மாறன்பாடி

சேக்கிழார் திருஞானசம்பந்தர் வரலாற்றில் இவ்வூர்ப் பெயரினைக் குறிப்பிடுகின்றார். பெண்ணாகடத்திலிருந்து அரத்துறைக்குச் செல்லும் போது இடையில் தங்கியத் தலமாக மாறன்பாடிச் சுட்டப்படுகிறது. இன்று பெண்ணாகடம், நெல்வாயில் என்பன தென் ஆர்க்காடு மாவட்டம் சார்ந்து அமைகின்றன என்பதைக் காணும்போது இவற்றிற்கிடையே அமைந்த மாறன் பாடியும் இன்று தென்ஆர்க்காடு மாவட்டத்தில் தான் இருக்க வேண்டும் என் பதில் ஐயமில்லை. மாறன்பாடி என்ற பெயரில் மாறன் – பாண்டியன் என்ற பொருளில் அல்லது சடசோபன் என்ற பொருளில் அமைந்திருக்கலாம். இதனைப் பற்றி பிற விளக்கம் பெரிய புராணத்தில் இன்மையால், இது சிவன் கோயில் இல்லாத ஊராகவோ அல்லது, திருமால் கோயில் தலமாகவோ இருக்க வாய்ப்பு அமைகிறது. மா நன் என்று சுட்டும் தன்மையும், இதன் இருப்பிடமும் திருமாலுக்கே முதலிடம் கொடுக்கலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.