வரகுணமங்கை

புளிங்குடி கிடந்து வரகுணமங்கை
இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே
என்னையாள்வாய் எனக்கருளி
நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம்போல் கனிவாய்
சிவப்ப நீகாண வாராயே (நாலா -2978)
என, நம்மாழ்வார் ” வரகுணமங்கை என்ற திருமால் கோயில் கொண்ட இடம்பற்றிக் குறிப்பிடுகின்றார். இங்குத் திருமால் இருந்த கோலத்துடன் காட்சி தருகின்றார் என்ற எண்ணம் இப்பாடல் தருகிற ஒன்று. மேலும், இவ்வூர்ப் பெயரை நோக்க வரகுணப்பாண்டியனுடன் தொடர்புடையதாக இருக்குமோ எனத் தோன்றுகிறது. வரகுணப்பாண்டியன், அந்தணர்க்குக் கொடுத்த மங்கலம் என்ற நிலையில் வரகுணமங்கலம், வரகுணமங்கை யாயிற்றோ என எண்ணிப் பார்க்கலாம். பிற சான்றுகள் கிடைப் பின் தெளிவு பிறக்கும்.