வீடூரான், வீடூரமுதலி

இவன் தொண்டை நாட்டு வீடூர்க்கிறைவனாகிய ஒரு வேளாளப்பிரபு. இவன் தமிழ்ப் புலவர்க்குத் தாதாவென்று தன்வாயிலிற் கொடியுயர்த்தித் தன்பால்வரும் புலவர்க்கெல்லாம் பெருநிதி வழங்கி வருநாளில், ஒரு புலவன்போய்த் தனது நுண்புலமை நிலைநாட்ட, இவன் அவனைப் புகழ்ந்து மெச்சி வேண்டுவதைக் கேட்டருளுமென்ன, புலவன் உன்பிரியநாயகியைத் தருதல் வேண்டுமென்றான். அதுகேட்ட இப்பிரபு சிறிதும்மனங்கோணாமல் தனது கற்பிற்சிறந்த மனையாளை யழைத்து உன்னை இப்புலவர் பெருமானுக் கீந்து விட்டேன் இன்றுமுதலா நீயெனக்கு மாதாவாயினை என்றான். அதுகேட்ட புலவன் நெஞ்சந்துணுக்குற்றுப் புருஷோத்தமனே, உன்மனக் கிடைக்கையைப் பரீக்ஷிக்குமாறு கேட்டதைப் பொறுத்து நான் கேட்குமுன்னே என்மனத்திலே என் புத்திரியாகப் புத்திபண்ணப்பட்ட இவ்வுத்தமியை மீளவும் அங்கீகரித்து என்னை மாமனாகக் கொண்டு இன்றுமுதல் அக்கேண்மை பாராட்டிவரக்கடவை, அதுவே எனக்குப்பெரியதோரூபகாரமும் பரிசிலுமாகுகவென்றான். பிரபுவும் புலவன் சொல்லை மறாது அங்கீகரித்தான். இவ்வுண்மை, போதாருந்தண் பொழில் வீடூரதிபன்புலவர்க்கெல்லாந் தாதாவெனக்கோடி கட்டுதலா லவன்றன்மனையை, நீதாவென வொருபாவாணன் கேட்பவந்நேரிழையை, மாதாவெனவழைத் தானென்கொலாந்தொண்டை மண்டலமே என்னுந் தொண்டை மண்டல சதகத்தாற் பெறப்படும்