் பல சான்றுகள் உண்டு (Mahalingam1988). பிற்காலத் தமிழகத்தில் இரண்டு , மூன்று மொழிக்குரிய எழுத்துக்களைக் கொண்டு நாணயம் வெளியிடப்பட்டமை தெரிகிறது (சீதாராமன் 1996 : 89-97). இவை நாணயங்கள் வெளியிட்டதன் வர்த்தக நோக்கத்தையும், நாணயம் வெளியிட்டவரின் மதத்திற்கும் மொழிக்கும் இடையிலான தொடர்பைப் பொறுத்தும் அமைகின்றது. மிகச் சிறிய நாடான இலங்கையில் பௌத்த மதமும், அம்மத மொழிகளும் குறுகிய காலத்தில் பரவியபோது அம்மதத்திற்கு மாறிய தமிழர்களும் , ஆதரித்தவர்களும் பௌத்த மதத்திற்கு கொடை கொடுப்பதையே முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டு நாணயங்களை வெளியிட்டனர். அதனால் தாம் வெளியிட்ட நாணயங்களில் தமது பெயரைப் பிராகிருத மொழியில் வெளியிட்டிருப் பார்கள் எனக் கூறுவது சமகால இந்திய வரலாற்றில் நடந்த பொதுவான சம்பவத்தை நினைவுபடுத்துவதாகும். இதனால் பிராகிருத மொழிக்குரிய நாணயங்களை வெளியிட்ட அனைவரும் பௌத்தர்களாக இருந்தனர் எனக் கூறமுடியாது. சமகாலப் பிராமிக் கல்வெட்டுக்களை ஆராய்ந்தால் பௌத்த மதம் சாராத ஏனையவர்களும் பெளத்த மதத்திற்கு கொடையளித்தது பற்றிக் கூறுகின்றன. அவற்றுள் 2 கல்வெட்டுக்கள் பிராமண சமூகத்தவர் பற்றிக் கூறுகின்றன (Paranavithana 1970:LLXVII-LXIX). இதனால் பௌத்தமதம் சாராத தமிழர்களும் அம்பதத்திற்கு கொடையளிக்க நாணயங்களை வெளியிட்டிருக்கலாம். இதைப் பெயரடிப்படையிலும், நாணயங்களில் வரும் சின்னங்களின் அடிப்படையிலும் அடையாளம் காணமுடிகிறது.

அடிக்குறிப்புகள்

1. இச்சின்னத்தை பொட்ஆராச்சி சேவல் எனக் கூறினாலும் அதன் கொண்டை, வாய்ப்பகுதி மயில்ச்சிண்ணமாகவே கருத இனிக்கிறது

2. 24.3.2000 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையில் நடந்த தென்னிலங்கையில் கிடைத்த நாணயங்கள் தொடர்பான கருத்தரங்கில் கூறப்பட்ட கருத்து.

3. நாணயத்தில் நேரில் பார்க்கும் “ஹ” என்ற எழுத்தைக் கண்ணாடியில் பார்ப்பது போல் “ல” என வாசிக்க வேண்டும் என மகாதேவன் அவர்கள் கூறினாலும் அதை “ல” என எடுத்துக் கொள்ள முடியாது. தமிழகத்தில் இதுவரை கிடைத்த கல்வெட்டுக்களிலும் சரி நாணயங்களிலும் சரி “ல” என்ற எழுத்து அரைவட்ட வடிவில் அதன் கீழ்ப்பாகம் வளைந்தே இருக்கும்.

 

அதன் கீழ்ப் பாகம் சதுரமாக அமையும் போது “ஹ” என்ற ஒலிப்பெறுமானத்தைப் பெறும். இதன் அடிப்படையிலேயே அழகன் குளத்தில் கிடைத்த மட்பாண்டத்தில் வரும் எழுத்து “ஹ என எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளமையும் இங்கு நினைவு படுத்தலாம் (Mahadevan1994c:1-19). இந்த வேறுபாட்டை இலங்கைப்பிராமிக் கல்வெட்டுக்களில் மட்டுமன்றி இங்கு கிடைத்த நாணயங்களிலும் காணலாம். மஹா என்ற முதல் எழுத்துக்களையும் மல்ல என எடுப்பதற்கு அழகர்மலைக் கல்வெட்டில் வரும் மல்ல என்ற பெயர் ஆதாரம் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் மஹ என்ற சொல்லுடன் மல்ல என்ற சொல் கல்வெட்டுக்களில் மட்டுமன்றி நாணயங்களிலும் காணப்படுகின்றன (இதுபற்றி ஐந்தாவது நாணயத்தில் கூறப்பட்டுள்ளது). இவற்றில் “ல”வக்கும் “ஹுக்கும் இடையிலான எழுத்து வடிவ வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது. எனவே நாணயத்தில் வரும் முதலிரு எழுத்துக்களை மல்ல என் வாசிப்பதை விட மஹா என வாசிப்பதே பொருத்தமாகும். நாணயத்தின் இறுதியில் வரும் “அன்” என்ற விகுதி நேரடியாகப் பார்த்தால் மாறியே எழுதப்பட்டிருப்பதால் கண்ணாடியில் பார்ப்பது போல் வாசிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. ஆனால் அதே “அன்” விகுதி கடல அன் என வாசிக்கப்பட்ட நாணயத்திலும் மாறியே எழுதப்பட்டு இருந்தும், அதைக் கண்ணாடியில் பார்ப்பது போல் வாசிக்காது நேரிடையாக வாசித்து ” அன்” எனப் பொருள் கொள்ளப்பட்டுள்ளமை வாசிக்கும் முறையில் வேறுபாடாக உள்ளது. ஆயினும் அதை “அன்” என எடுப்பதில் தவறில்லை . ஏனெனில் இவ்வாறு மாறி எழுதியதற்கு தமிழக இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்கள் சிலவற்றில் சான்றுகள் உண்டு. இதற்கு எழுத்துக்கள் புதிதாக வழக்கத்திற்கு வரும் போது அதை எழுதியவர்கள் ஆரம்ப காலங்களில் விட்ட தவறுகள்தான் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டிய தமிழக தொல்பொருள் ஆய்வுத்துறை முதுநிலைக் கல்வெட்டாய்வாளர் இராசகோபால் தமிழகத்தில் கீளை வளவு, குன்றக்குடி போன்ற இடங்களிலும், இலங்கையில் பத்துக்கு மேற்பட்ட கல்வெட் டுக்களிலும் இவ்வாறு எழுதப்பட்டிருப்பதை ஆதாரம் காட்டியுள்ளார் (இராசகோபால் 1991).

 

தமிழ் மன்னர்கள் வெளியிட்ட

பண்டைய நாணயங்கள்

இலங்கையில் புழக்கத்திலிருந்த தொடக்ககால நாணயங்கள் இந்தியாவடனான வணிகத் தொடர்பால் அங்கிருந்து கொண்டுவரப்பட்டவையாகும். இதற்கு கள் ஆய்வுகளிலும், அகழ்வாய்வுகளிலும் கிடைத்த மௌரிய, குசான, குப்த சாதவான, சங்க கால நாணயங்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும். இவற்றுள் பெரும்பாலான நாணயங்கள் அநுராதபுரம், மாதோட்டம், கந்தரோடை, வல்லிபுரம், பூநகரி , அண்மையில் தென்னிலங்கையில் அக்குறுகொட போன்ற புராதான தலைநகரங்களிலும், வர்த்தக மையங்களிலும் கிடைத்துள்ள ன (Codrington 1924, Bopearachchi 1998.1999, சிவசாமி 1974, seyone 1198, புஷ்பரட்ணம் 1991). இந்நாணய மரபுகளைப் பின்பற்றியே காலப்போக்கில் இலங்கையிலும் நாணயங்கள் வெளியிடப்பட்டன (Parkar 1981). இதில் சின்னங்களுடன் கூடிய வார்ப்பு நாணயங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. அவற்றை வெளியிட ஆந்திர, சங்க கால நாணயமரபு கூடிய அளவுக்கு செல்வாக்குச் செலுத்தின எனக் கூறலாம். இதற்கு காலத்தால் முந்திய திஸ, யானை – சுவஸ்திகா , குதிரை – சுவஸ்திகா , சிங்கம் – சுவஸ்திகா , வேலியிடப்பட்ட – மரம் சுவஸ்திகா , எனப் பெயரிடப்பட்ட நாணயங்களைக் குறிப்பிடலாம் (Codrington 1924:22).

இந்நாணயங்களை ஆராய்ந்த எம். மிற்சினர் போன்ற நாணயவியலாளர் இவை சங்க காலப் பாண்டிய நாணயங்களின் செல்வாக்கிற்கு உட்பட்டவை எனக் கூறுகிறார் (Mitchiner 1998:629). ஆனால் இவற்றில் சங்க கால நாணயங்களின் செல்வாக்கு மட்டுமன்றி, சாதவாகன நாணயங்களின் செல்வாக்கையும் காணமுடிகிறது. இலங்கை நாணயங்களில் பொதுவாகக் காணப்படும் யானை உருவம், மூன்று முகடுள்ள மலைக்கு மேல் உள்ள வேலியிடப்பட்ட மரம், மத்தளம் போன்ற வடிவம் பாண்டியப் பெருவழுதி நாணயங்களில் வரும் (Krishnamurthy 1997:47) சின்ன ங்களைப் பெரிதும் ஒத்துள்ளன. திஸ நாணயங்களில் வட்டமும் அதன்மேல் பிறை போன்ற அரைவட்டமும் இடம்பெற்றுள்ளன. இவ்வடிவத்தைச் சிலர் நந்திபாதமாகவும், வேறு சிலர் கொம்புடன் கூடிய எருதின் தலையாகவும் கருதுகின்றனர். இவ்வடிவம் பாண்டிய, சாதவாகன வார்ப்பு நாணயங்களில் மட்டுமன்றி முத்திரை நாணயங்களிலும் காணப்படுகின்றன (Gupta 1965:15). வேலியிடப்பட்ட மரம் இந்திய நாணயங்களில் காணப்படும் பொதுவான அம்சம். ஆனால் அதன் கிளைகள், இலைகள் என்பவற்றில் சில வேறுபாடுகள் காணப் படுகின்றன. ஆந்திராவில் கிடைத்த முத்திரை நாணயங்களில் அதன் இலைகள் ஒடுங்கிய மூன்று இதழ்களைக் கொண்டுள்ளன. சாதவாகன நாணயங்களில் அவை சற்று திரட்சியாக உள்ளன (Sama 1980:Fig.MI). இலங்கையில் உள்ள நாணயங்களில் முத்திரை நாணயங்களின் சாயல் கூடுதலாகக் காணப்படுகிறது. இலங்கை நாணயங்களில் வரும் சிங்க உருவத்தைப் பொறுத்தவரை அவை பெரிதும் ஆந்திர நாணயங்களையே ஒத்துள்ளன. அத்துடன் நாணயங்களின் தோற்ற அமைப்பு பாண்டிய நாணயங்களை விட ஆந்திர நாணயங்களை அப்படியே ஒத்துள்ளன. ஆனால் இலங்கை நாணயங்களில் வரும் படத்துடன் கூடிய சுவஸ்திகா சின்னம் இலங் கையைத் தவிர தென்னிந்திய நாணயங்களிலோ, இந்திய நாணயங் களிலோ எதிலும் காணப்படவில்லை. இதன் மூலம் இந்திய நாணய மரபு இலங்கையில் நாணயங்கள் வெளியிடக் காரணமாக இருப்பினும் காலப் போக்கில் இலங்கைக்கு என்று தனித்துவமான நாணயமரபும் தோன்றியமை தெரிகிறது.

இந்திய நாணயங்களில் அதிலும் சிறப்பாக தமிழக நாணயங்களில் அதை வெளியிட்ட மன்னன் அல்லது வம்சத்தைக் குறிக்கும் பெயர் அல்லது குலக்குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் இருந்து அந்நாணயத்தை வெளியிட்ட மன்னன் பெயர் காம்சம், காலம் போன்றவற்றை இலகுவாக அடையாளம் காணமுடிகிறது. இலங்கையைப் பொறுத்தவரை கி.பி. 10 ஆம் நூற்றாண்டுக்கு முன் வெளியிடப்பட்ட நாணயங்களில் மன்னன் பெயரா அல்லது பட்டமோ இடம் பெற்றதாகத் தெரியவில்லை. பிராமி எழுத்துப் பொறித்த நாணயங்களில் அதை வெளியிட்டவர்களின் பெயர்கள் இருப்பினும் அதைச் சமகாலத்தில் இலங்கையில் ஆட்சி புரிந்த மன்னர்கள்தான் வெளியிட்டார்கள் எனக் கூறுவதற்குரிய உறுதியான சான்றுகள் எவையும் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில் நாணயங்களில் உள்ள சின்னங்கள், குறியீடுகள் என்பவற்றை வைத்து அதை வெளியிட்ட மன்னன், வம்சம், காலம் போன்றவற்றை உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் இந்நாணயங்கள் இலங்கைக்குள் மட்டும் பரந்துபட்ட அளவில் புழக்கத்தில் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருப்பதைக் கொண்டும், வடிவமைப்பில் சமகால இந்திய மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை ஒத்திருப்பதாலும் இவற்றை இலங்கையில் ஆட்சிபுரிந்த மன்னர்கள் வெளியிட்டதாக எடுத்துக் கொள்ளலாம். கொட்றிங்ரன் போன்ற நாணயவியலாளர்கள் நாணயங்களில் வரும் சின்னங்களைப் பெளத்த சிங்களப் பண்பாட்டுடன் தொடர்புபடுத்தி இவற்றைச் சிங்கள மன்னர்களே வெளியிட்டதாக எடுத்துக் கூறினார். குறிப்பாக சிங்க உருவம் பொறித்த நாணயத்தை வசபன், மகாசேனன் போன்ற மன்னர்களுடன் தொடர்பு படுத்துகிறார் (Codrington 1924:24-25). அதேவேளை ஏனைய நாணயங்களைக் குறிப்பாகத் தமிழ் நாணயங்களை இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையிலான வரலாற்று ரீதியான அரசியல், வர்த்தக, பண்பாட்டு உறவுகளின் அடிப்படையில் தமிழகத்திலிருந்து கொண்டுவரப்பட்டவையாகக் கூறப்பட்டுள்ளது.

பண்டைய காலத்தில் அநுராதபுரம் பலம்மிக்க அரசாக இருந்தபோது இதற்கு வடக்கிலும் தெற்கிலும் பல சிற்றரசுகள் இருந்ததற்கான சான்றுகள் பாளி இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன. இச்சிற்றரசுகளில் ஆட்சி புரிந்த சிலர் காலப்போக்கில் அநுராதபுர மன்னர்களாக வந்ததற்கும் சான்றுகள் உண்டு. ஆனால் அநுராதபுர அரசையே மையமாகக் கொண்டு எழுதப்பட்ட பாளி நூல்களில் அநுராதபுர அரசின் அரசியல் வரலாறே இலங்கை வரலாறாகக் காட்டப்பட்டுள்ளது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து இவ் அரசின் வரலாற்றைத் தொடர்ச்சியாகக் கூறும் தீபவம்சம், மகாவம்சம் , சூளவம்சம் முதலான பாளி நூல்கள் இவ்வரசைத் தமிழ் மன்னர்களும், சிங்கள மன்னர்களும் (தொடக்க காலப் பாளி நூல்கள் இவர்களைச் சிங்கள மன்னர் எனக் கூறாவிட்டாலும் வரலாற்றறிஞர்கள் சிங்கள மன்னர்கள் என்றே எடுத்துள்ளனர்) மாறி மாறி ஆட்சி புரிந்ததாகக் கூறுகின்றன. இதில் கி.மு. 1 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட முதல் 250 ஆண்டு காலத்தில் ஆட்சி புரிந்த 22மன்னர்களில் 10 தமிழ் மன்னர்கள் 80 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்தனர். இந்நிலை பிற்காலத்திலும் தொடர்ந்த அதே வேளை, சிங்கள மன்னர்களில் ஆட்சியிழந்தவர்கள், ஆட்சி யிலிருந்தவர்கள் தமது ஆட்சியை நிலைநாட்ட அடிக்கடி அயல் நாடு சென்று தமிழர் படையுடன் வந்த வரலாற்றை இந்நூல்கள் கூறுகின் றன். இவர்களில் தமிழ் மன்னர்களை வர்த்தகர் , படையெடுப்பாளர் என அக்கரையிலிருந்து வந்து ஆட்சியைக் கைப்பற்றிய அன்னியர் எனக் கூறும் பாளி நூல்கள் இலங்கை வரலாற்றில் அவர்களுக்கிருந்த பங்களிப்புப் பற்றி எதுவுமே கூறவில்லை. இந்நுால்களை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் வரலாற்றை எழுதிய வரலாற்றறிஞர்கள் பலரும் இத்தகைய நோக்குடன் இலங்கை வரலாற்றைப் பார்த்ததால் சமகாலத்திற்குரிய பிற வரலாற்று மூலங்களை இங்கு ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கத் தவறிவிட்டனர். இந்நிலையே இலங்கை யில் கிடைத்த தமிழ் நாணயங்களைப் பொறுத்தும் காணப்பட்டது.

இலங்கையின் பல வட்டாரங்களில் அதிலும் சிறப்பாக வட இலங்கையில் பலவகை நாணயங்கள் கிடைத்துள்ளன. அவற்றை இதுவரை ஆராய்ந்த அறிஞர்கள் பலரும் அதற்குப் பல்லவ, சோழ,பாண்டிய, விஜயநகர , நாயக்கர் கால நாணயங்கள் எனப் பெயரிட்டு அவை அவ்வப்போது தமிழகத் திலிருந்து வந்ததாகக் கூறியுள்ளனர். இதற்கு கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்கு முன் இலங்கையில் தமிழ் அரசு தோன்றவில்லை என்ற நம்பிக்கையும், பண்டைய காலத்தில் ஆட்சிபுரிந்த தமிழ் மன்னர்கள் அனைவரும் தமிழகத்திலிருந்து வந்தவர்கள் என்ற எண்ணமும், அவர்கள் சிங்கள மன்னர்களைப் போல் இலங்கையில் நாணயங்களை வெளியிடவில்லை என்ற ஆழமான கருத்தும் அடிப்படைக் காரணங்களாக இருந்தன. ஆனால் இலங்கையில் கிடைத்த தமிழ் நாட்டுக்குரிய நாணயங்களுடன், பிற தமிழ் நாணயங்களை ஒப்பிடுகின்ற போது அவற்றிடையே ஒருவித ஒற்றுமையும், வேறுபாடும் இருப்பதைக் காணலாம். இந்த வேறுபாட்டைத் தமிழக நாணயங்கள் தொடர்பாக இதுவரை வெளிவந்த ஆய்வுகளுடனும், தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது தமிழக நூதன சாலைகளிலும், தனிப்பட்டவர்களிடமும் உள்ள நாணயங்களுடனும் ஒப்பிட்டு ஆராய்வதன் மூலம் கண்டு கொள்ளலாம். அதன் அடிப்படையிலேயே இந்த ஆய்வு அமைந்துள்ளது. ஆயினும் இவற்றின் காலத்தையோ, வெளியிட்ட மன்னர்களையோ எழுத்தாதாரங்கள் அற்ற நிலையில் திட்டவட்டமாகக் கூறமுடியாதுள்ளது. இருப்பினும் நாணயங்களின் வடிவமைப்பு, அவற்றில் உள்ள சின்னங்கள், இலங்கைத் தமிழ் மன்னர்களின் வரலாறு என்பவற்றின் பின்னணியில் சில முடிவுகளை முன்வைக்க முடிகிறது.

மீன் சின்ன நாணயங்கள்

இலங்கையில் கிடைத்த பண்டைய தமிழ் நாணயங்களில் மீன் சின்னம் பொறித்த நாணயங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இவற்றில் ஐந்து வகையான நாணயங்கள் இலங்கையில் கிடைத்த துள்ள ன (Codrington 1924. Seyone 1998:40-41, Bopearachchi 1998:156,1999). இவை சதுரவடிவில் அமைந்திருப்பதுடன், அதன் பின்புறத்தில் உள்ள மீன் சின்னம் கோட்டுருவிலும் காணப்படுகின்றது. மீன் பாண்டியரின் குலச்சின்னமாக இருந்ததைத் தமிழ்நாட்டில் கிடைத்த பெருவழுதி என்ற பெயர் பொறித்த சங்க கால நாணயங்களில் வரும் கோட்டுருவ மீன் சின்னம் உறுதிப்படுத்துகிறது. தமிழகத்தில் கிடைத்த சங்க காலப் பாண்டிய நாணயங்கள் பற்றி ஆராய்ந்த இரா. கிருஷ்ணமூர்த்தி 1917 இல் வடஇலங்கையில் கந்தரோடை என்ற இடத்தில் போல் பீரிஸ் என்பவரால் கண்டுபிடித்த நாணயங்களை ஆராய்ந்து அவற்றில் சங்க காலப் பாண்டியரால் வெளியிடப்பட்ட பெருவழுதி வகையைச் சேர்ந்த நாணயங்களும் இருப்பதை முதன் முதலில் தெரியப்படுத்தினார் (Krishnamurthy 1997:36). இவ்வகை நாணயங்களுடன் மேலும் மூன்று வகையான சங்க காலப் பாண்டிய நாணயங்கள் அண்மையில் பூநகரியில் கிடைத்துள்ளன (புஷ்பரட்ணம் 1999). இவை தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பலதரப்பட்ட உறவுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆனால் வட இலங்கையில் மேலும் கோட்டுருவத்துடன் கூடிய இருவகை நாணயங்கள் கிடைத்துள்ளன. இவ்வகை நாணயங்கள் தமிழகத்தில் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை.

இந்நாணயங்கள் வட இலங்கையில் பூநகரி வட்டாரத்தில் உள்ள பள்ளிக்குடா , மண்ணித்தலை, வீரபாண்டியன் முனை ஆகிய இடங்களிலும், யாழ்ப்பாணத்தில் கந்தரோடையிலும் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் சதுர வடிவில் அமைந்த செப்பு நாணயங்களாகும். இவற்றுள் பூநகரி வட்டாரத்தில் கிடைத்த மூன்று நாணயங்களின் முன்புறத்தில் கவிழ்ந்த பிறைவடிவுள்ள கூரைக்கோயிலும், இரண்டு நாணயங்களின் முன்புறத்தில் ஸ்ரீவத்ஷா உருவமும் இடம் பெற்றுள்ளன. இவ்வகை நாணயங்கள் வடஇலங்கையைத் தவிர இலங்கையின் ஏனைய பாகங்களில் கிடைத்ததாகத் தெரியவில்லை. இவற்றின் அமைப்பும், மீன் குறியீட்டுச் சின்னமும் சங்ககால நாணயங்களுடன் தொடர்புபடுத்தக் கூடியவை. ஆனால் முன்புறத்தில் உள்ள சின்னங்கள் சங்ககால நாணயங்களிலிருந்து வேறுபடு கின்றன (புஷ்பரட்ணம் 1998114-119). அவற்றின் பொதுவான விபரம் வருமாறு

அடிக்குறிப்பு எண் : 80

1. இடம் : பள்ளிக்குடா .

உலோகம் : செப்பு.

அளவ : 1.5×1. 3 செ.மீ

எடை : 2.3 கிராம்

முன்புறம் :ஐந்து தூண்கள் தாங்கி நிற்கும் கவிழ்ந்த பிறை வடிவுள்ள கூரைக் கோயில்.

பின்புறம் :மீன் குறியீட்டுச் சின்னம்.

 

 

அடிக்குறிப்பு எண் : 80

 

1. இடம் : வீரபாண்டியன்முனை .

உலோகம் : செப்பு.

அளவ : 1.6 x1.4 செ.மீ

எடை : 2.0 கிராம்

முன்புறம் : ஸ்ரீவத்ஷா சின்னம்..

பின்புறம் :மீன் குறியீட்டுச் சின்னம்.

இந்நாணயங்களின் பின்புறத்தில் மீன் கோட்டுருவம் இருப்பதனால் இவற்றைச் சங்ககாலப் பாண்டியர் வெளியிட்ட நாணயங்கள் என்ற கருத்து நிலையை ஏற்படுத்தலாம். ஆனால்

முன்புறத்தில் உள்ள சின்னங்கள் பாண்டியர் வெளியிட்ட நாணயங்களில் இருந்து இவற்றை வேறுபடுத்துகின்றன (படம் – 1). கவிழ்ந்த பிறைவடிவுள்ள கூரைக்கோயிலும், ஸ்ரீவத்ஷாவும் சங்க கால நாணயங்களில் சிறப்பாகப் பாண்டிய நாணயங்களில் பிற சின்னங்களுடன் சேர்ந்து வருகின்றனவே தவிர தனித்து இடம் பெற்றிருந்ததற்கு இதுவரை சான்றில்லை (படம் – 2). இதனால் வடஇலங்கையில் கிடைத்த நாணயங்களைத் தனித்துவமானவை எனக்கூறலாம். சங்க காலத்தில் பாண்டியரால் வெளியிடப்பட்ட இந்நாணயங்கள் தமிழகத்தில் கிடைக்காமல் இலங்கையில் கிடைத்திருக்கலாம் என வாதிடவும் இடமுண்டு. ஆனால் பாண்டியர் வெளியிட்ட நாணயங்கள் தமிழகத்தில் பரவலாக கிடைக்கும் போது, அவை இலங்கையில் இதுவரை அரிதாகவே கிடைத்துள்ளன. இந்நிலையில் வடஇலங்கையில் கிடைத்த நாணயங்கள் தமிழகத்தில் கிடைக்காமல் இருப்பது வியப்புக்குரிய ஒன்றாகும். இதனால் இந்நாணயங்களை இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் வெளியிட்டார்கள் எனக் கூறுவதே பொருத்தமாகும்.

நாணயத்தில் வரும் மீன் கோட்டுருவம் இங்கு வாழ்ந்த தமிழர்களுக்கும் பாண்டி நாட்டிற்கும் இடையிலான பூர்விகத் தொடர்பு அல்லது சமகாலத்தில் பாண்டிய மன்னர்களுக்கும் இலங்கையில் ஆட்சி புரிந்த மன்னர்களுக்கும் இடையிலான உறவு காரணமாக இருந்திருக்கலாம். பண்டைய காலத்தில் இலங்கை, தமிழ்நாட்டில் ஏனைய பிராந்தியங்களை விட அருகிலுள்ள பாண்டி நாட்டுடனும், பாண்டிய வம்சத்துடனும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்ததற்குப் போதிய சான்றுகள் உண்டு. கி.மு. 5,4- ஆம் நூற்றாண்டில் இலங்கையில் ஏற்பட்ட தென்னிந்தியக் குடியேற்றம், அரச தோற்றம், ஆரம்பகால மன்னர்கள் என்பன பாண்டி நாட்டுத் தொடர்பால் ஏற்பட்டதைப் பாளி இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம் (M.VVIII). இலங்கையிலுள்ள கி.மு.3,2-ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட் டுக்கள் பாண்டிய வம்சம் பற்றியும், பாண்டியக் கிராமம் பற்றியும் கூறுகின்றன. சில கல்வெட்டுக்களில் பாண்டிய வம்சத்துடன் தொடர்புடைய பழைய, மாற போன்ற பெயர்கள் காணப்படுகின்றன (I.C.1970: Nos. 58, 159,610, 968, 1097). ஏறத்தாழ இதே காலமளவில் பழைய மாறன், பிழையமாறன் போன்ற தமிழ் மன்னர்கள் இலங்கையில் ஆட்சிபுரிந்ததைப் பாளி இலக்கியங்கள் கூறுகின்றன (M.V.V.61).

தென்னிலங்கையில் உள்ள கி.மு.3-2-ஆம் நூற்றாண்டுக்குரிய 16 கல்வெட்டுக்கள் மீன் அரசன் பற்றியும், அவன் வழிவந்த பத்து சகோதரர் ஆட்சிபற்றியும் கூறுகின்றன ( பாளி மொழியில் மஜிமகாராஜா என்றால் மீன் அரசன் என்பது பொருள்). இதை உறுதிப்படுத்தும் வகையில் இக் கல்வெட்டுக்களில் மீன் கோட்டுருவச் சின்னம் காணப்படுகின்றது (I.C.1970:556-568). இச்சின்னம் ஆதிகாலத்தில் இலங்கையில் குடியேறிய தமிழர்களின் வழிவந்தவர்களைக் குறிக்கிறது எனவும், இவர்கள் சிங்கள மன்னர்களுக்கு கட்டுப்படாமல் சுதந்திரமாக ஆட்சிபுரிந்ததைக் காட்டுவதாகவும் கூறப்படுகிறது (வேங்கடசாமி 1983:610). சிற்றரசர்களாக இருந்தவர்களே பின்னர் இலங்கை மன்னர்களாக வந்ததைப் பாளி இலக்கியங்கள் வாயிலாக வரலாற்றில் காண்கின்றோம். இதனால் வடஇலங்கையில் கிடைத்த மீன் கோட்டுருவச் சின்னங்களுடன் கூடிய நாணயங்களை இலங்கையில் தமிழரச மரபை உருவாக்கிய தமிழர்கள் சிற்றரசரர்களாக அல்லது இலங்கை மன்னர்களாக இருந்து வெளியிட்டனர் எனக் கூறலாம். நாணயத்தின் முன்புறத்திலுள்ள கூரைக்கோயில், ஸ்ரீவத்ஷா என்பவை தமிழ்மன்னர்களின் சமய நம்பிக்கையைப் பிரதிபலிக்கலாம். பாளி இலக்கியங்கள் தமிழ் மன்னர்கள் பௌத்த மதத்திற்கு ஆதரவு கொடுத்து ஆட்சிபுரிந்தபோதிலும் தமது பழைய மத நம்பிக்கையைக் கைவிடவில்லை எனக் கூறியிருப்பதை இங்கு நினைவுபடுத்திப் பார்க்க இடமுண்டு.

யானையும் மீன் சின்ன நாணயங்களும்

சங்க கால நாணய மரபைப் பின்பற்றி சமகாலத்தில் இலங்கையில் . தமிழ், சிங்கள மன்னர்கள் நாணயங்கள் வெளியிட்டுள்ளார்கள் என்பதற்கு முன்புறம் யானையும் பின்புறம் சுவகந்திகா அல்லது கோட்டுருவில் அமைந்த மீன் சின்னமும் கொண்ட நாணயங்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும். இவை கந்தரோடை, பூநகரி, வல்லிபுரம், இரணைமடு, அநுராதபுரம், அக்குறுகொட போன்ற இடங்களில் கிடைத்துள்ளன (Codrington 1924:20. Bopearachchi 1999::68, புஷ்பரட்ண ம் 1999). இதில் மீன் சின்னத்திற்குரிய நாணயங்கள் இலங்கையில் ஆட்சி புரிந்த தமிழர்களால் வெளியிடப்பட்ட தெனக் கூறலாம். அவற்றின் பொதுவான விபரங்கள் வருமாறு (படம் – 3).

அடிக்குறிப்பு எண் : 83

 

இடம் : மண்ணித்தலை.

உலோகம் : நிக்கலும் செம்பும்

அளவு : 1.1 x 0.9 செ.மீ.

எடை : 1.4 கிராம்

முன்புறம் : இடப்புறம் நோக்கி நிற்கும் யானை.

பின்புறம் : மீன் கோட்டுருவம்

 

இதில் நாணயத்தின் முன்புறத்தில் வரும் யானையையும், பின்புறத்தில் வரும் மீனையும் ஒத்த நாணயங்களைச் சங்க காலப்பாண்டியர் வெளியிட்டதற்குத் தமிழ் நாட்டில் பல சான்றுகள் உள்ளன (கிருஷ்ணமூர்த்தி 1977). அவை தமிழகத்துடனான தொடர்பால் சமகாலத்தில் இலங்கைக்கும் வந்துள்ளன (புஷ்பரட்ணம்1 998:114-119). ஆனால் நாம் மேலே குறிப்பிட்ட நிக்கலும், செம்பும் கலந்த நாணயங்களின் அளவும், யானையின் உருவமைப்பும் மிகச் சிறியவை. இந்த அளவுகளில் சங்க கால மன்னர்கள் நாணயங்கள் வெளியிட்டதாகத் தெரியவில்லை. அத்துடன் இவ்வகை நாணயங்கள் எவையும் இதுவரை தமிழகத்தில் கிடைத்ததற்குச் சான்றுகள் இல்லை. ஆனால் இதேவடிவுடைய நாணயங்களின் பின்புறத்தில் மீனுக்குப் பதிலாக சுவஸ்திகாவுடன் கூடிய நாணயங்கள் இலங்கையில் பல இடங்களில் கிடைத்துள்ளன (படம் -4). இதில் வரும் படத்துடன் கூடிய சுவதிகா இலங்கையில் மட்டும் காணப்படும் சிறப்பம்சமாகும். இவற்றின் அடிப்படையில் யானையும், மீன் சின்னமும் கொண்ட மேற்கூறப்பட்ட நாணயங்கள் சங்க கால , இலங்கை நாணயமரபு கலந்த நிலையில் இலங்கைத் தமிழ் மன்னர்கள் வெளியிட்டனர் எனக் கூறுவதே பொருத்தமாகும்.

காளையுருவம் பொறித்த நாணயங்கள்

இலங்கையில் கிடைத்த பண்டைய தமிழ் நாணயங்களில் காளையுருவம் பொறித்த நாணயங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவை கந்தரோடை, யாழ்ப்பாணம், மாதோட்டம் (Seyone 1998:26 30), வல்லிபுரம், அநுராதபுரம் (Codrington 1924:24), பூநகரி (புஷ்பரட்ணம் 1998:114-119), தென்னிலங்கையில் அக்குறுகொட (Bopearachchi 1999:90-91) போன்ற இடங்களில் கிடைத்துள்ளன. இவற்றிலிருந்து இநாணயங்கள் பரந்துபட்ட அளவில் புழக்கத்திலிருந்த மையை உணரமுடிகிறது. ஆயினும் எண்ணிக்கையில் அதிகமானவை வட இலங்கையில் கிடைத்திருப்பதை பூநகரி வட்டாரத்தில் உள்ள பள்ளிக்குடா, வீரபாண்டியன் முனை, ஈழஊர் ஆகிய இடங்களிலிருந்து பெறப்பட்ட நாணயங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இவை அனைத்தும் சதுரவடிவில் அமைந்த செப்பு மற்றும் ஈய நாணயங்களாகும். ஆயினும் வடிவமைப்பு, நீள அகலம், எடை, அவற்றில் இடம்பெற்றுள்ள சின்னங்கள் என்பவற்றில் வேறுபாடுகள் உள்ளன. மிகச்சிறிய நாணயங்களின் முன்புறத்தில் இடம் அல்லது வலப்புறம் நோக்கி நிற்கும் காளையுருவம் காணப்படுகிறது. காளை உருவத்தின் முகத்திற்கு கீழே பூரணகும்பம் போன்ற பொருள் உள்ளது. காளைக்கு வெளியே ஒன்று அல்லது இரண்டு சதுரக் கோடுகள் காணப்படுகின்றன. நாணயத்தின் பின்புறத்தில் வட்டமும் வட்டத்திற்குள் மூன்று அல்லது நான்கு புள்ளிகளும் வட்டத்திற்கு வெளியே நான்கு நேர்கோடுகளாலான சதுரமும் உள்ளது. சில நாணயங்களின் பின்புறத்தில் வட்டத்திற்குப் பதிலாக முக்கோணமும் அதன் மத்தியில் சிறுபுள்ளியும் காணப்படுகிறது. பெரிய நாணயங்களின் முன்புறத்தில் இடப்புறம் நோக்கி நிற்கும் காளை உருவத்திற்கு வெளியே இரு சதுரக் கோடுகள் உள்ளன. இக்கோடுகளுக்கு இடையிலும், வெளியிலும் சில புள்ளிகள் காணப்படுகின்றன. காளையின் பாதத்திற்கு முன்னால் பலிபீடமும், காளைக்கு மேலே முன்பக்கமாக சுவஸ்திகா உட்பட நான்கு சின்னங்களும் காணப்படுகின்றன. பின்புறத்தில் மூன்று அல்லது நான்கு புள்ளிகளும், அதைச் சுற்றி வட்டமும், வட்டத்திற்கு வெளியே இரு சதுரக் கோடுகளும் உள்ளன. இவற்றை நாணயத்தின் பின்புறத்தில் உள்ள சின்னங்களை அடிப்படையாகக் கொண்டு இருபிரிவாகப் பிரிக்கலாம். அவற்றின் பொதுவான விபரம் வருமாறு (படம் – 5,6).

அடிக்குறிப்பு எண் : 85

 

 

1. இடம் : வீரபாண்டியன் முனை.

உலோகம் : செம்பு

அளவு : 1.6 x 1.3 செ.மீ.

எடை : 2.3 கிராம்

முன்புறம் : வலப்புறம் நோக்கி நிற்கும் காளை. முகத்திற்குக் கீழே பூரணகும்பம், வெளியே இரு சதுரக்கோடுகள்

பின்புறம் : நான்கு புள்ளிகள் அதைச் சுற்றி வட்டம். வட்டத்திற்கு வெளியே இரு சதுரக் கோடுகள். கோட்டுக்குள் சில புள்ளிகள்.

 

1. இடம் : அக்குறுகொட

உலோகம் : ஈயம்

அளவு : 10×10 மி.மீ.

எடை : 0.24 கிராம்

முன்புறம் : இடப்புறம் நோக்கி நிற்கும் காளை. முகத்திற்குக் கீழே பூரணகும்பம், வெளியே இரு சதுரக்கோடுகள்

பின்புறம் :முக்கோணம், அதன்மத்தியில் சிறுபுள்ளி . வெளியே இரு சதுரக் கோடுகள்..

 

இந்நாணயத்தில் காளை முக்கிய சின்னமாக இடம்பெற்றுள்ளது. காளையை நாணயங்களில் பயன்படுத்தும் மரபு இந்தியாவில் மிகத் தொன்மையானது. இதன் தொடக்கத்தை சிந்துவெளியின் நாகரிக கால முத்திரைகளில் காணலாம். பிற்கால முத்திரை நாணயங்களிலும், வார்ப்பு நாணயங்களிலும் காளை முக்கிய சின்னங்களில் ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டது (Mansukhal, N. 1988). சங்க கால மூவேந்தர்கள் வெளியிட்ட நாணயங்களில் காளையும் இடம்பெற்றது (Krishnamurthy 1997). குறிப்பாகச் சங்க காலப் பாண்டியர் வெளியிட்ட நாணயங்களில் காளை முக்கிய சின்னமாக இடம் பெற்றிருந்தது. பிற்காலத்தில் பல்லவரும், பாண்டியரும், சேரரும் காளையைப் பயன்படுத்தத் தவறவில்லை. இதனால் காளை உருவத்தை மட்டும் வைத்து ஒரு நாணயத்தை யார் வெளியிட்டிருப்பார்கள் என அடையாளம் காண்பது கடினமாகும்.

பல்லவர் காளையை அரச முத்திரையாகப் பயன்படுத் தியதுடன், அதை நாணயங்களிலும் பயன்படுத்தியுள்ளனர். இதனால் இலங்கையில் கிடைத்த மேற்குறிப்பிட்ட வகை நாணயத்தைப் பல்லவரே வெளியிட்டு தமிழகத்துடனான தொடர்பால் இங்கு வந்ததென்ற கருத்து நீண்டகாலமாக இருந்து வருகிறது (Codrington 1924:24, Seyone 1998:27. Mitchiner1997:135, சிற்றம்பலம் 1993:501). ஆனால் பல்லவர் வெளியிட்ட நாணயங்கள் பெரும்பாலும் வட்ட வடிவமானவை. சதுர வடிவில் நாணயங்கள் வெளியிடும் மரபு பல்லவர் காலத்திற்கு முன் சங்க காலத்தில் பெரிதும் வழக்கிலிருந்த ஒன்றாகும். மேலும் பல்லவ நாணயங்களில் முன்புறத்தில் பெரும்பாலும் காளை அல்லது பிற சின்னங்களுடன் லகவிதா, அலரி, தண்டிக்கலா , ஸ்ரீவம்பு, வபு, பகாபிருகு, கரும்பிடுகு, காடவ , தந்திஹி. ஸ்ரீநிதி, பரம் போன்ற பட்டம் அல்லது விருதுப் பெயர்களுடன் பின்புறத்தில் சங்கு, சக்கரம், கூட்டல் குறி , நண்டு, கப்பல், மீன், சைத்தியம் , விளக்கு போன்ற உருவங்களும் இடம்பெற்றுள்ளன (Elliot 1970, Nagaswamy 1981, சீதாராமன் 1994, 2000, காசிநாதன் 1995:52-58). இவ்வகை நாணயங்கள் சில வட இலங்கையில் மாதோட்டத்திலும் கடைத்துள்ளன (Seyone 1998:37-38). ஆனால் இலங்கையில் கிடைத்த காளையுருவ நாணயத்தின் பின்புறத்தில் வரும் சின்னங்கள் பல்லவ நாணயங்கள் எதிலுமே காணப்படவில்லை. ஆயினும் இலங்கை நாணயத்தில் வரும் காளை உருவத்திற்கும் சங்க காலத்தில் பாண்டியர், சோழர் வெளியிட்ட நாணயங்களில் வரும் காளை உருவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அண்மையில் அழகன்குளம் அகழாய்வில் கிடைத்த பாண்டிய நாணயம் ஒன்றில் இடப்புறம் நோக்கி நிற்கும் காளையும் அதன் முகத்திற்கு கீழே பூரண கும்பமும் காணப்படுகிறது (காசிநாதன் 1995:21). இவை அப்படியே இலங்கையில் கிடைத்த நாணயங்களை ஒத்துள்ளன. ஆனால் அழகன்குள் நாணயத்தின் பின்புறத்தில் மீனும், இலங்கை நாணயங்களில் புள்ளிகளுடன் கூடிய வட்டம் அல்லது சதுரமும் காணப்படுவது முக்கிய வேறுபாடாகும். இச்சின்னங்கள் தமிழக நாணயங்களில் மட்டுமன்றி இந்திய நாணயங்கள் எதிலும் காணப்படவில்லை. வடஇந்தியாவில் காளை உருவத்துடன், சில நாணயங்களில் பிராமி எழுத்துக்களுடன் கூடிய நாணயங்கள் மற்றும் நாணயங்களுக்குரிய அச்சினால் பதிக்கப்பட்ட களிமண் தட்டுக்கள் கிடைத்துள்ள ன (Thapiyal 1972:418-419, plats. II- II). ஆனால் இவற்றின் உருவ அமைப்புக்கள் வேறுபட்டிருப்பதுடன் காலரீதியில் பிற்பட்டவையாகவும் உள்ளன. ஆந்திர நாணயங்களில் இதன் சாயல் தென்பட்டாலும் பல்வேறு அம்சங்களில் அவற்றிடையே வேறுபாடு காணப்படுகின்றன. ஆனால் இலங்கையில் வசபன் அல்லது மகாசேனன் போன்ற சிங்கள் மன்னர்களால் வெளியிடப்பட்டதாகக் கருதப்படும் சிங்க உருவம் பொறித்த நாணயங்களின் பின்புறத்தில் காளை உருவ நாணயத்தில் வரும் வட்டமும், அதற்குள் நான்கு புள்ளிகளும் கொண்ட சின்னமும் அப்படியே வருகின்றது (படம் – 7). அண்மையில் தென்னிலங்கையில் காளையுருவம் கொண்ட நாணயத்திற்குரிய அச்சால் பதிக்கப்பட்ட களிமண் நாணய வடிவங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ள ன (Bopearachchi 1999:90-91,plates22 24, Nos. J22-K32).

(படம் – 8)

அடிக்குறிப்பு எண் : 88

 

இவ்வகை நாணயங்கள் தமிழகத்தில் வெளியிடப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்தால் அதற்குரிய அச்சுக்கள் இங்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. இவற்றின் அடிப்படையில் இவ்வகை நாணயங்கள் இலங்கையில் வெளியிடப்பட்டவை எனக் கூறுவதில் எவ்வித சந்தேகமும் இல்லை .

 

(படம் -7)

அடிக்குறிப்பு எண் : 88

 

இலங்கை வரலாற்றில் சிங்கத்தை அரச சின்னமாக, முத்திரையாகப் பயன்படுத்தும் மரபு சிங்கள மன்னர்களிடையே நீண்ட காலமாக இருந்து வருகிறது. இடைக்காலத்தில் சிங்கள மன்னர்கள் தாம் வெளியிட்ட நாணயங்களில் தமது பெயரோடு, சிங்கத்தையும் பொறித்தனர் (Seyone 1998:39). இதற்கு சிங்கள மக்களின் பூர்விக வரலாறு சிங்கத்துடன் தொடர்புபடுத்திப் பாளி இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பது காரணமாக இருக்கலாம். சிங்கம் பெற்றிருந்த முக்கியத்துவத்தைப் பௌத்த சிங்களப் பண்பாட்டில் காளை பெற்றிருந்தது எனக் கூறமுடியாது. ஆனால் தமிழர் பண்பாட்டில் காளை அவர்களது வழிபாட்டிற்குரிய மங்களச் சின்னமாக இருந்த துடன் அவற்றை நாணயங்களில் பொறிக்கும் மரபையும் கொண்டிருந்தனர். வட இலங்கையில் அரசமைத்த தமிழ் மன்னர்கள் நாணயங்களில் மட்டு மன்றி அரச கொடிகளிலும், அரச முத்திரைகளிலும் காளையையே அரச லட்சனையாகப் பயன்படுத்தினர்.

மேற்கூறப்பட்ட காளை உருவம் கொண்ட நாணயங்கள் இலங்கையின் பல வட்டாரங்களில் கிடைத்திருப்பதைக் கொண்டும், அவற்றின் வடிவமைப்புச் சமகாலத்தில் சங்க கால நாணயங்களின் வடிவ மைப்பை ஒத்திருப்பதைக் கொண்டும் இவற்றை சமகாலத்தில் இலங்கையில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்கள் வெளியிட்டிருக்கலாம் எனக் கூறலாம். இக்காலத்தில் இலங்கையில் பல தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். ஆனால் மன்னர்களைக் குறிக்கும் எந்தப் பெயரும் இந்நாணயங்களில் இல்லை. இந்நிலையில் இந்நாண யங்களை எந்த மன்னர்கள் வெளியிட்டிருப்பார்கள் எனத் திட்டவட்ட மாகக் கூறமுடியாது. பாளி நூல்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் எல்லாளன் என்ற தமிழ் மன்னன் 44 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்தான் எனக் கூறுகின்றன. இவனே பண்டைய காலத்தில் நீண்ட காலம் ஆட்சி புரிந்த முதல் மன்னனாவான். இவன் ஆட்சியில் இருந்துதான் முதன்முதலாக இலங்கை மன்னர்கள் நாணயங்கள் பயன்படுத்த தொடங்கிய வரலாறு பாளி இலக்கியங்களில் காணப்படுகின் றன். இவன் இடிந்து போன பௌத்த விகாரையைப் புதிப்பிக்க 15000 கஹபணா கொடுத்தான் என மகாவம்சம் கூறுகிறது (XXI:26). பாளியில் கஸபணா என்பது சதுரவடிவிலமைந்த செப்பு நாணயங்களைக் குறிப்பதாகும் (Geiger1950:144). எல்லாளன் ஆட்சிக் காலமான கி.மு.2ஆம் நூற்றாண்டில் சதுரவடிவில் அமைந்த செப்பு நாணயங்கள் புழக்கத்தில் இருந்ததற்கு போதிய சான்றுகள் உண்டு. இவற்றின் அடிப்படையில் இலங்கையில் கிடைத்த காளை உருவம் கொண்ட சதுர நாணயங்களை எல்லாளன் ஆட்சியோடு தொடர்புபடுத்திப் பார்ப்பது பெருமளவுக்குப் பொருத்தமாகும்.

 

லக்ஷ்மி நாணயங்கள்

வகையிலும், தொகையிலும் இலங்கையில் கிடைத்த பண்டைய நாணயங்களில் லக்ஷ்மி உருவம் பொறித்த நாணயங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவை பண்டைய காலக் குடியிருப்புக்களுக்குரிய கலாசாரச் சின்னங்கள் தொட்டு கி.பி. 5ஆம் நுற்றாண்டுக்குரிய ரோம நாணயங்கள் காணப்படும் கலாசாரப் படைகளுடனும் சேர்ந்து கிடைத்திருப்பதால் ஏனைய நாணயங்களை விட இவற்றின் வெளியீடும், இதன் பயன்பாடும் நீண்ட காலத்திற்கு இருந்ததெனக் கூறலாம். இதை உறுதிப்படுத்தும் வகையில் இவற்றின் வடிவமைப்புக்களும் பல வடிவங்களில் அமைந்துள்ளன. இவை பரந்துபட்ட அளவில் பல வட்டாரங்களில் கிடைக்கப்பட்டாலும் எண்ணிக்கையில் அதிகமான நாணயங்கள் தென்னிலங்கையிலும், வடஇலங்கையிலும் கிடைத்துள்ளன. கி.பி. 1885- இல் முல்லைத்தீவில் மட்குடம் ஒன்றி லிருந்து 51 நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன (Parkar 1981:463 82). அதையடுத்து கி. பி. 1917இல் கந்தரோடையில் நூற்றுக்கு மேற்பட்ட நாணயங்கள் பெறப்பட்டன. இவற்றைத் தொடர்ந்து நல்லூர், மாதோட்டம், வல்லிபுரம், ஆனைக்கோட்டை, பூநகரி , உருத்துறை ஆகிய இடங்களிலும், வடஇலங்கைக்கு வெளியே அநுராதபுரம், திஸமாறாகம், சிலாபம், புத்தளம், நிந்தவர் அண்மையில் அக்குறு கொட ஆகிய இடங்களிலும் இந்நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன (Peris 1917.Codrington, 1924, சிவசாமி , 1974, கிருஷ்ண ராஜா 1983, புஷ்பரட்ணம் 1998, Bopearechchi 1998, 1999). இவை செம்பிலும், செம்பு, ஈயம், மிகச்சிறிய அளவில் சிலிக்கா , இரும்பு, நிக்கல் போன்ற உலோகக் கலப்பாலும் ஆனவை. கந்தரோடையில் கிடைத்த நாணயங்களை ஆராய்ந்த பிரிஸ் இதில் உள்ள பெண் வடிவங்களுக்கு லஷ்மி எனப் பெயரிட்டார். அப்பெயரே இந்நாணயத்திற்குரிய பெயராக இன்றும் வழங்கி வருகிறது.

இந்நாணயங்கள் அனைத்தும் நீள்சதுர வடிவில் உள்ளன. இது சமகாலத்தில் தென்னாசியாவில் வெளியிடப்பட்ட வட்டம், சதுரம் போன்ற வடிவமைப்பிலிருந்தும் வேறுபட்டவை. இந்தியாவில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டதாகக் கருதப்படும் நாணயம் ஒன்று இதேவடிமைப்புடன் கூடியது. ஆனால் அதன் ஒருபக்கத்தில் மட்டும் கற்பகதரு எனப்படும் விருட்சம் பல இலைகளுடன் கூடியதாகக் காணப்படுகிறது (Mansukhlal 1998). ஏனைய அம்சங்களில் இருநாணயங்கள் இடையேயும் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவற்றைத் தவிர இதே வடிவமைப்புடன் கூடிய நாணயம் எதுவும் இக்காலத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை. இலங்கையில் தொடக்க காலத்தில் இந்நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது இவற்றை நாணயமாக எடுக்காது சமயச்சின்னமாக் கருதப்பட்டது. ஆனால் காலப்போக்கில் இவை புராதன நகரங்களிலும், வர்த்தக மையங்களிலும் ஏனைய நாணயங்களுடனும் கிடைத்ததால் இவை பண்டைய காலத்தில் புழக்கத்திலிருந்த நாணயங்கள் என்பது தெரியவந்தது. அண்மையில் தமிழ் நாட்டில் சங்க காலச் சேரரின் தலைநகராக இருந்த கருரிலும் ரோம, சங்க கால நாணயங்களுடன் இவை கிடைத்துள்ளன (Nagaswamy 1995:37-39). இவற்றிலிருந்து இவை உள்நாட்டு வர்த்தகத்தில் மட்டுமன்றி வெளிநாட்டு வர்த்தகத்திலும் பயன்படுத்தப்பட்டமை தெரிகிறது (Krishnamurthy Vol.Lil:59-61).

இந்நாணயத்தின் முன்புறத்தில் நிற்கும் நிலையில் பெண் வடிவமும், பின்புறத்தில் படத்துடன் கூடிய சுவஸ்திகாவும் முக்கிய சின்னங்களாக இடம் பெற்றுள்ளன. ஆனால் நாணயத்திற்கு நாணயம் வடிவமைப்பு, அளவு, எடை , சின்னங்கள் என்பவற்றால் வேறுபடுகின்றது. அண்மையில் பூநகரி வட்டாரத்திலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட நாணயங்கள் பெறப்பட்டன. இவற்றின் வடிவமைப்பு, சின்னங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பதினொரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன (புஷ்பரட்ணம் 1998 அ 1-13). அவை பின்வருமாறு.

 

 

 

 

 

நாணய வகை அளவு (அங்குலம் ) எடை (கிராம்)

 

1 1.2 × 0.1 1.4
2 1.4 × 0.1 1.5
3 1.6 × 0.4 2.0
4 1.7 × 0.4 2.4
5 2.5 × 1.6 2.5
6 2.6 × 1.5 3.0
7 3.2 × 2.4 3.2
8 3.4 × 2.4 3.9
9 3.4 × 2.5 5.8
10 3.4 × 2.6 5.6
11 3.7 × 2.8 5.3