சேரன் செங்குட்டுவன்

இவன் தமிழ்நாடாகிய சேரர்நாட்டுத் தலைவன். இவன் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். தாய் சோழன் மணக்கிள்ளியின் மகள் நற்சோணை, தம்பி இளங்கோ. இவன் மனைவி இளங்கோவேண்மாள், இவள் வேண்மாள் என்பதால் வேளிர்குலத்தவளாக எண்ணப்படுகிறாள். இவனிவளையன்றி வேறெவரையும் மனைவியாகக் கொள்ளவில்லை. இவனுக்குக் குட்டுவஞ்சேரல் என்ற குமரன் ஒருவனிருந் தனன். இவன் தன்னைப் பதிற்றுப்பத்தில் (5 வதால்) பாடிய பாணருக்குப் பெரும்பொருளுடன் இக்குட்டுவஞ் சேரலையும் பரிசாக அளித்தனன். செங் குட்டுவனுக்கு அம்மான் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியெனவும், அந்த அம்மான் குமரன் சோழன் இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளியென்றும் எண் ணப்படுகிறது. இவன் தன் தாயாகிய நற்சோணையின் பொருட்டுச் சமைத்த சிலையைக் கங்கை நீராட்டச் சென்றகாலத்து ஆங்கு எதிர்த்த ஆரிய மன்னர் நூற்றுவரை யெதிர்த்து வெற்றி கொண்டான். இவன் கொங்கர் செங்களத்துச் சோழபாண்டியர்ளுட னெதிர்த்துக் கொடுகூரை நாசஞ் செய்தனன். (இது மைசூரிராஜ்யத்தின் ஒரு பிரிவு) இன்னுமிவன் கடலை அரணாகக்கொண்டு இடர் விளைத்தவர்களை மரக்கலங்களில் சேனை கொண்டு சென்று வெற் றிகொண்டான். இவன் பாண்டியன் படைத்தலைவனாகிய பழையன் என்பான் மோகூராண்டிருந்தனன். சேரன் செங்குட்டுவனுக்கு மோரிய அரசன் அறுகை நண்பன். அறுகையாகிய நண்பனுக்குப் பழையன் பகைவனாதல் நோக்கி இவன் பழையனுடன் போரிட்டு அவனது காவன் மரமாகிய வேம்பினை வெட்டி அவனது சேனைகளைக் கடாக்களாகக்கொண்டு அவன் மகளிர் கூந்தல்களை அறுத்துக் கயிறுகளாக்கி வண்டி இழுப்பித்தான் என்பர். 9ம் கடற்கரையிலிருந்த வியலூரையும் அழித்தனன். செங்குட்டுவனுக்கு அம்மானாகிய சோழனிறந்தகாலத்து அவன் மகனும் தன் மைத்துனனுடாகிய இளஞ்சோழன் (பெருங்கிள்ளி) பட்டமடைந்த போது அவனைத் துன்புறுத்திய நேரிவாயிலில் இளங்கோ ஒன்பதின்மர் சோழமன்னரை வெற்றிகொண்டான். இடும்பாதவனத்துப் போரிட்டுப் பகைவரை வென்றான். இவன் காலத்துக் கோவலன் கண்ணகி மணிமேகலைகளின் கதை நிகழ்ச்சி. சிலப்பதிகார கதாநாயகியான கண்ணகியின்பொருட்டு வடநாட்டு யாத்திரை நிகழ்த்தி நூற்றுவர் கன்னரால் தமிழ்நாட்டரசரை இகழ்ந்த ஆரிய அரசர்க்கு யுத்த செய்தி அறிவித்து நீலகிரியினின்று புறப்பட்டுக் கங்கையாறு கடந்து உத்தரகோச லத்தையடைய செய்தியறிந்த கனக விசயரென்ற வடநாட்டரசர் உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன், என்போரைத் துணைகொண்டு எதிர்க்க அவர்களுடனெதிர்த்துப் போரிட்டுக் கனகவிஜயருடன் தேர்வீரர் ஐம்பத்திருவரையும் தன்னகப்படுத்தினன். பின் பத்தினிச் சிலையை இமயத்திருந்து எழுப்பித்துக் கனகவிஜயர் முடிமீதிருத்தி நீர்ப்படை செய்து தன்னாடடைந்து பத்தினிக் கடவுளைப் பிரதிட்டை செய்வித்து, தேவந்திமேல் ஆவேசித்த பாசண்ட சாத்தன் சொற்கேட்டுத் தன்னாட்டின் மலைப்பக்கத்து வந்திருந்த இளம்பெண்களின் மீது காகநீர் தெளிக்க அப்பெண்களின் பழம்பிறப்புணர்ந்து பத்தினிக்கடவுட்குக் கோயிலமைத்துப் பிரதிட்டை செய்வித்தனன், அப்பத்தினிக் கடவுள் சரிதத்தை இவன் சகோதரராகிய இளங்கோ அடிகள் சிலப்பதிகாரமெனுங் காவியமாக அக்காலத்து இயற்றி அரங்கேற்றினர். இவன் பெருநற்கிள்ளிக்கு நேர்ந்த ஆபத்தைக் கேள்வியுற்றுச் சேனைகளுடன் சென்று நேரிவாயிலில் அவன் பகைவரை வென்று பட்டத்திருத்தினன், இவன் காலத்திருந்த பாண்டியர் ஆரியப் படைதந்த நெடுஞ்செழியன், வெற்றிவேற் செழியன் (நன்மாறன்), தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன, கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதி. இவன் காலத்திருந்த சோழர்கள் உறையூரி மணக்கிள்ளி, காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி புகாரில் கரிகாற் பெருவளத்தான், கிள்ளிவளவன் (சேட்சென்னி), நலங்கிள் ளியுமாவர். இவன் காலத்திருந்த புலவர்களுள் சிறந்தார் பரணர், சீத்தலைச்சாத்தனார் முதலியோர். இவன் கடலிற் கப்பற்படையுடன் சென்று போரிட்டுப் பகைவர்களை வென்றமையால் இவனுக்குக் கடல் பிறகோட்டிய செங்குட்டுவன் எனவும் பெயர். இவன் சேநாபதி வில்லவன் கோதை, இவனது தேசவருவாயின் தலைமை அமைச்சன் அழும்பில்வேள், இவ்வமைச்சனுக்கு வானவிறல்வேள் எனவும் பெயர். “இவனது தூதுவர் சஞ்சயன், நீலன் என்போர். இவனது முத்திரை வில் கயல், புலி. இவன் திருமுகம் எழுதுவோர் கண்ணெழுத்தாளர் எனப்படுவர். இவனுடன் இவன் கோப்பெருந்தேவியுமரசு வீற்றிருப்பள். இவன் முன்னோர் அணிந்திருந்த எழுமுடிமாலை இவனும் அணிந்திருந்தனன். இவன் சற்றேறக் குறைய (35) வருஷம் அரசாண்டிருக்க லாம். இவன் சிவபெருமானையும் விஷ்ணு மூர்த்தியையும் உபாசிப்பவனென்பதைச் சிலப்பதிகாரங் கூறுகிறது. இவன் தன் காலத்து இத்தமிழ் நாட்டரசைப் பெருவிரிவினதாய் வளரச்செய்தனன். இவ்வரசனது காலம் சற்றேறக்குறைய கடைச்சங்கத்தவர் காலமாக வேண்டும். இவனைக் கடைச்சங்கத்திருந்த மாமூலனார், சீத்தலைச்சாத்தனார் முதலியோர் இவனது வட நாட்டு வெற்றிகளைப் புகழ்ந்து பாடியிருத்தலால் இவன் காலம் கடைச்சங்கத்தவர் காலமெனக் கொள்ளப்படுகிறது. இக்கடைச்சங்கம் சிலர் கி பி. இரண்டாம் நூற்றாண்டெனவும், சிலர் 4, 5ம் நூற்றாண்டுகளென்றும் கூறுகின்றனர்.