‌‌மருங்கூர்ப்பட்டினம்‌ மருங்கை

பாண்டிய நாட்டில்‌ திருவாடானை வட்டத்தில்‌ மருங்கூர்‌ என்னும்‌ பெயருடன்‌ ஓர்‌ ஊர்‌ உள்ளது. “பசும்பூண்‌ வழுதி மருங்கை” என்னும்‌ தொடர்‌ பாண்டியனுக்குரியது இவ்வூர்‌ என்பதை வலியுறுத்துகிறது. மருங்கூர்ப்பட்டினம்‌ என்றும்‌, மருங்கை என்றும்‌ இவ்வூர்‌ சங்க இலக்கியங்களில்‌ குறிக்கப்பெற்றுள்ளது. நற்றிணையில்‌ 289 ஆம்‌ பாடலைப்பாடிய சேந்தன்‌ குமரன்‌, அகநானூற்றில்‌ 80 ஆம்‌ பாடலைப்பாடிய கிழார்‌ பெருங்‌ கண்ணன்‌, 327 ஆம்‌ பாடலைப்‌ பாடிய பாகைசாத்தன்‌ பூதன்‌ ஆகிய சங்ககாலப்‌ புலவர்கள்‌ மருங்கூரைச்‌ சார்ந்தவர்கள்‌.
“பச்சிறாக்‌ கவர்ந்த பசுங்கட்காக்கை
தூங்கல்‌ வங்கத்துக்‌ கூம்பில்‌ சேர்க்கும்‌
மருங்கூர்ப்பட்டினத்து அன்ன, இவள்‌
நெருங்கேரெல்வளை ஓடுவகண்டே” (நற்‌. 258:8 11)
“பசும்பூண்‌ வழுதி மருங்கை யன்ன, என்‌
அரும்‌ பெறல்‌ ஆய்‌ கவின்‌ தொலைய,
பிரிந்து ஆண்டு உறைதல்‌ வல்லியோரே” (௸., 358:10 12)
“கடி மதில்‌ உரைப்பின்‌ ஊணூர்‌ உம்பர்‌,
விழுநிதி துஞ்சும்‌ வீறுபெறு திருநகர்‌,
இருங்கழிப்‌ படப்பை மருங்கூர்ப்பட்டினத்து,
எல்‌ உமிழ்‌ ஆவணத்து அன்ன,
கல்‌ என்‌ கம்பலை செய்து அகன்றோரே” (அகம்‌. 227: 18 22)