கஞ்சனாரிலே மதுசூதனாசாரியருடைய புத்திரனார். இவர் பூர்வசமயம் வைஷ்ணவம். பின்னர்ச் சைவசமய சாஸ்திரங்களைக்கற்றுச் சைவசமயியாயினர். அதுகண்ட வைஷ்ணவர்கள், இவரை நோக்கி, உமது சிவன் உண்மைப் பரம்பொருளாயின் நாங்களிடும் இருப்புப்படி மேனின்று சிவ பரத்துவ நாட்டக்கடவீர் என்ன, இவர் அதற்குடன்பட்டு வைஷ்ணவர்கள் பழுக்கக்காச்சிய இருப்புப் பாளப்படியேறிச் சிவபரத்துவஞ் சாதித்தவர். இவர் பூர்வநாமம் ஹரிதத்தர். இவராலியற்றப்பட்ட நூல்கள் சதுர்வேத தாற்பரிய சங்கிரகமுதலியன. உயர்கா யத்திரிக் குரியபொருளாகலிற், றசரதன் மதலை தாபித் தேத்தலிற், கண்ணன் கயிலையினண்ணி நின்றிரப்பப், புகழ்ச்சியி னமைந்த மகப்பே றுதவலிற், றனாது விழியு னொராயிரங் கமலப், புதுமலர் கொண்டு பூசனையாற்றலின், அமைப்பருங் கடுவிட மமுதுசெய் திடுதலிற், றென்றிசைத் தலைவனைச் செகுத்துயிர் பருகலின், அவுணர் முப்புரமழிய வில் வாங்கலிற், றக்கன் வேள்வி தகர்த்தருள் செய்தலிற், றனஞ்செயன் றனக்குத் தன்படை வழங்கலின், மானுட மடங்கலை வலிதபக்கோறலின், மாயோன் மகடூ உவாகிய காலைத், தடமுலை திளைத்துச் சாத்தனைத் தருதலின். ஆழ்கடல் வரைப்பினான் றோரநேகர், அன்பு மீதூர வருச்சனையாற்றலி, னான் கிருசெல்வமுமாங்கவர்க் கருடலின், ஐயிரு பிறப்பினு மரியருச்சித்தலின், இரு வருமன்னமுமேனமு மாகிஅடி முடி தேட வழற்பிழம்கலிபாற், கங்கைசூழ் கிடந்த காசிமால் வரைப்பிற், பொய்புகல் வியாதன் கைதம்பித்தலின், முப்புர மிறுப்புழி முகுந்தப் புத்தேண், மால்விடை யாகி ஞாலமொடு தாங்கலின். அயன்சிர மாலை யளவில வணிதலின், ஞானமும் வீடும் பேணினர்க்குதவரலிற், பசுபதிப் பெயரிய தனிமுதற் கடவுள், உம்பர்களெவர்க்கு முயர்ந்தோன், என்பது தெளிகவியல்புணர்ந்தோரே இது ஹரதத் தாசாரியா அருளிச்செய்த சிவபரத்துவ நிரூபணமொழிபெயர்ப்பு