‘யா என் வினாவின் ஐ என் இறுதி’புணருமாறு

‘யா என் வினாவின் ஐ என் இறுதி’ யாவது ‘யாவை’ என்ற பலவின்பால்வினாப்பெயர். இஃது அல்வழிக்கண் நாற்கணம் வரினும் இயல்பாகப்புணரும்.எ-டு : யாவை கடிய, நல்ல, வல்ல, அரியயாவை என்பது நிலைமொழியாக உருபொடு புணருமிடத்து இடையே வற்றுச்சாரியை வரும்; யாவை என்பதன் இறுதி வகரஐகாரம் அடியோடு கெட, யா + வற்று+ ஐ = யாவற்றை – என்றாற்போலப் புணரும்.யா என்ற வினாப்பெயரும் யாவை என்னும் பொருளுடைய-தாய் வற்றுச் சாரியைபெற்று, யா + வற்று + ஐ = யாவற்றை – என்றாற்போல முடியும். எனவே,யாவற்றை என்ற சொல்லின் நிலைமொழி யாவை என்பதா, யா என்பதா – என அறுதியாகக் கூறல் இயலாது. (‘அதனை’ என்பதன் நிலைமொழி போல என்க.)ஆயின் யாவை என்பது பொருட்புணர்ச்சிக்கண் நிலை மொழியாக வருதலில்லை.யா என்பதுதான் நிலைமொழியாக வரும். யாவற்றுக்கோடு – என்பதன்கண்நிலைமொழி யா – என்பதேயன்றி யாவை என்பது அன்று என்க. (தொ. எ. 175, 178நச்.)