வேள்விக்குடி

வேள்விக்குடி என்ற பயரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர் இது. இது திருவேள்விக் குடி என்றும் அன்று அழைக்கப்பட்டு இருந்தது என்பது பெரிய புராணம் சுட்டும் நிலை (35-121-3). அரசகுமாரன் ஒருவனுக்கு மணம் புரிய நிச்சயித்திருந்த பெண்ணை மணம் நிறைவேறு முன் அவன் தாய் தந்தையர் இறக்கவே. அவள் சுற்றத்தார் கொடாது மறுத்தனர். அரசகுமாரன் சிவனை நோக்கி, தவம் செய்து வேண்டினான். இறைவன் அப்பெண்ணை ஒரு பூதத்தால் எடுத்துக் கொண்டு வந்து அவனுக்குத் திருமண வேள்வி செய்தருளினார். ஆதலின் திருவேள்விக் குடி என்று பெயர் பெற்றது என்பர். திருநாவு கரசர்.
வேள்விக் குடியெம் வேதியனே (15-10) எனப்பாட, சுந்தரர்
மூப்பதுமில்லை பிறப்பதுமில்லை இறப்பதுமில்லை
சேர்ப்பது காட்டகத்தூரினுமாகச் சிந்திக்கினல்லால்
காப்பது வேள்விக் குடிதண்டுருத்தியெங் கோனரைமேல்
ஆர்ப்பது நாகமறிந்தோமேனா மிலர்க் காட்படேமே (18-1)
என்று புகழ்கின்றார். வேள்வி நடந்த இடமாக இருக்கலாம் அல்லது வேள்வி செய்யும் வேதியர்கள் வாழுமிடமாக இருந்திருக்கலாம் என்பது இப்பெயருக்குப் பொருத்தமாக இருக்கலாம்.