முத்தாறு என்ற ஊர்ப்பெயர் அவ்வூரைத் தன்னகத்தே கொண்ட கூற்றத்திற்கும் பெயராய் அமைந்திருந்தது.
“பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங் கடல் கொள்ள
வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு
தென்திசையாண்ட தென்னவன் வாழிய” (சிலப். 11:19 22) என்ற சிலப்பதிகார அடிகளுக்கு, என்றது: அங்ஙனமாகிய நிலக்குறைக்குச் சோழ நாட்டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும் சேரமானாட்டுக் கூற்றமுமென்று மிவற்றை இழந்த நாட்டிற்காக வாண்ட தென்னவன் வாழ்வாயாக என்றவாறு!” என அடியார்க்கு நல்லார் உரை உள்ளது. முத்தூர்க் கூற்றம் என்றும் பெயர் பெற்றிருந்ததெனவும், சோழ நாட்டெல்லையிலே இருந்தது எனவும் தெரிகிறது. புறநானூறு இதை வேளிர்க்குரியதாயிருந்ததாகக் கூறுகிறது. செழியனால் கைப்பற்றப்பெற்றது எனவும் கூறுகிறது. முத்தூற்றுக்கூற்றம் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ளது என்றும், திருப்பூவணத்துத் தாமரப்பட்டயத்தில் அடிக்கடி கூறப்பட்டுள்ளது. என்றும் தெரிகிறது. தூறு என்றால் புதர் என்றும் குறுங்காடு என்றும் பொருள் உள்ளமையால் புதர்கள் அடங்கிய அல்லது குறுங்காடு அடங்கிய நிலப்பகுதி மூன்று பகுதியாய் நெருங்கியிருந்து முத்தூறு எனப் பெயர் பெற்றிருக்கலாமோ என்பது ஆய்வுக்குரியது. தூர் என்றால் வேர் அல்லது மரத்தினடிப் பகுதி என்றும் பொருள் உள்ளது. ஏதாவது குறிப்பிட்ட மரத்தினடிப்பகுதி அல்லது வேர்ப்பகுதியைச் சுற்றிலும் அமைந்த குடியிருப்பகளைக் கொண்ட ஊர்ப்பகுதியைக் குறிக்க எழுந்த பெயரா என்றும் எண்ண இடமளிக்கிறது.
“பொன்னணியானைத் தொன் முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீள்குடைக் கொடித் தேர்ச்செழிய.”