மாதவாசாரியர் இவர் துங்கபத்திரைநதி தீரத்திலுள்ள தாகிய பம்பை யென்னும் கிராமத்திலே இற்றைக்கு ஐஞ்நூறுப் பதினேழு வருஷங்களுக்கு முன்னே வித்தியா நகரத்திலே அரசு வீற்றிருந்த அரிகரராயர் காலத்திலிருந்தவர். இவர் சம்ஸ்கிருதத்திலே ஏறக்குறைய எல்லாச் சாஸ்திரங்களிலும் வல்லுநராய் அவ்வச் சாத்திரங்களிலும் நூல்கள் செய்து விளங்கிய பிரசித்த பண்டிதர். இவர் தந்தைமாயணன். போகநாதர் சாயணாசாரியர் இவர் சகோதரர். இவர் புக்கணன் என்னுமரசனுக்கு மந்திரியாகவுமிருந்தவர். பராசர மாதவீயஞ் செய்தவருமிவரே. இவர் வறிய குடும்பத்திலே பிறந்தவராதலின் இளமையிலேயே செல்வராக வேண்டு மென்னும் பேரவாவோடு கல்விகற்று வந்தார். தம்மெண்ணம் விரைவிலே கைகூடாமையினாலே திருமகளையும் கலைமகளையும் நோக்கித் தவங்கிடக்குமாறு காட்டகத்திற்புகுந் துழலுவாராயினர். ஒருநாள் காட்டகத்தே அரசனுக்குரிய மாடுகளை மேய்த்துத் திரிபவனாகிய புக்கணனென்னு மொருடித்திரியனைக்கண்டு தாமநுபவிக்குங் கஷ்டத்தை யெடுத்துக் கூறினர். புக்கணன் அவர் மீது பேரிரக்க முடையனாகி அவர்க்குத் தினந்தோறும் போதியபால் தருவதாக வாக்களித்தான். அதற்கு அவர் அரசனுக்குரிய பாலை யான் கவர்தல் துரோகமாகுமேயென்ன, புக்கணன்அரசனுக்கு அளவுக்கு மேற்படப் பாலிருத்தலின் அவமே செல்லற் பாலதாகிய கூற்றிலொரு சிறுகூறு தவமேபுரிகின்ற உமக்குப் பயன்படுதல் அவனுக்குப் புண்ணியம் பயக்குமே யென்ன, அவர் உடன்பட்டனர் அவ்வாறே புக்கணன் கொடுக்கும் பாலையுண்டு காலக்கழிவு செய்து வரும் மாதவாசாரியார் அப்புக்கணன் மீது பேரன்புடையராயினார். உண்டிக்கவலை தீர்த்தலும் மாதவர் பேரூக்கங் கொண்டு தவமுயன்றார் நெடுங்காலங் கழிந்தபின்னர்க் கலைமகளுந் திருமகளும் புக்கணனுக்குத் தோன்றி, மாதவர் கருத்து இப்பிறப்பிலே நிறைவேறாதென்று கூறிப்போக, அவன் அதனை அவர்க்குரைத்தான். அவ்வளவிலமையாது அவர் மேன் மேலும் முயன்றார். ஈற்றிலே அவர் கோபமுடையராகித் தாமணிந்த பூணூலைக் கழித்து வீசிவிட்டுச் சந்நியாசியாயினர். அதுகண்டு கலைமகளும் திருமகளும் வெளிப்பட்டு இனியுனக்கு வேண்டுவதைக் கேட்கக் கடவையென்ன, அவர் கலைமகள் அநுக்கிரகமொன்றே வேண்டுவது, திருமகள் அநுக்கிரகமினி வேண்டுவேனல்லேன், ஆயினும் திருமகளநுக்கிரகம் புக்கணனுக் குண்டாகுக, அவனே நும்மருளை யான் பெறுதற்கநு கூலியாயிருந்த பரமோத்தமன் என்றார். அது கேட்டிருதேவியரும் மகிழ்ந்து மறைந்தனர். இது நிகழ்ந்த சின்னாளில் ஹஸ்தினா புரத்தரசனிறக்க, மந்திரிமார் பட்டத்துயானையை அலங்கரித்த அபிஷேகக்குடத்தை அதன் கையிற்கொடுத்து ஓரரசனைக் கொண்டு வருமாறு பரிசனங்களோடு விடுத்தனர். அது பல நாடு காடுகளைக் கடந்து புக்கணனிருக்குங் காட்டை யடைந்தது. புக்கணன் அவ்வமையந் துயில் செய்வானாயினான். யானை அவனை யடுத்துக் கங்கைநீரை அவன் மேற்சொரிய, அவன் துணுக்குற்றெழுந்து பார்க்கஅவன் கழுத்தில் மாலையைச் சூட்டி வணங்கி அவனைத் தூக்கித் தன்முதுகின் மேலுள்ள தவிசின் மீதிட்டுக் கொண்டு சென்று அரசனாகிற்று. நாட்சில கழிந்தபின்னர் மாதவாசாரியர். புக்கணன் தம்மேற் கொண்ட அன்பை அரசனாயிருக்கு நிலையிலும் சாதிப்பவனோ வென்று நிதானிக்குமாறு அவன்பாற் சென்றனர். அவர் வரவை யொற்றராலுணர்ந்த புக்கணன் பண்டையிலும் மிக்க அன்பும், வணக்கமும், அடக்கமும், நட்பு முடையனாய் நடந் தெதிர்கொண்டு தழுவிக் கொண்டாடி அவற்க்குப் பிரியாநண்பனாய், எக்கருமத்திலும் அவரையுசாவி நல்லரசு புரிந்து வருவானாயினான். ஒருநாள் அவன் அவரைப் பார்த்து நம்பெயர் உலகில் நின்று நிலவும் பொருட்டும் எனக்குப் பின்வருமக்கட் பரம்புக் கெல்லாம் பயன்படுமாறும் நூல்களைச் செய்துலகுக்கு பகரித்தல் கடனாகக் கொள்வீரென்ன அவ்வாறே செய்து மெனக்கூறி அவர் எண்ணிறந்த வியாக்கியானங்களை யெழுதிப் பிரகடனம் பண்ணினர். வேதம், உபநிஷதங்கள் சூதசங்கிதை முதலியனவெல்லாம் இவர் அவதாரஞ் செய்திலரேல் பாஷியங்கள் வியாக்கியானங்கள்காணா. இவர் செய்த பாஷியங்களுக்கும் வியாகும், வியாக்கியானங்களுக்குங் கணக்கிடுதல் எளிதன்று. இவர் செய்த சங்கரவிலாசம் நாற்பதினாயிரஞ் சுலோகமுடையது. வித்தியாரண்ணியர் என்னும் பெயர் தீக்ஷாநாமம்