ஆய்தம் என்னும் முப்பாற் புள்ளி. ‘புள்ளி’ ஈண்டு ஒலியைக்குறிக்கும். இவ்வெழுத்து நா-அண்ணம்-முதலாய உறுப்புற்று அமையப்பிறவாமல், வாயிதழ் அங்காப்ப மிடற்றிசையான் அரைமாத்திரை யளவொடுபிறப்பது. ஆதலின் அது தான் சார்ந்துவரும் அ இ உ என்னும்குற்றுயிரோசைகளின் சாயலைப் பெற்றொலிக்கும். (எகர ஒகரங்கள் இகர உகரஒலியுள் அடங்கும்.) ஆய்தம் உயிர் ஏறலின்றி யாண்டும் ஒலிப்போடு வரும்பண்பினது என்பது விளங்க, ஒலிக்குறிப் புடையதாகிய இதனை விதந்து ‘ஆய்தம்என்ற முப்பாற் புள்ளியும்’ என்றார் ஆசிரியர். ‘முப்பாற்புள்ளி’ எனவே,அதன் வரிவடிவும் முக்கோணமாக அமைத்துக் கொள்ளப்படும். ஆய்தம் யாண்டும்ஒலிப்பொடு நிற்றலின், இதனை உயிர் ஊர்வதில்லை. அரை மாத்திரை யளவிற்றுஆதலின் இது மெய்யினை ஊர்வதில்லை. இங்ஙனம் உயிருக்கும் ஒற்றுக்கும்இடைப்பட்டு நிற்றலின், உயிர் போலவும் ஒற்றுப் போலவும் ஆய்தம் முறையேஅலகு பெற்றும் பெறாதும் வரும். (தொ. எ. 2 ச. பால.)