மீனாக்ஷிசுந்தரம்பிள்ளை

இவரும் ஆறுமுகநாவலரும் ஒரே காலத்தவர்கள். இவர் மகாவித்துவான் என்னும் பட்டாபிதானம் பூண்டவர். இவர் பாடும் வன்னையிலே கம்பரிலுஞ் சிறந்தவரென்னலாந்தகுதி வாய்ந்தவர். இவர் பாடிய பாடல்களுக்குக் கணக்கில்லை. இவர் ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்னும் நால்வகையும் பாடவல்லவர். இவர் நாகைக் காரோணபுராணம், மயூரபுரணம், குடந்தைப்புராணமுதலிய ஐம்பது நூல் பாடினார். இவர் திரிசிபுரத்திலே பிறந்து திருவாவடுதுறை மடாலயத்திலே கலைபயின்று அம்மடத்து ஆதீனவித்துவானாகி அநேக மாணாக்கரைச் சேர்த்துத் தமிழ்க்கலை பயிற்றி அவர் மூலமாகத் தென்னா டெங்கும் தமிழ்பயிர் வளர்த்தவர்