மாணிக்கவாசகர் பிறப்பால் பெருமை பெற்ற ஊர். மாணிக்கவாசகர், இதனை
வாதவூரினிற் வந்தினிதருளிப்
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும் (திரு – கீர்த் – 52-53)
என அமைக்கின்றார். சம்பந்தரும் வாதவூரினை, சிவன் கோயில் உள்ள ஊர் எனக் குறிப்பிடுகின்றார்.
மயிண்டீச்சுரம் வாதவூர் வாரணாசி (175-7)
வாயு பூசித்த தலம் ஆகையால் வாதபுரி ஈஸ்வரர்
என்று பெயர் பெற்றிருக்கின்றார் என்பர்.
திருவாதவூர்ச் சிவபாத்தியன்
செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக்கோவை (158)
என்ற நம்பியாண்டார் நம்பியின் கோயில் திருப்பண்ணியர் விருத்தம், வாதவூரில் பிறந்த மணிவாசகர் பற்றிய எண்ணத்தைத் தருகிறது. மதுரை மாநகரத்திற்குக் கிழக்கே பதினைந்து கல் தொலைவில் இருப்பது திருவாதவூர் என்னும் ஒரு சிறிய ஊர். அவ்வூர் திருவாதூர் என்றும் பண்டு வழங்கப்பட்டுள்ளது. வாது என்றால் தருக்கம் என்பது ஒரு பொருள். அக்காலத்தில் அவ்வூரில் பல சமய தத்துவ வாதிகள் இருந்ததாகக் கருதப்படுகிறது என்ற எண்ணம் வாதவூர் பற்றியது. எனவே வாதம் புரிதல் இருந்த தால் வாதவூர் என்ற பெயர் அமைந்தது என்ற எண்ணத்தை இவண் பெறுகின்றோம்.