தஞ்சாவூரில் வைகல் என்ற பெயரில் இன்றும் அமைந்துள்ள இடம். இங்குள்ள மாடக்கோயில் சிறப்பு பெற்றது. சம்பந்தர் இங்குள்ள சிவனைப் பாடியுள்ளார். கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில் இது. கொம்பியல் சோதை முன்னஞ்சக் குஞ்சரத் தும்பியதுரி செய்த துங்கர் தங்கிடம் வம்பியர் சோலை சூழ் வைகன் மேற்றிசைச் செம்பியன் கோச்செங்கணான் செய்கோயிலே (276-4) என்று சம்பந்தர் இதனைக் காட்டுகின்றார். மேலும்,
விட மடை மிடற்றினர் வேதநாவினர்
மடமொழி மலை மகளோடும் வைகிடம்
மடவன நடைபயில் வைகன் மாநகர்க்
குடதிசை நிலவிய மாடக் கோயிலே (276-5)
என்றியம்பும் தன்மையில் வைகல் மாநகர்க்குக் குடதிசையில் இருந்தது மாடக்கோயில் என்ற குறிப்பினைக் காண்கின்றோம். எனவே இதனை நோக்க வைகல் என்பது ஒரு சிறந்த நகராக விளங்கியிருக்கிறது என்பது தெளிவு தங்குதற்குரிய சிறந்த குடியிருப்புப் பகுதி அல்லது மக்கள் தங்கிய இடம் என்ற நிலையில் வைகல் என்ற பொருள் பொருத்தமுறுகிறது.