ஆற்றல் அல்லது வலிமை என்னும் பொருளுடைய வல்லம் என்னும் சொல் வலிமையுடைய கோட்டையைக் குறித்துப் பின்னர் கோட்டை அமைந்த ஊருக்கே பெயராயிற்று போலும். தஞ்சாவூருக்கருகில் வல்லம் என்ற பெயருடன் ஓர் ஊர் உள்ளது. அங்கே அழிந்த அகழிகள் உள்ளன. வல்லத்தில் கோட்டை இருந்தது. அது கள்ளரில் ஒரு வகுப்பாருடைய தலைநகராக விளங்கியிருக்கிறது. வல்லத்தில் அரசு புரிந்த குடியினர் வல்லத் தரசு என்ற பட்டம் பெற்றிருந்தனர். வடஆர்க்காட்டிலுள்ள திருவல்லம் என்னும் ஊர் பாண மன்னர்களுக்குரிய ஒரு கோட்டையாக விளங்கியது.
“கடும்பகட்டு யானைச் சோழர் மருகன்
நெடுங்கதிர் நெல்லின் வல்லம்’” (அகம்.356:12 13)
வல்லார்.
வல்லார் என்ற ஊரில் இருந்த வள்ளல் பண்ணன் என்பவன். வல்லார் கிழான் பண்ணன் எனப் பெற்றான். வலிமையுடையவர் எனப்பொருள்படும் வல்லார் என்னும் சொல் வலிய வீரார்கள் தங்கியிருந்த குடியிருப்புகளடங்கிய ஊருக்குப் பெயராய் அமைந்திருக்கலாம்.
“மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்
கருங்கணெயிற்றி காதல் மகனொடு
கான இரும்பிடிக் கன்று தலைக் கொள்ளும்
பெருங்குறும்புடுத்த வன்புல விருக்கைப்
புலா அலம்பிற் போரருங் கடிமிளை
வலா அரோனே வாய்வாட் பண்ணன்” (புறம்,181:1 69)