வீரசோழியம்

இவ்வைந்திலக்கண நூல் வீரராசேந்திரன் (கி.பி.1063-68) என்றசோழப்பேரரசன் ஆட்சியில், பொன்பற்றி என்ற சிற்றூரில் குறுநில மன்னராகவாழ்ந்த, புத்தமதத்தைப் பின்பற்றியவரான புத்தமித்திரனார் என்பவரால்தம்மன்னன் விருதுப்பெயர் தோன்ற ‘வீரசோழியம்’ என்னும் பெயர்த்தாகயாக்கப் பெற்றது. இதன்கண் 183 கட்டளைக் கலித்துறைச் சூத்திரங்கள் உள.இவற்றின் வேறாகப் பாயிரம் மூன்று கட்டளைக் கலித்துறைப் பாடல்களாகப்புனையப்பட்டுள்ளது. இந்நூல் எழுத்து, சொல், பொருள் – என மூன்றுஅதிகாரங்களை உடையது. எழுத்ததிகாரம் சந்திப்படலம் என்ற ஒரே படலத்தைஉடையது (28 காரிகைகள்). சொல்லதிகாரம், வேற்றுமைப்படலம் – காரகப் படலம்- தொகைப்படலம் – தத்திதப்படலம் – தாதுப்படலம் – கிரியாபதப் படலம் -என்ற ஆறு படலங்களையுடையது. (முறையே 9, 6, 8, 8, 11, 13 காரிகைகள். ஆக,கூடுதல் 55 காரிகைகள்; இறுதியில் இரண்டு வெண்பாக்கள்.)தொல்காப்பியத்தை அடுத்தமைந்த முழு முதனூல் இஃதெனினும், இதன்கண் வடமொழிமரபு பெரிதும் பின்பற்றப்பட்டுள்ளது. இதன் பொருளதிகாரம், பொருட் படலம்- யாப்புப்படலம் – அலங்காரப் படலம் – என்ற மூன்று பகுப்பினதாய்,முறையே 21 36 41 = 98 காரிகைகளையுடையது. பொருட் படலத்தில் அகத்திணைத்துறைகள் திணை அடிப்படையில் முல்லைநடையியல் குறிஞ்சிநடையியல் என்றாற்போல விரித்துக் கூறப்பட்டுள்ளன. புறத்திணையின் பாடாண் பகுதியில் நாடகஇலக்கணச் செய்திகள் பலவும் இடம் பெறுகின்றன. செய்யுள் பற்றிய யாப்புப்படலத்தில் தமிழ்ப்பாக்கள் – பாவினங்கள் – இவற்bறாடு, வடமொழி விருத்தங்கள் – தாண்டகங்கள் – மணிப்பிரவாளம் போன்றவற்றின் குறிப்பும் இடம்பெறுகின்றன. அலங்காரப் படலம் வட மொழித் தண்டியாசிரியர் வரைந்தகாவ்யாதர்சத்தைப் பெரும்பாலும் மொழிபெயர்த்து அமைக்கப்பட்டுள்ளது.சித்திரகவிகள் சில விளக்கப்பட்டுள. இந் நூலுக்குப் பெருந் தேவனார்என்பார் அரிய உரை இயற்றியுள்ளார். அவ்வுரை இந்நூலினைக் கற்கப்பெரிதும் உதவுகிறது.