வேளாளர்

உழுவித்துண்போரும் உழுதுண்போருமென இருவகையினர். அவருள், உழுவித்துண்போர் மண்டிலமாக்களும், தண்டத்தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும், அழுந்தூரும், நாவூரும், ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமும், கிழாருமுதலிய பதியிற் றோன்றி வேளெனவும், அரசெனவுமுரிமை யெய்தினோரும், பாண்டிநாட்டுக்கா விதிப்பட்ட மெய்தினோரும், குறுமுடி குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடை வேந்தர்க்குமகட்கொடைக்குரிய வேளாளராம். வேளாளர்க் குரிய கருவி நாஞ்சில், சகடமுதலாயின. இவர்க்குச் சிறந்ததொழில் உழுதல், உழுவித்துண் போர்க்கு வேந்தர் கரும முடித்தலும், உழுதுண்போர்க்கு வணிகமுமுரித்தா தலுமுண்டு. வேளாளர் நான்காம் வருணத்தவர். இவர்க்கு வேதமொழிந்தனவோதலும், ஈதலும், உழவும், நிரையோம்பலும், வாணிகமும், வழிபாடுமாகிய ஆறுமுரியன. வேளாளர் ஆதியிலே கங்கைக் கரையிலேயுள்ளோராதலினாலும் பின்னர் அங்கிருந்து சென்று தென்னாட்டிற்குடி கொண்டோ ராதலினாலும், கங்காபுத்திர ரென்றும், கங்கைமைந்த ரென்றும், கங்கா குலத்தரென்றுங் கூறப்படுவர். மேகத்தைச் சிறையிட்ட பாண்டியனை இரந்து பிணைநின்று சிறைமீட்டவர் வேளாளராத லின் அவர்க்குக் கார்காத்தாரென்னும் பெயருமுளதாயிற்று. வேளாளர் பெருமையைக் கம்பர் ஏரெழுபதாலும் படிக்காசர் தொண்டை மண்டல சதகத்தாலும் பாடினர். சம்பந்தமூர்த்திகளும் தமது தேவாரத்தினும் வைத்துப் பாடினர்