முனைப்பாடி

முனைப்பாடி நாடு என்பதே, முனைப்பாடி என்பது, பல ஊர்களைத் தன்னகத்தே கொண்டு திகழ்ந்ததொரு நி லையை இயம்ப வல்லது. அப்பர் பிறந்த திருவாமூர் இந்நாட்டில் உள்ள தொரு ஊரே. திரு ஆமூர் இன்று தென் ஆர்க்காடு மாவட்டம் சார்ந்து அமையும் நிலையில், முனைப்பாடி நாடும் தென்னார்க்காடு மாவட்டப் பகுதியாக இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. மேலும் சுந்தரர் பிறந்த திருநாவலூரும் இந்நாட்டைச் சேர்ந்தது என்பது தெரிகிறது. இதனைப் பற்றி இயம்பும் சேக்கிழார்,
தொன்மை முறைவரு மண்ணின் துகளன்றித் துகளில்லா
நன்மை நிலை நடுக்கத்து நலஞ்சிறந்த குடிமல்கிச்
சென்னி மதிபுனைய வளர் மணிமாடச் செழும்பதிகள்
மன்னி நிறைந்துளது திருமுனைப்பாடி வளநாடு (27-2-1-4)
எனவும்,
கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும்
அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் முடிமேல் வைத்த தமக்கு நாடு
மங்கையர் வதன சீதமதியிரு மருங்கும் ஓடிச்
செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு
என்றும் பாடுகின்றார். இதனைப் பற்றிய பிற பாடல்களினின் றும் கூட, இதன் செழிப்புதான் தெரிகிறதே தவிர, பெயர்க் காரணம் அறியக் கூடவில்லை. எனினும் முனை, பாடி என்ற சொற்கள் போர்க்களத்தை நினைவூட்டுகின்றன.