திருதராஷ்டிரன் மந்திரி. அம்பிகையினது தோழியினிடத்து வியாசருக்குப் பிறந்த புத்திரன். இவன் மாண்டவியர் சாபத்தாற் சூத்திரனாகப் பிறந்த யமன். இவன் மகாதரும சீலன். திருதராஷ்டிரன் பாண்டவர்களை வஞ்சிக்கத் துணிந்த போது அது தகாதென வாதாடினவன். இவன் தருமநெறி சிறிதும் வழுவாதவன். பாண்டவர்களுக்குத் திருதராஷ்டிரனும் அவன் புத்திரரும் சூழ்ந்தவஞ்சனைகளை யெல்லாம் அப்பாண்டவர்களுக்குணர்த்தி அவர்களை அவ்வஞ்சனைக்குத் தப்புவித்தவனும் அரக்கு மாளிகை அமைத்து அதிற்பாண்டவர்களை யிருத்தித் தீக்கொளுவிக் கொல்லத் துரியோதனனெத்தனித்த பொழுது அம்மாளிகையிலே இரசியமாகப் பிலவழியொன் றமைப்பித்து அவ்வழியே புகுந்து பாண்டவர்களை உயிர்பிழைக்கும்படி காத்தவனும் இவ்வுத்தமனே. இவன் யவனபாஷையிலும் வல்லவன். உதிஷ்டிரனும் அவ்யவனபாஷையில் வல்லவன். இவன் திருதராஷ்டிரன் சபையில் நடந்த இரகசியங்களை யெல்லாம் இப்பாஷையினாலேயே உதிஷ்டிரனுக்குப் பிறரறியாவண்ணம் வாய்மொழியாலும் திருமுகமூலமாகவும் உணர்த்திவந்தான்