விசயமங்கை

திருவிசயமங்கை என இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர் இது. அருச்சுனன் வழிபட்ட தலம் என்ற காரணமே இதற்குக் கூறப்படினும், வெற்றியைக் குறித்து ஏற்பட்ட ஊர்ப் பெயராக இது இருத்தலே பொருத்தமானது. சம்பந்தர், அப்பர் இக்கோயில் இறையைப் பாடுகின்றனர்.
தொடை டைமலி யிதழியுந் துன்னெருக் கொடு
புடைமலி சடைமுடி யடிகள் பொன்னகர்
படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெள்
விடையலி கொடியணல் விசயமங்கையே (275-4)
எனப்பாடும் தன்மை சம்பந்தரிடம் அமைகிறது.
கொள்ளிடக் கரைக் கோ வந்த புத்தூரில்
வெள்விடைக் கருள் செய் விசயமங்கை
உள்ளிடத்துறை கின்ற வருத்திரன்
கிள்ளிடத் தலையற்ற தயனுக்கே – (185-3)
என்கின்றார் அப்பர். இவர்பாடலில், விசயமங்கையிருந்த இடத்தையும், அது கோயில் பெயராக, இருக்கும் வாய்ப்பு தருவதையும் காண்கின்றோம். கொள்ளிடக் கரையில் உள்ள கோவந்த புத்தூரில் உள்ள விசயமங்கையில் உறைகின்ற இறைவன் என்னும் நிலை, அரசன் வந்த புத்தூர் என்பது அரசியல் தொடர்பு தந்து. அவனால் அமைக்கப்பட்ட கோயிலே விசயமங்கை எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்ற எண்ணம் கருகிறது. மேலும், தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஊர்ப்பெயரும் கோயில் பெயரும் பற்றிக் கூறுகையில், கோவந்த புத்தூரில் உள்ள கோயில் விசயமங்கை எனக் குறிப்பிடுகின்றார். எனவே கோவந்தபுத்தூர் ஊர்ப்பெயர் ;விசயமங்கை கோயில் என்பது தெளிவு பெறுகிறது. இன்று விசயமங்கையே செல்வாக்கு பெற்றுத் திகழ்கின்றது.