விவசுவதன் புத்திரன். இவன் பாரி சிரத்தை. இவன் புத்திரர் இக்ஷூவாகு, நிருகன், சரயாதி, திஷடன், திருஷ்டன், கரூசன், நரிஷ்யந்தன், விருஷத்திரன், நபகன், கவி எனப் பதின்மர். இவருள் இக்ஷூவாகு வமிசத்தரசர்களுக்கு அயோத்தி ராஜதானியாயிற்று இக்ஷூவாகுவமிசத்தார் காரூசரெனப்படுவர். நபகன் வமிசத்தார்க்குக் கண்டகி தீரதேசமுரியது. சரியாதி வமிசத்தார்க்கு குசஸ்தலி ராஜதானி. இவர்களே வைவசு வதமநுவமிசத் தரசர்கள். வைவசுவதமநு பாரியாகிய சிரத்தை தனக்கு ஒரு புத்திரியும் வேண்டுமென்று பிரார்த்தித்து இளையென்னும் புத்திரியைப் பெற்றாள். அதுகண்ட வைவசுவதன் தனது குருவாகிய விசிஷ்டரை நோக்கி அப்புத்திரியைப் புத்திரனாக்கித் தருகவென்ன, அவரும் அவ்வாறே இளையைச் சுத்தியுமனன் என்னும் புத்திரனாக்க, அவனையும் ஒருதிசைக்கரசனாக்கினான். அப்புத்திரனொரு நாள் வேட்டை மேற் சென்றபோது சரவணப் பொய்கையைக் கண்டு அங்கே தங்கினான். தங்குதலும் பூர்வம் பார்வதிதேவியார் யாவனொருவன் இப் பொய்கையில் வந்து தங்குவானோ அவன் பெண்ணுருப்பெறக் கடவனென்று விதித்தவுண்மையாற் சுத்தியுமனன் மீளவும் இளையென்னும் பெண்ணாயினான். அவ்வடிவத்தைக் கண்ட புதன் மோகித்துக் கூடிப் புரூரனைப் பெற்றான். இப்புரூரவனாலேயே சந்திர வமிசம் பெருகுவதாயிற்று. பின்னர் வசிஷ்டரது முயற்சியால் இளை ஒருமாசம் பெண்ணாகவும் ஒருமாசம் சுத்தியுமனன் என்னும் ஆண்மகனாகவுமிருக்கச் சிவன் அருள் புரிந்தார்