சுருதி. இது இருக்கு, யசுர், சாமம், அதர்வணம், என நான்கு வகைப்படும். அந்நான்கும் ஞானகாண்டம், கர்மகாண்டமென இருபாற்படும். ஞானகாண்டம் பிரமத்தைப் பிரதிபாதிப்பது. அஃது உபநிஷதம் எனப்படும். கர்மகாண்டம் வருணாச்சிரம தருமங்களையும், இந்திராதி தேவபூசைகளையு மெடுத்துக் கூறுவது. அப்பூசைகள் சர்வாந்தரியாமியாகிய பரமபதிக்குப் பிரீதியாக ஒவ்வொரு மூர்த்த மூலமாகச் செய்யப்படுவன. இவ்வேதம் காலந்தோறும் இருஷிகளால் அவ்வக்கால பக்குவத்துக்கேற்ப வகுக்கப்படும். தற்காலத்துள்ள நான்கும் துவாரபரயகாந்திய காலத்திலே தோன்றிய கிருஷ்ணத்துவைபாயனர் என்னும் விடயாசரால் வகுக்கப்பட்டன. இருக்கு வேதம் இருபத்தொரு சாகையும், யசுர்வேதம் நூறு சாகையும், சாமவேதம் ஆயிரஞ்சாகையும் அதர்வணவேதம் ஒன்பது சாகையும் உடையன. இன்னும் வேதம் மந்திரமென்றும் பிராமணமென்றும் இரு பிரிவினையடையதாம். மந்திரம் தேவதைகளைத் தியானிக்கும் வாக்கியங்கள். பிராமணம் அம்மந்திரங்களைப் பிரயோகிக்கும் முறையையறிவிப்பது