இன்று அன்னூர் என வழங்கப்படும் ஊர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. அப்பர் இத்தலத்து இறைவனைப் பரவுகின்றார். மாடமதில்சூழ் வன்னியூரைக் காட்டும் நிலையிலும் (140-1) அயலெலாம் அன்னமேயுமந்தாமரை வயலெலாம் கயல் பாய் வன்னியூர் (140-3) எனக் காட்டும் நிலையிலும், ஊர்ச்செழிப்பு தெரிகிறது. பெயர்க் காரணம் தெரியவில்லை. எனினும், வன்னி என்றதொரு மரம் பற்றிச் சிலப்பதிகாரம் (வன்னிமரமுமடைப் பளியும் சான்றாக-சிலம்பு 21- 5) சுட்டுவதால், இந்த ஊர் வன்னி மரம் காரணமாகப் பெயர் பெற்றிருக்கலாம் எனத்தோன்றுகிறது.