மெய்மயக்கம் ஒருமொழி இருமொழிக்கண்கோடல்

இன்ன மெய்க்கு இன்ன மெய் நட்பெழுத்து, இன்னமெய் பகையெழுத்துஎன்பதனை உட்கொண்டே மெய்மயக்கமும் புணர்ச்சிவிதிகளும் அமைந்தன.லகரளகரங்களின் முன் யகரம் மயங்கும் என்பதனுக்கு எடுத்துக் காட்டுத்தரும்போது, கொல்யானை, வெள்யாறு- என்ற வினைத்தொகை பண்புத்தொகைகளை ஒருமொழியாகக் கொண்டு நச். குறிப்பிட்டு, இத்தொகையல்லாத் தனி மொழிக்கண்சொற்கள் ஆசிரியர்காலத்து இருந்து பின்னர் இறந்தனபோலும் என்றுகருதுகிறார்.இங்ஙனமே ஞ்ந் ம் வ் – என்னும் புள்ளி முன்னர் யகரம் வந்துமயங்குதற்கு உரிஞ் யாது, பொருந் யாது, திரும் யாது, தெவ் யாது – என்றுஇருமொழிகளைப் புணர்த்து எடுத்துக்காட்டுத் தருதலை விரும்பாது,உதாரணங்கள் இறந்தன என்றார். நூல் மரபு ஒருமொழிக்குள் அமையும்செய்திகளைச் சொல்லவே அமையும் ஆதலின், ஒரு சொல்லிலேயே மெய் மயக்கம்வரும் செய்தியைக் காட்ட வேண்டும் என்பது நச். கருத்து. இரு மொழிக்கண்வரும் மெய்மயக்கம் ‘புணர்ச்சி’ என்ற வேறு பெயரில் அமைதலின், அதனைமெய்மயக்கத்துள் அடக்குதல் கூடாது என்பது அவர் கருத்து. (தொ. எ. 24,27 நச். உரை)மெய்மயக்கம் ஒருமொழிக்கும் புணர்மொழிக்கும் பொது வாதலின்,மேற்கூறிய புணர்மொழிச் செய்கையெல்லாம் தலையாய அறிவினோரை நோக்கஒருவாற்றான் கூறியவா றாயிற்று என்பர் இளம்பூரணர். (23 இள. உரை)