திருவண்டுதுறை என இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர் இது. பிருங்கி முனிவர் வண்டு வடிவில் உமையொருபாகன் வடிவத்தைத் துளைத்து இறைவனை மட்டும் வழிபட்ட தலம் இது என்பர். சேக்கிழார் இதனைத் திருமலி வெண்டுறை’ என்பார் (34-574). சம்பந்தர் பதிகம் இறைவன் விரும்புமிடம் வெண்டுறை என்பதை எல்லாப் பாடல்களிலும் குறிக்கிறது (319). துறை என்பது ஆற்றுத் துறையாக இருக்கலாம். வெண் ணிலம் என்பதற்கு வெறுந்தரை, மணற்பாங்கான தரை என்று தமிழ் லெக்ஸிகன் பொருள் உரைப்பதை நோக்க, மணற்பாங்கான துறை என்ற நிலையில் வெண்டுறை என்ற பெயர் அமைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.