முற்றும் முற்றுமடக்கு(இடையிட்டது)

முதல் இடைகடை யென ஒவ்வோரடியிலும் மூவிடத்தும் சொற்கள் மடக்கிவருவது.எ-டு : ‘ களைகளைய முளரிவரு கடை கடை ய மகளிர்கதிர் மணியுமணியும் வளைவளை யக் கரதலமு மடைமடைய மதுமலரு மலையமலைய இளையிளை யர் கிளைவிரவி யரியரி யின் மிசைகுவளை மலருமலருங் கிளைகிளை கொள் இசை அளிகள் மகிழ்மகிழ் செய் கெழுதகைய மருதமருதம் .’முளரிக்களை களை(ய) அருகுஅடை கடைய மகளிர் கதிர் மணியும், அணியும்வளை வளைய கரதலமும், அடை அம்மடைய மது மலரும், மலைய மலைய, இளைய இளையர்கிளைவிரவி அரிஅரியின்மிசை குவளைமலரும் அலரும்; கிளைகிளைகொள் இசைஅளிகள் மகிழ் கெழுதகைய மருத (மரங்களையுடைய) மருதம் மகிழ்செய்யும் -என்று பிரித்துப் பொருள் கொள்ளப்படும்.தாமரையாகிய களைகளைக் களைய அவற்றின் அருகே அடையும் உழத்தியர் அணிந்தஒளி வீசும் மணிகளும், அணிந்திருந்த வளைகளால் வளைக்கப்பட்ட கைகளும்,அடைக்கப் பட்ட மடையிலுள்ள தேனை உடைய பூக்களும், ஒன்றோ டொன்று நலன்அழிப்பதற்கு மாறுபட, மிக்க இளைஞர் குழாம் கூடி அரிகின்றநெற்கதிர்கள்மீது குவளைப் பூக்களும் மலரும். கிளை என்னும் நரம்பின்ஒலி ஏனை ஒலியினங்களொடு தொடர்பு கொள்ளும் ஓசை போலப் பாடும் வண்டுகள்தேனையுண்டு மகிழுமாறு விளக்கமுடைய மருதமரங்களையுடைய மருத நிலம்மகிழ்ச்சியைத் தரும் – என்ற பொருளமைந்த இப்பாடற்கண், அடிதோறும் முதல்இடை கடை என மூன்றிடங்களிலும் வெவ்வேறு சொற்கள் மடக்கி வந்தன. இடையேபிற சொற்கள் இடையிடுதலின் இதனை ‘இடையிட்ட முற்று மடக்கு’ என்றும்கூறுப. (தண்டி. 95)