திருவேதிகுடி எனத் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர் இது. குடமுருட்டியாறு அருகில் உள்ள ஊர் இது. வேதங்கள் வழிபட்ட தலம் என்ற கருத்தைவிட, வேதியர்களின் குடியிருப்புப் பகுதி என்பது ஏற்புடையது. சிறந்த சீர்த் திருவேதி குடி’ என இதனைச் சுட்டுவார் சேக்கிழார் (34-356).
நீறு வரியாடரவொடாமை மன வென்பு நிரை பூண்பவரிடபம்
ஏறு வரியாவரு மிறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடமாம்
தாறுவிரி பூகமலி வாழை விரை நாறவிணை வாளை மடுவில்
வேறு பிரியாது விளையாட வளமாரும் வயல் வேதி குடியே
என்கின்றார் சம்பந்தர் (336-1). திருநாவுக்கரசர்,
செய்யினினீல மணங்கமழும் திருவேதி குடி (90-1)
செய்த்தலை வாளைகள் பாய்ந்துக்களும் திருவேதிகுடி (90-2)
என இதன் இயற்கை வளம் இயம்புகின்றார்.