வேதாங்கம்

சிக்ஷை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம் என்னும் ஆறும் வேதத்திற்கு அங்கமெனப் படும். வேதத்தைச் சுரத்தோடு கிரமமாகவோதல் வேண்டும். அங்ஙனமோதாவிடத்து மந்திரங்கள் உரியபயனைத்தரா. சுரவேறுபாட்டினாலுச் சரிக்குமுறைமையை அறிவிப்பது சிக்ஷையாம். வேதங்களில் விதிக்கப்பட்ட கருமங்களை அநுட்டிக்கும் முறைமையை அறிவிப்பது கற்பமாம். வேதங்களின் எழுத்துச் சொற் பொருளிலக்கணங்களை அறிவிப்பது வியாகரணம். வேதப் பொருளை நிச்சயிப்பது நிருத்தம். வேத மந்திரங்களிற் காயத்திரி முதலிய சந்தங்களின் பெயரையும், அவைகளுக்கு எழுத்து இவ்வள வென்பதையும் அறிவிப்பது சந்தோவிசிதி. வேதத்தில் விதிக்கபட்ட கருமங்களைச் செய்யுங்காலத்தை நிச்சயிப்பது சோதிடம்