குடியிருப்பிடத்தைக் குறித்து வரும் சொல் “வலசு” ஆகும். இவ்வடிவம் அண்மைக் காலத்தில் ஏற்பட்டிருக்கிறது.
கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டப் பகுதிகளில் “வலசு” என்ற வடிவம் வழங்கி வருகின்றது. இப்பகுதி மக்கள் அவரவர் தோட்டங்களில் வீடுகளைக் கட்டிக் கொண்டு தனித்தனியே வாழுமிடங்கள் “வலசு” எனப்படுகின்றன. இப்பழக்கத்தையொட்டி இப்பகுதிகளில் “வலசு” என்பது மிகுதியாக வழங்குகிறது. “வலசு” காலப்போக்கில் ஊராக வளர்ச்சியடையும் பொழுது ஊர்ப்பெயரில் “வலசு” நிலைத்து விடுகின்றது.
“வலசை” என்ற வடிவமும் வழங்கி வருகின்றது. இடம்விட்டு இடம் பெயர்ந்து புதிதாகக் குடியேறும் இடங்களுக்கு “வலசை” என்று பெயரிடும் வழக்கம் 14 ஆம் நூற்றாண்டிற்குப் பின் (தெலுங்கு, கன்னட மக்களின் குடியேற்றத்திற்குப் பின்பு) வந்திருக்கிறது. வேற்றிடங்களுக்குக் குடிபோவதை “வலசை” என்று அகராதி குறிப்பிடுகின்றது.