புறநானுரற்றில் 181, 265 ஆகிய பாடல்களைப் பாடிய று கருந்தும்பியார் என்ற சங்ககாலப் புலவர் முகையலூரைச் சார்ந்தவர். இவ்வூர் சோணாட்டின் கண்ணது எனத் தெரிகிறது,
முசிறி. முசிறி என்பது மேலைக்கடற்கரையில் அமைந்த கடற்கரை நகரம். சேரர்களுக்குரியது. உளர் என்றும் பட்டினம் என்றும் அமையும் கடற்கரை நகரங்களின் அமைப்பு மரபையொட்டி அமைந்த கொடுங் கோளூரும், மகோதைப் பட்டினமுமாகிய பகுதியாகிய கடற்கரை நகரமே முசிறியாகும் எனத் தெரிகிறது. குட்டுவனுக்குரிய இந்த முசிறி என்னும் துறைமுகப் பட்டின த்திலிருந்துதான் பண்டைக்காலத்தில் மிளகு முதலியன வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாயின. வெளிநாட்டு யாத்திரிகர்கள் தாம் எழுதிய குறிப்புகளில் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். வால்மீகி இராமாயணத்திலும் இவ்வூர் உள்ளது, (இங்குத்தான் மகோதை என்னும் கொடுங்கோளூர் உள்ள தென்பர்) முசுறுப்புல் என்பது ஒருவகைப்புல், பட்டினத்தை அடுத்து இந்த வகைப்புல் மிக்கு விளையும் இயல் பிருந்து, அதனையொட்டி முசிறி எனப்பெயர் பெற்றதோ என எண்ண இடமளிக்கிறது. இந்த ஊர்ப்பெயர் ‘முசுறி’ (புறம்: 343) என்றும் வழங்கப்பட்டுள்ளமை ஒப்பு நோக்கத்தக்கது
“சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர்தந்த வினைமாணன் கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி”… (அகம். 149:8 11)
“மீனொடுத்து நெற்குவைஇ
மிசையம்பியின் மனைமறுக்குந்து
மனைக்குவைஇய கறி மூடையால்
கலிச்சும்மைய கரை கலக்குறுந்து;
கலம்தந்த பொற்பரிசம்
கழித்தோணியிற் கரைசேர்க்குந்து
மலைத்தாரமுங் கடற்றாரமும்
தலைப்பெய்து, வருநர்க்கீயும்
பூனலம் கள்ளின் பொலந்தார்க்குட்டுவன்
மூழங்குகடல் முழவின் முசிறியன்ன“ (புறம். 343: 1 10)