விச்சி என்பது ஒரு மலைப்பகுதி ஊர் என எண்ண இடம் அளிக்கிறது. ‘விச்சிறல்’ என்றால் ஒருவகைக் கோரைப்புல் எனப்பொருள் படுவதால் அவ்வகைக் கோரை அடர்ந்து வளர்ந்த பகுதியைச் சார்ந்த குடியிருப்புகள் அடங்கிய ஊர் என்னும் கருத்தில் “விச்சி” என்ற ஊர்ப் பெயர் அமைந்ததாகவும் இருக்கலாம். விச்சியை ஆண்ட தலைவன் விச்சிக் கோன் எனப்பெற்றான். கபிலர் பாரி மகளிரை அவனிடம் கொண்டு சென்று பாடியுள்ளார்.
“விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக்கோவே
இவரே, பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடாதாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரிமகளிர்
யானே, பரிசலன் மன்னு மந்தணன், நீயே
வரிசையில் வணக்கும் வாண் மேம்படுநன்
நினக்யொன் கொடுப்பக் கொண்மதி” (புறம். 200: 8 15)