வேட்டக்குடி

வேட்டக்குடி என, காரைக்காலுக்கு அருகில் அமைந்துள்ளது இவ்வூர். அர்ச்சுனன் தவம் செய்யுங்கால் இறைவன் வேடவடிவத்தில் வெளிப்பட்ட தலம் என்பது இவ்விடம் பற்றிய எண்ணம். வேட்களம் போன்றே இதற்கும் அர்ச்சுனனைத் தொடர்பு படுத்துகின்ற நிலை விளங்குகிறது எனினும் வேட்டம் குடி வேட்டையாடும் மக்கள் வாழ்ந்த குடியிருப்புப் பகுதி (வேட்டை வேட்டையாடுதல்) என்பதே பொருத்தமாக அமைகிறது. சம்பந்தர் இங்குள்ள சிவனைப் புகழ்கின்றார்.
வண்டிரைக்கும் மலர்க் கொன்றை விரிசடை மேல் வரியரவம்
கண்டிரைக்கும் பிறைச் சென்னிக் காபாலி களை கழல்கள்
தொண்டிரைத்துத் தொழுதிறைஞ்சத்துளங் கொளிநீர்ச் சுடர்ப்பவளம்
தெண்டிரைக் கண் கொணர்ந்தெறியும் திருவேட்டக்குடி (324-1)
எனப்பாடும் போது. கடற்கரைத் என்பது தெரிகிறது. மேலும்,
பாய்திமிலர் வலையோடு மீன்வாரிப் பயின் றெங்கும்
பாசினியிற் கொணர்ந்தட்டும் கைதல் சூழ் கழிக் கானல்
போயிரவிற் பேயோடும் புறங்காட்டிற் புரிந்தழகார்
தீ யெரிகை மகிழ்ந்தாரும் திருவேட்டக்குடி (324-2)
எனும் பாடலில், இக்கருத்துடன், இவ்வேட்டக்குடி வேடர்கள் வாழ்ந்த குடியிருப்பாக இருந்திருக்கலாம் என்பது, காட்டுப்பகுதி என்ற எண்ணத்தாலும் உறுதிப்படுகிறது.