மாந்துறை

திருமாந்துறை என்று சுட்டப்படும் ஊர், இன்று திருச்சி மாவட்டத்தில் அமைகிறது. இது காவிரியின் வடகரையில் உள்ளது என்பது ஞானசம்பந்தர் பாடலாலேயே தெளிவாகத் தெரிகிறது. தலமரம் மாமரம் எனத் தெரிகிறது. மாமரங்கள் நிறைந்த பகுதியாக, காவிரியின் துறையாக அமைந்தமை இப் பெயர்க்குரிய காரணம் ஆகும். வடகரை மாந்துறையைச் சம்பந்தர் பாட அறிகின்ற நிலையில், தென்கரையும் மாந்துறை என்றே அழைக்கப்பட்டதைக் கேள்விப்படுகிறோம். எனவே ஆற்றுக்கு வருகரைகளிலும் மாந்தோப்பு காணப்பட்டது என்பதும், எனவே இரண்டும் தனித்தனியாகக் குறிக்கப் பெறவேண்டிய நிலையில் வடகரை. தென்கரை எனக் குறிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் உணர இயலுகின்றது. வடமொழியில் ஆம்ர வனம் என்று மொழி பெயர்க்கப்பட்டு, இவ்வூர் அழைக்கப் பெறுகிறது.
இலவஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னையிள மருதிலவங்கம்
கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைகண்டன் (246-4)
இதனைப் போன்று பலவாறு ஞானசம்பந்தர். இத்துறையின் வளம் பற்றி உரைக்கின்றார். முத்தொள்ளாயிரம் மாந்தை’ எனச் சுட்டும் ஊர் இதுவாக இருக்கலாம் (118, 122, 128). மரூஉப்பெயர் நிலையில் இதனைக் கொள்ளலாம்.