மாற்பேறு

திருமால்பூர் என்று, இன்று வட ஆர்க்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது இவ்வூர். பாலியாற்றின் கரையில் உள்ள இதன் அமைப்பை,
திரையார் பாலியின் றென் கரை மாற்பேற்
றரையானே யருணல்கிடே (55-6)
என ஞானசம்பந்தரும்.
செப்பரிய புகழ்பாலித் திருந்தியின் தென்கரை போய்
மைப்பொலியும் கண்டர் திருமாற்பேறு மகிழ்ந்து இறைஞ்சி (34-1002)
என சேக்கிழாரும் தருகின்றனர், இப்பெயரைக் காண, திருமாலுடன் தொடர்புடையதாக அமைகிறது. ஆயின், சிவன் கோயில் சிறப்புடன் திசழ்கிறது. இதனை நோக்க, சில எண்ணங்கள் தென்படுகின்றன. இத்தலத்துக்கு அருகில் கோவிந்தவாடி அகரம் என்னும் ஊர் உள்ளது. என்பதும், திருமால் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்து நாடோறும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சித்துப் பேறு பெற்ற தலம் இது என்பதும் அறிஞரின் கருத்தாகக் காண்கின்றோம். இதனை நோக்க, கோவிந்த வாடி என்ற இடத்தில் முலில் விஷ்ணு கோயில் அமைந்திருக்கலாம். பின்னர் சைவம் ஓங்க, அங்கு ஒரு பகுதியில் அமைந்த சிவன் கோயில் செல்வாக்குடன், திருமாலைவிட பெரியவன் என்ற எண்ணமும் மக்களிடம் வலுப்பெற. திருமால் வணங்கி பேறு பெற்றதாகக் கதை கூறி, இடத்திற்கும் திருமாற்பேறு எனப் பெயரைச் சுட்டத் தொடங்கி இருக்கலாமோ எனத் தோன்றுகிறது. வடமொழியாகவும் இப்பெயர் ஹரிச்சக்கரபுரம் எனப்படுகிறது மருவுகங்கை வாழ் சடையவர் மகிழ்ந்த மாற்பேறு, என்கின்றார் சேக்கிழார் (25-31-3-4). மால்பேறு இன்று மால் ஊர்’ என்று கருதப்பட்டு, மக்கள் வழக்கில் மால்பூர் ஆயிற்று எனத் தோன்றுகிறது.