திரு வீழிமிழலை என்ற தலம். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது திருமால் இறைவனுக்குத் தம் கண்ணையே இடந்து மத்திய தலம் தான் வீழிமழலை என்பது புராணக் கருத்து.. எனினும் வீழிச் செடிகளின் நிறைவு காரணமாக இப்பெயர் வந்தது என்பர் மிழலை என்ற ஊர்ப்பெயர்க் கூறினைச் சங்க இலக்கியத்திலேயே காண்கின்றோம். எனவே மிழலை என்ற பொதுக் கூறுடன் வீழிகள் சிறப்பாக இணைய, வீழி மிழலை பெயர் அமைந்தது என்று தெரிகிறது. சைவர்களால் பெரிதும் போற்றப்பட்ட நிலையை மேற்குறித்தப் புராணக் கதை இயம்புகிறது. மேலும், பலராலும் பாடல் பெற்ற சிறப்பும் இங்குள்ள கோவிற் பெருமையை நிலை நாட்டும்.
தோற்றம் கண்டான் சிரமொன்று கொண்டீர் தூய வெள்ளெரு தொன்
றேற்றங் கொண்டீர் எழில் வீழி மிழலை யிருக்கை கொண்டீர்
என்பது திருநாவுக்கரசர் தேவாரம் (96-7). மேலும் இவர் பாடல் கள். திருவீழி மிழலையானைச் சேராதார் தீ நெறிக்கே சேர் கின்றாரே என்ற இவரது கருத்தை யுமுணர்த்துகிறது (264)
ஏரிசையும் வடவாலின் கீழிருந்து அங்
கீரிருவர்க் கிரங்கி நின்று
நேரிய நான் மறைப் பொருளை உரைத்தொளிசேர்
நெறியளித் தோனின்ற கோயில்
பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும்
பயின்றோதும் ஓசை கேட்டு
வேரிமலி பொழிற் கிள்ளை வேதங்கள்
பொருட் சொல்லும் மிழலையாமே (132-1)’
என உரைப்பர் சம்பந்தர். மேலும் இந்நகர்ச் சிறப்பினை,
வாதைப்படுகின்ற வானோர் துயர் தீர
ஓதக் கடனஞ்சை யுண்டான் உறைகோயில்
கீதத் திசையோடும் கேள்விக் கிடையோடும்
வேதத் தொலியோவா வீழி மழலையே’ என்றும் உரைக்கின்றார் (82-2). மிழலை என்றும் வீழி மிழலை என்றும் இவர்கள் சுட்ட, சுந்தரர்,
நம்பினோர்க் கருள் செய்யுமந்தணர் நான் மறைக்கிடமாய வேள்வியுள்
செம்பொனேர் மடவாரணி பெற்ற திருமிழலை
உம்பரார் தொழுதேத்த மாமலை யாளொடும்முடனே உறைவிடம்
அம்பொன் வீழி கொண்டீரடியேற் குமருளுதிரே (88-1)
எனப் பாடுகின்றபோது, மிழலையுள் உள்ள விழியில் உள்ள இறைவன் என்ற நிலை அமைகிறது. எனவே மிழலை என்ற ஊரில் வீழிச் செடிகள் நிறைந்த இடத்தில் இறைவன் கோயில் கொண்ட காரணத்தினால், அவ்விடம் வீழி எனச் சுட்டப்பட்டு, பின்னர், வீழி மிழலை இரண்டும், இணைந்து அப்பகுதி வீழி மிழலை என்று வழங்கத் தொடங்கியதோ எனத் தோன்றுகிறது. மேலும் இன்றும் இக்கோயிலின் தலவிருட்சம் வீழிச் செடி என அறியும்போது இவ்வெண்ணம் சரியாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.