வைத்தியநாதநாவலர்

இற்றைக்கு இருநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னே திருவாரூரிலே அபிஷேகத்தார் மரபிலே அவதரித்துத் தமிழ்க்கடல் குடித்துத் தமிழ்பாரி பொழிந்து விளங்கிய பாண்டிதசிகாமணி. இவரே இலக்கண விளக்கஞ் செய்தவர். அந்நூலுக்குரையும் இவர் தாமேயெழுதினர். தொல்காப்பியத்துக்குப் பின்னர்த் தோன்றிய இலக்கண நூல்களுள்ளே இந்நூல் மிகச்சிறந்தது. இவர் காலத்திலே இவரோடு வாதம்புரியும் வன்மையில்லாதவராயிருந்து பின்னர் வன்மை படைத்த சிவஞானமுனிவர் இலக்கணவிளக்கச் சூறாவளியென வொரு நூலியற்றினர். அதனால் அதுமறைந்து தொழியாது இன்னும் ஒளிபெற்று நிலவுகின்றது. சூறாவளி இலக்கண விளக்கத்தைமறுப்படுத்தாமல் தன்னையியற்றிய சிவஞான முனிவரென்னும் கலாசந்திரனுக்கே களங்கமாயிற்று. வைத்தியநாதநாவலர்க்குத் தொண்டைமண்டல சதகம் பாடிய படிக்காசுப்புலவர் மாணாக்கர். ஒரு துறைக்கோவைபாடிய அமிர்தகவிராயர் ஒரு காலத்தவர். வைத்தியநாதநாவலரைச் சுவாமிநாத தேசிகரே தமிழ்க்கிலக்காகிய வைத்தியநாதன் என்று புகழ்வரென்றால் இவர் பெருமைக்கு வேறு சான்று வேண்டா