தைத்திரிய பிராதிசாக்கியத்தில், நடுநாவின் விளிம்பு அண்ணத்தை நன்குபொருந்துதலால் யகரம்பிறக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மிடற்றெழுவளியிசை, அண்ணத்தை நாச்சேர்ந்த இடத்து, அவ்வண்ணத்தை அணைந்து செறியயகரம் பிறக்கும் என்பர் இள. மிடற்றில் எழும் வளி அண்ணத்தை நாப்பொருந்துவதால் உரலாணி இட்டாற் போல் செறிய யகரம் பிறக்கும் என்பர்நச்.அடிநா அடியண்ணத்தை உற, யத் தோன்றும் என்று நன்னூலார் கூறுவது,யகரம் கண்ட்யம் ஆகிவிடும். தாலவ்யம் ஆகிய யகரத்தை இங்ஙனம் கூறுவதுபொருந்தாது. இதனை இலக்கணவிளக்க நூலாரும் மறுத்துள்ளார். நன்னூல்கூறும் முறையில் பிறக்கும் ஒலி ஒருவகையான கனைப்புப் போறலின், அங்ஙனம்தோன்றுவதனை யகரஎழுத்தாகக் கொள்ளல் கூடாது. (ஈண்டு யகரம் என்றது யகரமெய்யினை.) (எ. ஆ. பக். 83,84)