வினாவுத்தரம்

மிறைக்கவிகளுள் ஒன்று; பாட்டின் இறுதியில் நிற்கும் ஒருசொற்றொடரின் எழுத்துக்களை ஓரெழுத்தோ இரண்டு மூன்றெழுத்துக்களோ கொண்டசொற்களாகப் பிரித்து அவை விடையாகும் வகையில் தொடக்கத்திலிருந்துவினாக் களை அமைத்துக் கடைசியில் அத்தொடர் முழுதுமே விடையாமாறு இறுதிவினாவை அமைத்துப் பாடும் சித்திரகவி. (உத்தரம் – விடை)எ-டு : ‘பூமகள்யார்? போவானை ஏவுவான்என்னுரைக்கும்? // நாமம் பொருசரத்திற்(கு) என் என்ப? – தாம் அழகின் //பேர் என்? பிறைசூடும் பெம்மான் உவந்துறையும் // சேர்வென்? திருவேகம்பம்’சொற்றொடர் ‘திருவேகம்பம்’ என்பது. வினாக்களும் விடை யும் ஆமாறு :பூ மகள் யார்? – திரு; போவானை ஏவுகின்றவன் என் உரைக்கும்? – ஏகு;சரத்திற்கு நாமம் என் என்பர்? – அம்பு; அழகின் பேர் என்? – அம்;பெருமான் உவந்துறையும் இருப்பிடம் என்? – திருவேகம்பம். இவ்வாறுமுறையே காணப்படும். (தண்டி. 98 உரை)