முதலடியொடு மூன்றாமடி ஆதி மடக்கு

எ-டு : “அடையார் அடையார் அரண்அழித்தற்(கு) இன்னல்இடையாடு நெஞ்சமே ஏழை – யுடை ஏர்மயிலா மயிலா மதர்நெடுங்கண் மாற்றம்குயிலாமென் றெண்ணல் குழைந்து.”அடையார் அடை ஆர் அரண்; ஏர் மயிலாம், அயிலாம் கண் என்று பிரித்துப்பொருள் செய்க.“பகைவர் அடையும் அரிய அரணை அழித்தற்கு முயல்வார் படும் இன்னல்போன்ற இன்னலுற்றுத் தடுமாறும் மனமே! நீ இவ்வேழை (-தலைவி) யினுடைய ஏர்,மயில் போன்றது; மதர் நெடுங்கண், அயில் (-வேல்) போன்றன; மாற்றம்(-சொல்), குயில் போன்றது என்று உருகி நினைத்தலைத் தவிர்” – எனத்தலைவியது அருமை நினைந்து தலைவன் நெஞ்சிற்குக் கூறிய இப்பாடற்கண்,முதலடியும் மூன்றாமடியும் அடிமுத லில் மடக்கியவாறு. (தண்டி. 95 உரை.)