இன்று திருப்பதி என்ற வைணவத்தலச் சிறப்பால் பெருமையுடையது. தமிழ் நாட்டின் எல்லையாக அமைந்திருந்தது வேங்கட மலை. வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுல சும் (தொல் எழுத்து சிறப்பு -3). சங்க இலக்கியத்தில் மிகச் சிறந்த மலையாக இருந்ததையும், புல்லி என்ற அரசனின் ஆட்சி இங்கு நடைபெற்றதையும் (அகம் 61, 85) காண்கின்றோம். சிலப்பதி காரத்தில் திருமாலின் சிறப்பு பாடப்படும் நிலையில் இம்மலை யுடன், இங்குள்ள திருமால் கோயிலும் பழம் சிறப்புடையவை என்பது விளங்குகிறது. இங்கு மக்கள் குடியிருப்பும் இருந்ததை என்பதை
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும் (அகம் – 61-10-13)
கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன் தலை நல் நாட்டு வேங்கடம் (85-8-10)
என்ற பாடலடிகள் சுட்டுகின்றன. எனவே சங்க இலக்கியம் திருமால் கோயில் பற்றிச் கட்டாத நிலையில் முதலில் மக்கள் வாழ்ந்து இருப்பினும், பின்னர் தான் அவர்கள் திருமால் கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது தெரிகிறது. சிலப்பதிகாரத்தில்,
வீங்கு நீர் அருவி வேங்கடமென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங்கு ஓங்கிய இடை நிலைத்தானத்து
மின்னுக் கோடியுடுத்து விளங்கு விற்பூண்டு
நன்னிற மேகம் நின்றது போல
பகையணங்காழியும் பால் வெண் சங்கமும்
தகை பெறு தாமரைக் கையினேந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம் பூவாடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடி யோன் நின்ற வண்ணமும் (காடு – 41-51)
என்ற பாடலடிகளில் இங்குள்ள இறைச் சிறப்பு காட்டப்படுகிறது. திருமாலின் சிறப்பு நாளுக்கு நாள் பெருகியது என்பதைப் பின்னர் தொண்டரடிப் பொடியாழ்வாரைத் தவிர, மற்ற ஒன்பது ஆழ்வார்களாலும் ஆண்டாளாலும் பாடல் பெற்ற தலமாக இது திகழ்ந்தமை காட்டுகிறது. இம்மலையின் பெயரை நோக்க வேம்கடம் என்ற நிலையில் அமைந்ததோ எனத் தோன்றுகிறது. திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும் என்ற நூலில் நா. சுப்பு ரெட்டியாரும் இப்பெயர் பற்றி இயம்புகின்றார். வேங்கடம் என்ற பெயர் இந்த ஊரையும் குறித்து அன்று அமைந்த நிலை மறைந்து, இன்று திருமால்பதியால் செல்வாக்கு பெற்று, திருப்பதி என்பதே வழக்குக்கு வந்து விட்டதைக் காண்கின்றோம்.