மெய் பதினெட்டனுள்ளும் க் ச் த் ப் – என்னும் நான்கும் ஒழித்துநின்ற பதினாலு மெய்யும் ஒன்றன்பின் ஒன்று மாறி வந்து ஒன்றுவது(வேற்றுநிலை) மெய்மயக்கமாம். ரகர ழகரம் ஒழித்து நின்ற பதினாறுமெய்யும் தம் முன்னர்த் தாம் வந்து ஒன்றுவது உடனிலை மயக்கமாம்.இச்சொல்லப்பட்ட இரு கூற்று முப்பது மயக்கும் மொழியிடையிலேயாம்.உயிர்மெய் மயக்கம் இன்னதன் பின்னர் இன்னதாம் என்ற வரையறை இல்லை. (நன்.109 மயிலை.)