தொல்காப்பிய எழுத்துப்படலம் நான்காம் இயலாகிய புணரியலின் முதல்நான்கு நுற்பாக்களும் மொழிமரபின் ஒழிபாக அமைந்துள்ளன.1. மொழிக்கு முதலில் வரும் உயிர் – உயிர்மெய் – குற்றியலுகரம் -என்ற மூன்றும், மொழிக்கு இறுதியில் வரும் உயிர் – மெய் – உயிர்மெய்-குற்றியலுகரம் – என்ற நான்கும் மெய் – உயிர் – என்னும் இரண்டனுள்அடங்கும் என்பதும், 2. ஈற்றில் வரும் மெய் புள்ளி பெற்று நிற்கும்என்பதும், 3. குற்றியலுகரமும் அவ்வாறு புள்ளி பெற்று நிற்கும்என்பதும், 4. உயிர்மெய் ஈறு உயிரீற்றுள் அடங்கும் என்பதும் -மொழிமரபின் ஒழிபாய்ப் புணர்ச்சிக்கு உபகாரப்படுதலின் புணரியல்தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை ஒருமொழியிலக்கணம் கூறலின்,புணரியல் பற்றியன அல்ல;மொழிமரபின் ஒழிபே. (தொ.எ.104-107 இள .உரை)