ய ர ழ ஈற்றுப் புணர்ச்சி

நிலைமொழியீற்றில் யகர ரகர ழகர மெய்கள் நிற்ப, அல் வழிக்கண் வன்கணம்வருமாயின் இயல்பும், சிறுபான்மை வல்லினமெய் மிகுதலும் ஆம். வேற்றுமைப்புணர்ச்சிக்கண் வன்கணம் வருமிடத்து வல்லினம் மிகுதலும், வல்லினமாவதுமெல்லினமாவது மிகுந்து விகற்பித்தலும் விதியாம்.எ-டு : வேய் கடிது, வேர் சிறிது, வீழ் தீது (எழுவாய்த் தொடர்) -இயல்பு; மெய்க்கீர்த்தி, கார்ப்பருவம், யாழ்க்கருவி (இருபெயரொட்டுப்பண்புத்தொகை); போய்ச் சேர்ந்தான் (வினையெச்சத் தொடர்) – வலி மிகுதல்.இவை அல்வழிப் புணர்ச்சி.நாய்க்கால், தேர்த்தட்டு, யாழ்ப்பத்தர் – வேற்றுமைப் புணர்ச்சியில் வலி மிகுதல்; வேய் க் குழல் வேய் ங் குழல், ஆர் க் கோடு ஆர் ங் கோடு, பாழ் க் கிணறு பாழ் ங் கிணறு – வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் இனத்தோடுஉறழ்ந்தது.பாழ்க்கிணறு : பாழுட்கிணறு என ஏழன்தொகையாகப் பொருள்படும். பாழாகியகிணறு எனில் பண்புத்தொகையாய் அல்வழி முடிபாம். (நன். 224)