திருமிற்றக் கோடு என்று வழங்கப்படும் தலம், மலை நாட்டுத் தலமாகும். குலசேகர ஆழ்வார் இங்குள்ள திருமாலை வேண்டிப் பாடியுள்ளார்.
விரை குழுவு மலர்ப்பொழில் சூழ் விற்றுவக் கோடு நாலா -688
விண்டோய் மதிள் புடை சூழ் விற்றுவக் கோடு -689
மீன் நோக்கும் நீள்வயல் சூழ் விற்றுவக்கோடு-690
என இவ்விடத்தின் செழிப்பையும் அவர் பாடுகின்றார். எனினும் விற்றுவன் கோடு என்ற பெயரின் அடிப்படை தெரியவில்லை. மலைப் பகுதியாகையால் கோடு மலையுச்சியைக் குறித்ததெனக் கருதினும், விற்றுவ என்பதற்குரிய பொருள் விளக்கம் பெறவில்லை. மேலும் இங்குள்ள கோயில் பற்றிக் கூறும்போது, இது கருவூரில் விற்றுவக் கோட்டு அக்ரஹாரத்தில் ஆதியிலிருந்து, இப்போது இவ்விடத்துக்கு மாற்றப்பட்டதாகச் சிலர் கூறுவர் என்ற கருத்தும் நிலவுகிறது. எனினும் பிற விளக்கங்கள் கிடைப்பின் தெளிவு கிடைக்கும்.