முதிரம் என்பது மலையின் பெயர் அம்மலையும் அதைச் சேர்ந்த நாடும் குமணனுக்குரியனவாய் இருந்தன. குமணன் வாழ்ந்த ஊர் குமணம் என்று பெயர் பெற்றுப் பிற்காலத்தில் கொழுமம் எனத் திரிந்தது என்று அறிந்தோர் கூறுவர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த உடுமலைப்பேட்டை வட்டத்தில் கொழுமம் ஒரு சிற்றூராக இன்று காணப்பெறுகிறது. கொழுமத்திற்குத் தெற்கே காதவழி தூரத்திற் காணப்படும் குதிரை மலையே பழைய முதிரமலை என்பர். முதுகிற் சேண மிட்டு நிற்கும் குதிரை போன்று இம்மலை காட்சி அளித்தலால் பிற்காலத்தார் அதனைக் குதிரை மலை என அழைத்தார் போலும் என்பர்.
“முட்புற முது கனி பெற்ற கடுவன்
துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,
அதிராயாணர், முதிரத்துக் கிழவ/
இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க்குமண!” (புறம். 158:23 26)
“குய் கொள் கொழுந்துவை நெய்யுடை. அடிசில்,
மதி சேர் நாள் மீன் போல, நவின்ற
சிறுபொன் நன்கலம் சுற்றஇரீஇ,
“கேடு இன்றாக, பாடுநர் கடும்பு” என,
அரிதுபெறு பொலங் கலம் எளிதினின் வீசி,
நட்டோர் நட்ட நல்இசைக்குமணன்
மட்டார் மறுகின் முதிரத்தோனே” (௸. 160:7 13)
“இன்னோர்க்கு என்னாது. என்னொடும் சூழாது,
வல்லாங்கு வாழ்தும் என்னாது; நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே,
பழம் தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்து வேல் குமணன் நல்கிய வளனே”. (௸. 163:5 9)