கூவமென வழங்கும் நிலையில், செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள இடம் இது. திரிபுரம் எரித்த மூர்த்தி, கையில் வில்லேந்தி தங்கிய இடம் என்ற குறிப்பு இத்தலத்துப் பெயராய்வுக்குச் சிறிது வழி வகுக்கிறது. இந்நிலையில் விற்கோலத்தினனாக இறைவன் காட்சி தரும் நிலையில், இப்பெயர் அமைந்தது எனக் கூறலாம். இன்று இறைவன் திருமேனியின் நிலையில் இதன் உண்மை தெளிவாகலாம். சம்பந்தர் இத்தலத்து இறைவனைப் பாடியுள்ளனர். இவரது பாடல் ஒன்று,
முந்தினான் மூவருண் முதல்வனாயினான்
கொந்துலாமலர்ப் பொழில் கூக மேவினான்
அந்திவான் பிறையினான் அடியார் மேல் வினை
சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே (281-5)
என்று அமைகிறது இதனுள் மலர்ப்பொழில் கூகமேவினான் உறைவிடம் திருவிற் கோலம் என்ற எண்ணம் காண, இன்று கூவம்’ என்று சுட் டப்படும் பெயர் அன்றே இருந்தது என்பதும், விற்கோலம், என்பது இறைவன் தோற்றம் காரணமாகக் கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட பெயரே எனவும் கொள்ள இடம் அமைகிறது. எனவே விற்கோலம்’ என்பது கோயிற் பெயரே என்றும் கூவமென இன்று வழங்கும் நிலை கூகம்’ என்பதன் மரூஉ வழக்கே என்றும் சுட்டலாம். கூகம் என்பதன் பொருள் தெளிவில்லை.