முதுவெள்ளிலை என்னும் ஊர் ஆரவாரம் மிக்கது என்றும், புதுவருவாயினையுடையது என்றும் சங்க இலக்கியம் கூறுகிறது. வெள்ளிலை என்னும் சொல் வெற்றிலையைக் குறிப்பதோடு, வெள்ளி மடந்தை என்ற நீண்ட செடிவகை ஒன்றினையும் குறிக்கும் சொல்லாக உள்ளது. அவ்வகைச் செடிகள் அடர்ந்த பகுதியில் அமைந்த குடியிருப்புகளைக் கொண்ட ஊர் அப்பெயர் பெற்றிருக்கலாம். முது என்பது முன் ஒட்டாக இணைந்து முது வெள்ளிலை என ஊர்ப்பெயர் அமைந்தது போலும். இது குறுநில மன்னரின் குடியிருப்பு.
“நிரைதிமிர் வேட்டுவர் சுரை சேர் கம்பலை,
இருங்கழிச் செறுவின் வெள் உப்புப் பகர்நரொடு,
ஒலி ஓவாக் கலியாணர்
முது வெள்ளிலை மீக்கூறும்” (பத்துப். மதுரைக்: 116 119)